விடைத்தாள் திருத்துவதில் தேவை: வேகமா? நிதானமா? - ராக குமார் - Kalviseithi Official - No:1 Education Website in Tamil Nadu

Latest

Tuesday, April 7, 2026

விடைத்தாள் திருத்துவதில் தேவை: வேகமா? நிதானமா? - ராக குமார்



*விடைத்தாள் திருத்துவதில் தேவை: வேகமா? நிதானமா?*

*- ராக குமார்-* Paper Correction: What Is Needed—Speed ​​or Deliberation? — Raga Kumar

"மறு மதிப்பீட்டில் மதிப்பெண் வேறுபாடு அதிகம் உள்ள சுமார் 1000 ஆசிரியர்களின் ஓராண்டுக்கான ஊதிய உயர்வு ரத்து செய்ய வாய்ப்பு" என்று கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன் பத்திரிக்கையில் செய்தி வெளியானது. இதில் 1000 என்ற எண்ணிக்கைதான் அதிர்ச்சியூட்டுவதாக இருந்தது.

ஆசிரியர் சங்கங்களின் கோரிக்கைகள் எதுவாயினும் அது உடனே நிறைவேற்றப்படுவதில்லை.. ஒவ்வொரு கோரிக்கையும் நிறைவேறுவதற்கு சில 5,10 ஆண்டுகளைக் கடந்து விடுகிறது..

திருத்துவதற்கு மிகவும் சிரமமாக இருக்கிறது, மதிப்பெண்ணும் அதிகம் இருக்கிறது... எனவே விடைத்தாள்களின் எண்ணிக்கை குறைக்கப்பட வேண்டும் என்ற கோரிக்கையும் அப்படித்தான் பல ஆண்டுகளைக் கடந்த பிறகு நிறைவேறியது..

விடைத்தாள்களின் எண்ணிக்கை குறைந்த பிறகு, பாடத்திட்ட மாற்றம் காரணமாக மதிப்பெண்ணும் குறைந்து விட்டதால் இப்பொழுது திருத்துவதற்கு எளிமையாக இருக்கிறது.

சீனியர்கள் சொல்வது போல், "அப்பொழுதெல்லாம் லைட் போட்டு இரவு நேரத்திலும் திருத்தினோம்" என்ற நிலைமை இப்போது இல்லை.

ஆனால் இப்பொழுது மிக வேகவேகமாக திருத்தி, சீக்கிரமே வீட்டிற்கு சென்று விட வேண்டும் என்ற மனநிலையால் தவறுகள் அதிகரிப்பதோடு மட்டுமல்லாமல், சீக்கிரமே திருத்தி விடுகிறோம் என்பதால் மீண்டும் விடைத்தாள்களின் எண்ணிக்கையை அதிகரிக்க வாய்ப்பு இருக்கிறது.

இன்னும் ஓரிரு ஆண்டுகளில் பாடத்திட்டம் மாறும்பொழுது பழையபடி மதிப்பெண்களும் கூட அதிகரிக்கப்படலாம் . ஒருவேளை இப்படி மதிப்பெண்ணும் அதிகரிக்கப்பட்டு, விடைத்தாள்களின் எண்ணிக்கையும் அதிகரிக்கப்பட்டால், அப்பொழுது மறுபடியும் விடைத்தாள்களின் எண்ணிக்கையை குறைக்க வேண்டும் என்று கோரிக்கை வைத்து போராட வேண்டிய சூழ்நிலை மீண்டும் ஏற்படலாம்.🙄

பொறுமையாக நிதானமாக அவசரம் இல்லாமல் விடைத்தாள் திருத்தும் பொழுது மேற்கூறிய சூழ்நிலைகள் எதுவும் ஏற்படாது💜

ஏற்கனவே போராடி பெற்ற எத்தனையோ உரிமைகளை இழந்து கொண்டிருக்கிறோம். அந்த வரிசையில் விடைத்தாள்களின் எண்ணிக்கை அதிகரிப்பதற்கும் நாமே காரணமாகி விடக்கூடாது.

