துவக்கப்பள்ளிகளில் துப்புரவு பணிக்கு குறைவான மதிப்பூதியம்; யாரும் முன்வராததால் தலைமை ஆசிரியர்கள் அல்லல்
தமிழகத்தில் உள்ள துவக்கப்பள்ளிகளில் துப்புரவு பணிக்கு குறைவான மதிப்பூதியம் வழங்கப்படுவதால் பணியாளர்கள் யாரும் பணிக்கு வருவதில்லை என தலைமை ஆசிரியர்கள் புலம்புகின்றனர்.
தமிழகத்தில் 24 ஆயிரத்து 350 துவக்க பள்ளிகள், 6976 நடுநிலைப் பள்ளிகள் என மொத்தம் 31 ஆயிரத்து 326 பள்ளிகள் உள்ளன. தமிழகத்தில் உள்ள அனைத்து அரசு துவக்க, நடுநிலைப்பள்ளிகளில் தினந்தோறும் துப்புரவு பணிக்கு கடந்த கல்வியாண்டு முதல் ரூ.1000 மதிப்பூதியத்தில் பணியாளர்கள் பணி செய்து வந்தனர். இந்த மதிப்பூதியம் மிக குறைவாக இருப்பதாக துப்புரவு ஊழியர்கள் புகார் அளித்து வந்த நிலையில், பல பள்ளிகளில் கோடை விடுமுறையை யொட்டி பணியில் இருந்து நின்று விட்டனர். பள்ளிகள் திறக்க இன்னும் 10 நாட்களே உள்ளதால் சுத்தம் செய்ய அழைத்தால் யாரும் வருவதில்லை. புதிதாக ஆட்கள் கேட்டாலும், ரூ.1000 மதிப்பூதியம் போதாது என்கின்றனர்.
இது குறித்து தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி மாநில செயற்குழு உறுப்பினர் வைரமுத்து கூறியதாவது: அரசு துவக்க, நடுநிலைப்பள்ளியில் துாய்மை பணி செய்யும் ஊழியர்களுக்கு ரூ.1000 ஆயிரம் மதிப்பூதியம் வழங்குகிறது. யாரும் இந்த குறைந்தபட்ச ஊதியத்திற்கு வருவதில்லை. தனியாரில் இதே துாய்மை பணிக்கு ரூ.8 ஆயிரம் வரை வழங்குவதால் அதை காரணம் காட்டி வர மறுக்கின்றனர். இதனால் தலைமை ஆசிரியர்கள் கடும் சிரமத்திற்கு ஆளாகி உள்ளனர். சிலர் கடந்தாண்டு ரூ.3 ஆயிரம் வரை கையில் இருந்து பணம் போட்டு கொடுத்து வந்தனர். இந்தாண்டு அதுவும் போதவில்லை என நின்று விட்டனர். மேலும் இதற்கான நிதியையும் ஊரகவளர்ச்சித்துறை மாதந்தோறும் வழங்காமல் காலாண்டு, அரையாண்டுக்கு ஒரு முறை வழங்குகின்றனர். சில தலைமை ஆசிரியர்கள் கையில் இருந்து மாதந்தோறும் வழங்கிவிடுகின்றனர். சிலர் அரசு தந்ததும் தருவதாக கூறுவதால், சம்பளம் வாங்கிய கையோடு பணியாளர்கள் நின்று விடுகின்றனர்.
கழிப்பறை சுத்தம், வளாக சுத்தம் என்பது மிகவும் அவசியம். மழைக்காலங்களில், இலையுதிர்காலங்களில் மிகவும் தேவை. ரூ.ஆயிரம் என்பதால் சில பணியாளர்கள் கழிப்பறை சுத்தத்தோடு முடித்து விட்டு செல்கின்றனர். அரசு மதிப்பூதியத்தை உயர்த்தி துாய்மை பணியாளர்களை பணியமர்த்த வேண்டும், என்றார்.
ليست هناك تعليقات:
إرسال تعليق
கல்விச்செய்தி நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.