குடும்ப அட்டைதாரர்களுக்கு பொங்கல் பரிசாக ரூ.1000 வழங்கப்படும் என அறிவிப்பு.. மகளிர் திட்ட பயனாளிகளுக்கு இம்மாதம் 10ம் தேதியே தொகை வரவு - Kalviseithi Official - No:1 Education Website in Tamil Nadu

Latest

Thursday, January 4, 2024

குடும்ப அட்டைதாரர்களுக்கு பொங்கல் பரிசாக ரூ.1000 வழங்கப்படும் என அறிவிப்பு.. மகளிர் திட்ட பயனாளிகளுக்கு இம்மாதம் 10ம் தேதியே தொகை வரவு



பொங்கலுக்கு ரூ.1000 பரிசுத்தொகை: முதல்வர் ஸ்டாலின் அறிவிப்பு

பொங்கலுக்கு முன்பாக ஜனவரி 10ல் மகளிர் உரிமைத்தொகை வங்கி கணக்கில் #வரவு வைக்கப்படும்

பொங்கல் பரிசுத் தொகுப்பு: என்னென்ன கிடைக்கும்?

பொங்கல் பரிசு தொகுப்பில் ₹1,000 ரொக்கம், 1 கிலோ பச்சரிசி, 1 கிலோ சர்க்கரை, ஒரு முழு கரும்பு வழங்கப்படும்; பொங்கல் பரிசு தொகுப்புடன் இலவச வேட்டி, சேலைகள் வழங்கவும் ஏற்பாடு

அனைத்து ரேஷன் கடைகளிலும் பொங்கலுக்கு முன்னதாக ₹1,000 வழங்க முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவு


பொங்கல் பண்டிகைக்கு அனைத்து ரேஷன் அட்டைதாரர்களுக்கும் ₹1000 வழங்கப்படும் என்று முதல்வர் ஸ்டாலின் அறிவித்துள்ளார்.*

ஏற்கெனவே பச்சரிசி, சர்க்கரை, கரும்பு உள்ளிட்ட பரிசுப் பொருட்கள் வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டிருக்கும் நிலையில் தற்போது ₹1000 வழங்கப்படும் என்ற நல்ல செய்தியும் வெளியாகியிருக்கிறது.

இந்தத் தொகை ரேஷன் கடைகளில் ரொக்கமாக வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழர் திருநாளாம் பொங்கல் பண்டிகையை சிறப்பாகக் கொண்டாடிட பொங்கல் பரிசாக ஆயிரம் ரூபாய் ரொக்கமாக வழங்கப்படும்” என்று தமிழ்நாடு முதலமைச்சர் திரு. மு.க. ஸ்டாலின் அவர்கள் அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.இது தொடர்பாக தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில்,“தமிழர்களின் அடையாளமாக அனைத்துத் தரப்பு மக்களாலும் சிறப்பாகக் கொண்டாடப்பட்டு வரும் பெருமைமிகு ஒரு பண்டிகை பொங்கல் திருநாளாகும்.

இந்த நன்னாள் அனைத்துத் தொழில்களுக்கும், ஏன், மனித குலத்திற்கே அடித்தளமாய் விளங்கி, உணவளித்து வரும் விவசாயப் பெருங்குடி மக்களுக்கு நன்றி செலுத்தும் ஒரு நாளாகவும் தமிழர்களாகிய அனைவராலும் கொண்டாடப்பட்டு வருகிறது. இந்த நன்னாளை முன்னிட்டு, 1 கிலோ பச்சரிசி, 1 கிலோ சர்க்கரை மற்றும் ஒரு முழு கரும்பு ஆகியவை பொங்கல் பரிசுத் தொகுப்பாக வழங்கப்படும் என்று கடந்த 2-1-2024 அன்று தமிழ்நாடு அரசு அறிவித்திருந்தது.மேலும், முன்கூட்டியே திட்டமிட்டு உற்பத்தி செய்த காரணத்தினால், பொங்கல் திருநாளை முன்னிட்டு வழங்கப்படவுள்ள இலவச வேட்டி-சேலைகள் அனைத்தும் தயார் செய்யப்பட்டு, அனைத்து மாவட்டங்களுக்கும் அனுப்பி வைக்கப்பட்டுள்ளன. பொங்கல் பரிசுத் தொகுப்புடன் சேர்த்து, இவற்றை வழங்குவதற்குத் தேவையான அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளன. இந்நிலையில், பொங்கல் திருநாளைச் சிறப்பாக மக்கள் கொண்டாடிட, ஒன்றிய, மாநில அரசு ஊழியர்கள், வருமான வரி செலுத்துவோர், பொதுத் துறை நிறுவனங்களில் பணிபுரிவோர், சர்க்கரை அட்டைதாரர்கள், பொருளில்லா அட்டைதாரர்கள் தவிர்த்து, ஏனைய குடும்ப அட்டைதாரர்கள் அனைவருக்கும் 1,000 ரூபாய் பொங்கல் பரிசாக நியாயவிலைக் கடைகளில் பொங்கல் திருநாளுக்கு முன்னதாக ரொக்கமாக வழங்கப்படும் என்று தமிழ்நாடு முதலமைச்சர் திரு. மு.க. ஸ்டாலின் அவர்கள் அறிவித்துள்ளார்.

மேலும், பொங்கல் திருநாளை முன்னிட்டு ஒவ்வொரு மாதமும் 15ம் தேதி வழங்கப்பட்டு வரும் கலைஞர் மகளிர் உரிமைத் தொகையினை, இந்த மாதம் பொங்கல் திருநாளுக்கு முன்னதாக, அதாவது, வரும் 10ம் தேதியன்றே, மகளிர் உரிமைத் தொகை பெற்றுவரும் 1 கோடியே 15 இலட்சம் மகளிரின் வங்கிக் கணக்குகளுக்கு அனுப்பி வைக்கப்படும் என்றும் முதலமைச்சர் அவர்கள் அறிவித்துள்ளார்.இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.