மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் பள்ளிக்கல்வித்துறை தொடர்பான ஆய்வினை மேற்கொண்டாரா? இல்லையா?
AIFETO. நாள்: 08.11.2024.
தமிழக ஆசிரியர் கூட்டணி அரசு அறிந்தேற்பு எண் : 36/2001.
08.11.2024 இன்று தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் பள்ளிக் கல்வித் துறையினை ஆய்வு செய்து சில கோரிக்கைகளை அறிவிக்க இருக்கிறார்கள் என்று ஒரு செய்தி வலுவாகவே பரப்பப்பட்டு வந்தது நடைபெற்றது என்ன..? மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் மாநிலம் முழுவதும் கட்டப்பட்டுள்ள கட்டிடங்களை இன்று காணொளி மூலமாக திறந்து வைத்தார்கள். மாண்புமிகு பள்ளிக் கல்வித் துறை அமைச்சர், பள்ளி கல்வித்துறை செயலாளர், இயக்குனர்களும் கலந்து கொண்டு இருப்பார்கள். மாண்புமிகு பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யா மொழி அவர்களை செய்தியாளர்கள் சந்தித்தபோது முதலமைச்சர் அவர்கள் சில கோரிக்கைகளை அறிவித்தார்களா என்று கேட்டபோது நிதி சார்ந்த கோரிக்கைகளை தற்போது அறிவிப்பதில் சிரமம் இருப்பதாக தனியாக கேட்ட செய்தியாளரிடம் அறிவித்ததாக நமக்கு தகவல் வந்தது. சில ஊடகங்கள் அந்த தகவலையும் வெளியிட்டார்கள்.
உடன் எந்த கோரிக்கைகளும் நிறைவேற்றவில்லை. அன்றாடம் சித்தரவதை எண்ணிக்கை பெருகிக்கொண்டே இருக்கிறது என்று ஆசிரியர்கள், அரசு ஊழியர்கள் சீற்றம் கொண்டு அனல் தெறிக்க பதிவுகளை வெளியிட்டு வருகிறார்கள்.
உடனே ஒரு சிலர் அப்படி முதலமைச்சர் எதுவும் சொல்லவும் இல்லை; ஊடகங்களில் வந்து செய்தியையும் திரும்ப பெற்றுக் கொண்டு விட்டார்கள். நாம் நினைப்பதை கேட்பதை நமது ஆட்சி உறுதியாக செய்து முடிப்பார்கள் என்று குரல் கொடுக்கிறார்கள். அரசுக்கு ஆதரவான சங்கங்கள் அந்தக் காலத்திலிருந்தே இருந்து வருகின்றன .ஆனால் நம்மை நம்பி இருக்கின்ற ஆசிரியர்கள், அரசு ஊழியர்களின் முகங்களை பார்க்காமல் ஆள்பவர்களின் முகங்களை மட்டுமே பார்த்து அரசு வழக்கறிஞர்கள் போல பாதிக்கப்பட்டவர்களிடம் எந்த குறையும் அரசின் மீது சொல்லக்கூடாது என்று வாதாடுகிறவர்கள் இருக்கும் வரையில் எந்த கோரிக்கையும் நிறைவேறப் போவதில்லை. நிதி சார்ந்த கோரிக்கைகள் மட்டுமல்ல நிதி சாராத கோரிக்கைகளும் நிறைவேற்றப் போவதில்லை.
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களைப் பொறுத்தவரையில் தன்னை சந்திப்பவர்களுடைய தலைமையில் தான் ஆசிரியர்கள், அரசு ஊழியர்கள், ஓய்வூதியதாரர்களின் 21 லட்சம் வாக்குகளும் அவர் குடும்பத்தைச் சேர்ந்த 1.75 லட்சம் வாக்குகளும் அணிவகுத்து நிற்கிறார்கள் என்ற நம்பிக்கையிலும் உறுதியாக நிற்கிறார்கள்.
