தீபாவளி கொண்டாடுவது எப்படி? - தீபாவளி ரகசியம் - முழு விவரம் How to celebrate Diwali? - Full details - Kalviseithi Official - No:1 Education Website in Tamil Nadu

Latest

Sunday, October 19, 2025

தீபாவளி கொண்டாடுவது எப்படி? - தீபாவளி ரகசியம் - முழு விவரம் How to celebrate Diwali? - Full details



தீபாவளி கொண்டாடுவது எப்படி? - முழு விவரம் How to celebrate Diwali? - Full details

தீபாவளியை கொண்டாடுவது எப்படி?

இறைவன் எங்கும் எதிலும் இருப்பவன் என்ற தத்துவத்தை முதலில் உணர்ந்தவர்கள், ஞானிகளோ.. பெரும் முனிவர்களோ அல்ல.. பகவான் மேல் எளிமையான பக்தி கொண்டிருந்த கோபிகைகளும், கோபாலர்களும் தான். எனவே தான் ஒவ்வொரு கோபிகைக்கும் ஒவ்வொரு கண்ணன் தெரிந்தான். பார்க்கும் பொருள் எல்லாவற்றிலும் இருப்பவன் அவனே என்ற தத்துவம். காணாமல் போன கோபாலர்களுக்காக அவர்கள் வடிவில் ஒவ்வொரு வீட்டிற்கும் கிருஷ்ணனே சென்றான். இது, எல்லாம் அவன் வடிவமே என்ற அரும் பொருள். இந்த இரண்டும் அவர்களுக்கு அல்லவா கிடைத்தது. அதனால்தான் சுகபிரம்ம ரிஷி, பாகவதத்தில் வரும் கோபிகைகளின் கீதத்தினை மிகமிக உயர்ந்தது என்கிறார். அதை பரீட்ஷத் மகாராஜாவுக்கு உபதேசமும் செய்தார். மகரிஷிகளும், மகான்களும் போற்றியதும்; மகத்தான பலனைத் தரக்கூடியதுமான அந்த கோபிகா கீதம், எளிய தமிழ் விளக்கத்துடன் தரப்பட்டுள்ளது. கங்காதீரத்தில் சுகபிரம்ம ரிஷி உபதேசித்த இந்த கோபிகா கீதத்தை, தீபாவளிமுதல் படிக்கத் தொடங்கினால், கிருஷ்ண பகவான் அனைத்து மங்களங்களையும் அள்ளித் தருவார் என்பது உறுதி !

கங்கா ஸ்நான தத்துவம்

தீபாவளியன்று புத்தாடை, பட்டாசு, பலகாரங்கள் எவ்வளவு முக்கியமோ அவ்வளவு முக்கியம் கங்கா ஸ்நானம். எண்ணெய் தேய்த்து குளிப்பதற்கு கங்கா ஸ்நானம் என்ற பெயர் எப்படி வந்தது தெரியுமா? அதிகாலையில் எழுந்து எண்ணெய் தேய்த்து தலைமுழுகினால் நம் பாவம் எல்லாம் போய்விடும் என்பது நம்பிக்கை.

கிருஷ்ணன் நரகாசுரனை அழித்த நாளே தீப ஒளி திருநாளாம் தீபாவளி திருநாள் என்று பெயர் பெற்றது. அன்று சிவபெருமான் உலகிலுள்ள நீர்நிலை அனைத்திற்குமே கங்கையின் புனிதத்தை வழங்குகிறார் என்பது ஐதீகம். இந்த ஐதீகத்தின்படி அன்று நம் வீட்டில் உள்ள கிணறு, குழாய் ஆகியவற்றில் வரும் தண்ணீர் அனைத்தும் கங்கை நீராகவே பாவிக்கப்படும். இதனால்தான் தீபாவளி அன்று காலையில் நீராடுவதை கங்காஸ்நானம் ஆச்சா என்று சொல்கிறார்கள். தீபாவளி குளியலில் கங்கையின் புண்ணியம்

தீபாவளி தினத்தில் வெந்நீரில் எண்ணெய் தேய்த்துக் குளித்தால் பீடைகள் விலகி, புண்ணியம் உண்டாகும். அன்றைய தினத்தில் எண்ணெயில் திருமகளும், வெந்நீரில் கங்கையும் ஒன்று சேர்வதால், எண்ணெய்க் குளியல் செய்பவர்க்கு கங்கையில் மூழ்கிக் குளித்த புனிதப்பயன் கிட்டும்! தீபாவளியன்று அதிகாலையில் எழுந்து எண்ணெய் தேய்த்து ஆல், அரசு, அத்தி, மாவிலங்கை ஆகிய மரங்களின் பட்டைகள் போட்டுக் காய்ச்சிய நீரில் கங்கா ஸ்நானம் செய்த பின் புத்தாடை உடுத்தி, பல வகையான பலகாரங்கள் செய்து விஷ்ணுவுக்கும், மகாலட்சுமிக்கும் படைத்து பூஜிக்க வேண்டும்.