விடைத்தாள் திருத்தம் என்பது மிகவும் கவனமுடன் செய்ய வேண்டிய பணியாகும். அதில் வேகமாக, அவசரமாக திருத்தும் பொழுது சில தவறுகளுக்கு வழி வகுக்கிறது.

AE செய்யும் தவறுகளை CE,SO கண்டறிந்து சரி செய்து விடுவார்கள். ஆனால் சில AE'S அதற்கும் வாய்ப்பு கொடுப்பதில்லை.

அனைத்து விடைத்தாள்களையும் திருத்திய பிறகு, சார் இன்னும் ரெண்டு பேப்பர் வரணும், ஒரு பேப்பர் மட்டும் வரணும் என்று அவசரப்படுத்தும் பொழுது, CE, SO அந்த ஒன்றிரண்டு விடைத்தாள்களை அவசரமாக சரி பார்க்கின்றார்கள். எனவே AE செய்த தவறை அவர்களாலும் கவனிக்க முடியாமல் போகிறது.

விளைவு மறு மதிப்பீட்டில் மதிப்பெண் வேறுபாடு தோன்றினால் CE, SO, AE மூவருக்குமே தண்டனை கிடைக்கிறது..

கடந்த இரண்டு ஆண்டுகளில் மட்டும் ஆயிரம் ஆசிரியர்களுக்கு மேல் தண்டனை பெற்றுள்ளார்கள் என்பதுதான் கவலைக்குரிய செய்தி... அதில் பல ஆசிரியர்களுக்கு ஆண்டு ஊதிய உயர்வு ரத்து செய்யப்பட்டிருக்கிறது.

ஆண்டு ஊதிய உயர்வானது அடிப்படை சம்பளத்துடன் சேர்ந்து கணக்கிடப்படும்.அதனால்தான் அதை வளர்ஊதியம் என்பார்கள்.. இன்னும் நீண்ட காலம் சர்வீஸ் இருக்கும் ஒரு ஆசிரியருக்கு இது மீட்டெடுக்க முடியாத மிகப்பெரிய ஊதிய இழப்பாகும். 150, 200 மதிப்பெண்களுக்கு திருத்தும் பொழுது கூட, இவ்வளவு தவறுகள் நடைபெறவில்லை. இப்பொழுது மதிப்பெண்ணும் குறைந்திருக்கிறது... விடைத்தாள்களின் எண்ணிக்கையும் குறைந்திருக்கிறது.... இருந்த போதும் தவறுகள் அதிகம் நடப்பதற்கு முக்கியமான காரணம் அவசரம் 🏃

அவசரம்➡️ கவனக்குறைவு➡️ தவறுகள்

வழக்கமாக பள்ளி முடியும் நேரம் மாலை 4:10. எனவே நான்கு மணிக்கு மேல் முகாமை விட்டு கிளம்புவோம் என்ற மனநிலையை ஏற்படுத்திக் கொண்டாலே, இது போன்ற அவசரமும் இருக்காது, தவறுகளும் நடக்காது👍

விடைத்தாள் திருத்தத்தின் போது செய்யும் தவறுகள் ஆசிரியர்களுக்கு ஊதிய இழப்பு போன்ற பாதிப்புகளை ஏற்படுத்துகிறது என்றால், மாணவர்களுக்கோ உயர்கல்விக்கான வாய்ப்பையே பறித்து விடுகிறது..

தெளிவான மாணவர்கள் மறு மதிப்பீட்டிற்கு விண்ணப்பித்து மீண்டும் சரியான மதிப்பெண்ணை பெற்று விடுகிறார்கள்.. ஆனால் ஒரு சில மாணவர்கள் தவறான முடிவு எடுத்து விட்டால்? அது ஈடு செய்ய முடியாத பேரிழப்பாகும்..

அறிவார்ந்த ஆசிரிய சமூகமே!!! விடைத்தாள் திருத்தும் பணியானது மாணவர்களின் உயர்கல்வியோடும், அவர்களின் வாழ்க்கையோடும் நேரடியாக தொடர்புடையதால்

*விடைத்தாள் திருத்தும் போது*

*வேண்டாமே வேகம்❌*

*வேண்டுமே நிதானம்✅*

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.