90 விழுக்காடு ஆசிரியர்கள், அரசு ஊழியர்கள், ஓய்வூதியதாரர்கள் அவருடைய குடும்பத்தார் என அனைவரும் எதையும் செய்யாத அரசு அன்றாடம் தொடர்ந்து புதிய புதிய அறிவிப்புகள் மூலம் மன அழுத்தத்தினை ஏற்படுத்தி வரும் செயல்களை எல்லாம் பொறுத்துக் கொள்ள முடியாமல் "நெஞ்சு பொறுக்குதில்லையே" என்ற பாடலை அன்றாடம் பாடி வருகிறார்கள்.
2026 பொதுத் தேர்தல் வரை எதுவும் செய்யவில்லை என்றாலும் அடுத்த முறை ஆட்சி அமைப்பது நமது அரசு தான். வெளிநாட்டு தொழில் முதலீடுகள் எல்லாம் தமிழ்நாட்டுக்கு வந்ததற்கு பிறகு சொன்னதையும் செய்வார்கள் சொல்லாததையும் செய்வார்கள் என்று நம்மிடம் உறுதியளித்து பேசும் சங்கத் தலைவர்கள் இருக்கத்தான் செய்வார்கள். போராட்டங்களால் வெற்றி பெற்றது தான் சங்கத்தின் வரலாறு. போராடாமல் பார்த்துக் கொள்வதற்காக சங்கத் தலைவர்கள் இருப்பதை தமிழ்நாட்டின் வரலாற்றில் எங்களால் காண முடிகிறது.
எங்களைப் போன்றவர்கள் திராவிட முன்னேற்றக் கழக கட்சி உணர்வில் ரத்த ஓட்டத்தில் இரண்டறக் கலந்து பயணம் செய்து வருபவர்கள். ஆனால் கட்சியா? சங்கமா? என்றால் நூறு விழுக்காடு சங்கத்தின் பக்கம் நின்று தான் எங்கள் பொது வாழ்வை நடத்தி வந்துள்ளோம்.
நீண்ட கால எங்களுடைய பொது வாழ்வில் அரசியல் கூட்டணி கட்சிகள் ஆசிரியர்கள், அரசு ஊழியர்களை இதுவரை கைவிட்டதில்லை. எந்த சூழ்நிலையிலும் தலைவர் கலைஞர் அவர்கள் ஆசிரியர்கள், அரசு ஊழியர்களின் வாக்கு வங்கியினை இழக்கக்கூடாது என உறுதியாக இருந்தார்கள். பாதிக்கப் பட்டவர்கள் நாம் கரம் கோர்த்து நிற்போம். ஆட்சியின் தலைமை சுய பரிசோதனை செய்வதற்கு நம்முடைய உறுதிமிக்க உணர்வுகள் சான்றாக அமையட்டும்..! அமையட்டும்..! வரவேற்க வேண்டியதை வரவேற்று என்றும் நன்றி பாராட்டுவார்கள் நாங்கள். சொல்ல வேண்டியதை சொல்ல வேண்டிய நேரத்தில் வெளிப்படைத் தன்மையுடன் பதிவு செய்து வருபவர்களும் நாங்கள் தான்..! என்றும் உள்ளதை உண்மையை உரக்கச் சொல்வோம்..!
ஆசிரியர் இயக்கங்களில் மூத்த தலைவர் இதயப் பற்றாளர்,
வா.அண்ணாமலை, ஐபெட்டோ அகில இந்தியச் செயலாளர் -AIFETO (ALL INDIA FEDERATION OF ELEMENTARY TEACHERS ORGANISATIONS), அலைபேசி:9444212060, மின்னஞ்சல்: annamalaiaifeto@gmail.com . தமிழக ஆசிரியர் கூட்டணி, ஆர்வலர் மாளிகை, 52, நல்லதம்பி தெரு, திருவல்லிக்கேணி, சென்னை 600 005.
No comments:
Post a Comment
கல்விச்செய்தி நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.