காவல் தெய்வம் மகாலட்சுமி

தீபாவளிக்கு மகாலட்சுமி வழிபாடு முக்கியமானது. இது தொன்றுதொட்டு நடந்து வந்துள்ளதை, தமிழ் இலக்கியங்கள் குறிப்பிடுகின்றன. மகாலட்சுமியின் திருவுருவம் ஒவ்வொரு வீட்டின் வாசலிலும் பொறிக்கப்பட்டிருந்ததாக நெடுநல்வாடையும், வீட்டு மதில் சுவரில் பொறிக்கப்பட்டிருந்ததாக மதுரைக்காஞ்சியும் கூறுகிறது. நம்மூர் கிராமங்களில் பெண் காவல் தெய்வமாக காளி, துர்க்கை, மாரியம்மன், பேச்சியம்மன், இசக்கியம்மன் என்றே வணங்குவது வழக்கம். ஆனால், பட்டினப்பாலை என்னும் இலக்கிய நூலில் மகாலட்சுமி ஊரின் காவல் தெய்வமாக வழிபடப்பட்டாள் என்று குறிப்பிடப்பட்டுள்ளது. நம்ம வீட்டுக்குள்ளும் கங்கை வரும்

தீபாவளி நன்னாளில் எண்ணெய் தேய்த்து நீராடல் என்பது மிகவும் புனிதமானதாகும்.

இந்நீராடல் இல்லறத்தார் மட்டுமல்ல துறவிகளுக்கும் உரியது. பொதுவாக எண்ணெயை அபசகுனமாக கருதுவார்கள். ஆனால், தீபாவளியன்று தைலமாகிய நல்லெண்ணெயில் ஸ்ரீதேவியாகிய திருமகளே வாசம் செய்கிறாள் என்பது ஐதீகம். அதேபோல், அன்று எந்த நீரில் குளித்தாலும் அது புனிதநதி கங்கையில் நீராடியதற்குச் சமமாகும். அதனால் தான் தீபாவளியன்று கங்கா ஸ்நானம் ஆச்சா? என்று கேட்கும் பழக்கம் உருவானது. நம் ஒவ்வொரு வீட்டிலும் தீபாவளிநாளில் கங்காநதியே வாசம் செய்கிறாள். தைலத்தில் விளங்கும் லட்சுமிதேவிக்கும், நீரில் வாசம் செய்யும் கங்காதேவிக்கும் மானசீகமாக நன்றிதெரிவித்து தீபாவளிநாளில் எண்ணெய் தேய்த்து நீராடினால் நம் பாவங்கள் அகன்றுவிடும்.

அசாமில் பிறந்த அசுரன்

விழா நாட்களில் தீபமேற்றி வழிபாடு செய்வது நம் மரபு. தமிழகத்தில், தீபத்திற்குரிய விழாவாக தமிழகத்தில் திருக்கார்த்திகை அமைந்துள்ளது. வடமாநிலங்களில் தீபாவளி திருநாளை தீபத்திருவிழாவாகக் கொண்டாடுகிறார்கள். நரகாசுரன் என்ற அசுரன் பிராக்ஜோதிஷ்புரம் என்னும் நகரத்தை ஆண்டுவந்தான். இதற்கு இருள் சூழ்ந்த நகரம் என்று பொருள். இவ்வூர் இன்றைய அசாம் மாநிலத்தில் இருந்தது. விஷ்ணு வராக அவதாரம் தாங்கி, பூமியை மீட்டபோது பூமாதேவிக்கும், விஷ்ணுவுக்கும் பிறந்த புத்திரன் இவன். கோபம், காமம் முதலிய குரூர எண்ணங்களுடன் பிறந்திருந்த நரகாசுரன், தேவர்களைத் துன்புறுத்தி வந்தான். தன்னைப் பெற்றவளைத் தவிர யாராலும் கொல்லப்படக்கூடாது என்ற வரத்தையும் பெற்றிருந்தான். எனவே பூமாதேவியை சத்தியபாமாவாக அவதரிக்கச் செய்த விஷ்ணு, கிருஷ்ணவதார காலத்தில் அவளை மணந்து கொண்டார். சத்தியபாமாவைத் தன் தேரோட்டியாக்கிக் கொண்டு நரகாசுரனை அழிக்க கிளம்பினார். பூமிதேவியான சத்தியபாமா எதிரே நிற்பது மகனென அறியாமல், ஐப்பசி மாதம் கிருஷ்ணபட்ச சதுர்த்தசி நாளில் நரகாசுரனைக் கொன்று அருள்செய்தாள். பின்னர் நடந்ததை அறிந்து, தன் மகன் இறந்தநாளை, தீபத்திருநாளாகக் கொண்டாட வரம் பெற்றாள்.

நரகாசுரனிடம் இருந்து கைப்பற்றிய பொருட்கள்

நரகாசுரனை சம்ஹாரம் செய்தவுடன்,அவனது தாயான பூமாதேவி கிருஷ்ணனிடம் வந்து பிரார்த்தித்தாக ஒரு தகவல் பாகவதம் என்னும் நூலில் இருக்கிறது. இந்திரனின் குடை, இந்திரனின் தாயான அதிதியின் குண்டலங்கள் ஆகியவற்றை நரகாசுரன் பறித்து வைத்திருந்தான். அவன் இறந்ததும் அவற்றைக் கைப்பற்றிய பூமாதேவி, அந்தப் பொருட்களை பகவானிடம் ஒப்படைத்தாள். பின்னர், பகவானே! நரகாசுரனின் மகன் பகதத்தனை நீங்கள் தான் காப்பாற்ற வேண்டும், என்று பிரார்த்தித்தாள். எதிரியின் பிள்ளைகளையும் காப்பாற்ற வேண்டும் என்பதற்கு இது உதாரணம். குளிக்கும் நேரம்

தீபாவளியன்று சூரியன் உதயமாவதற்கு ஒரு முகூர்த்தம், அதாவது ஒன்றரை மணி நேரம் முன்னதாக நீராட வேண்டும் என்பது விதி. இந்த ஆண்டில் காலை 4.30க்கு நீராடுவது உத்தமம். இதில் இருந்து 5.30 மணிக்குள் வீட்டிலுள்ள எல்லாரும் குளித்து விட வேண்டும். சூரிய உதயத்துக்கு முன்னதாக எண்ணெய்க்குளியல் செய்யக்கூடாது என்பது பொதுவிதி.

ஆனால், தீபாவளியன்று மட்டும் வித்தியாசமாக இப்படி செய்தால் தான், நரகாசுரனைப் பற்றி மக்கள் நினைப்பார்கள். அவனைப் போல நம் பிள்ளைகளை அதிக செல்லம் கொடுத்து கெடுத்துவிடக்கூடாது என்பதிலும் கவனமாக இருப்பார்கள் என பூமாதேவி நினைத்தாள். அதற்கென்றே இப்படி ஒரு விதிவிலக்கான வரத்தைப் பெற்றாள். எனவே, எக்காரணம் காலை 2மணி, 3மணி என்றெல்லாம் யாரும் எண்ணெய் தேய்த்து குளிக்கக்கூடாது. சூரிய உதயத்துக்குப் பிறகும் குளிப்பது தவறு. இவ்வாறு குளித்துவிட்டு, மீண்டும் காலை 7 மணிக்கு மேல் வழக்கமான பச்சைத்தண்ணீர் குளியலையும் செய்ய வேண்டும் என்கிறது சாஸ்திரம்.

தீபாவளியன்று முன்னோர்கள் வழிபாடு

தீபாவளியன்று எண்ணெய் தேய்த்துக் குளித்ததும், புதிய ஆடைகளையும், புதிய பலகாரங்களையும் வைத்து வணங்குவது வழக்கம். இது முன்னோர்களுக்கு (பிதுர்களுக்கு) படைக்கும் படையல் ஆகும். அன்று பிதுர்கள் வருவதாக ஐதீகம். தீபாவளி ரகசியம்

இரண்டு பேருக்கு இடையில் மத்தியஸ்தம் செய்பவர் (பிரச்னைக்கு தீர்வு சொல்பவர்) என்பவர் தராசு போல நடுநிலையாளராக இருக்க வேண்டும் என்று சொல்வதுண்டு. தராசுக்கு துலாக்கோல் என்று ஒரு பெயர் உண்டு. தீபாவளி கொண்டாடப்படும் ஐப்பசிக்கு துலாமாதம் என்று பெயர். தராசு எப்படி நடுநிலையாக தன் முள்ளைக் காட்டி நிற்குமோ, அதுபோல தனக்கு வேண்டியவர் வேண்டாதவர் என்ற பேதம் இல்லாமல் எவன் இருக்கிறானோ அவனே நீதிமான்.

அதனாலேயே நீதிக்கு அடையாளமாக தராசினை வைத்திருக்கிறார்கள். தீபாவளி நன்னாள் நீதியை எடுத்துச் சொல்கிறது. தாங்கள் பெற்ற மகன் என்றும் பாராமல், அநியாயம் செய்த நரகாசுரனை திருமாலும், சத்தியபாமாவும் இணைந்து அழித்தனர். இந்த நீதியும், மனஉறுதியும் அனைவரிடமும் ஏற்பட வேண்டும் என்பதே தீபாவளித் திருநாள் நமக்கு உணர்த்தும் பெரும் ரகசியமாகும்.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.