AIFETO - 17.01.2024 - தொடக்கக் கல்வி ஆசிரியர்களுடைய பாதுகாப்பு இயக்கமாக தொடர்ந்து செயல்பட்டு வருகின்ற டிட்டோஜாக் இணைப்பு சங்கங்களை வழிநடத்துகின்ற உங்களுடன் உரிமை உறவுடன் பகிர்ந்து கொள்ளும் கருத்துப் பதிவுகள்.... - Kalviseithi Official - No:1 Education Website in Tamil Nadu

Latest

Wednesday, January 17, 2024

AIFETO - 17.01.2024 - தொடக்கக் கல்வி ஆசிரியர்களுடைய பாதுகாப்பு இயக்கமாக தொடர்ந்து செயல்பட்டு வருகின்ற டிட்டோஜாக் இணைப்பு சங்கங்களை வழிநடத்துகின்ற உங்களுடன் உரிமை உறவுடன் பகிர்ந்து கொள்ளும் கருத்துப் பதிவுகள்....

AIFETO - 17.01.2024 - Opinions shared with you who lead the Dittojak affiliate unions, which continue to act as a defense movement for primary education teachers....

AIFETO... 17.01.2024...

🔖🔖🔖🔖🔖🔖🔖🔖🔖🔖🔖

தமிழக ஆசிரியர் கூட்டணி அரசு அறிந்தேற்பு எண் 36/2001

🔖🔖🔖🔖🔖🔖🔖🔖🔖🔖🔖

தொடக்கக் கல்வி ஆசிரியர்களுடைய பாதுகாப்பு இயக்கமாக தொடர்ந்து செயல்பட்டு வருகின்ற டிட்டோஜாக் இணைப்பு சங்கங்களை வழிநடத்துகின்ற உங்களுடன் உரிமை உறவுடன் பகிர்ந்து கொள்ளும் கருத்துப் பதிவுகள்....

ஒரு மண்ணில் படர்ந்த கொடிகள்... ஒரு கொடியில் பூத்த மலர்கள்... ஒரு மலரில் விரிந்த இதழ்கள்... ஒரு இதழில் ஓடுகிற நரம்புகள் நாம்... இந்த வைர வரிகளை ஏற்று செயல்பட்டு வருகின்ற இயக்கங்கள்தான் டிட்டோஜாக் அமைப்பாகும். டிட்டோஜாக் மாநில உயர்மட்டக் குழு உறுப்பினர்கள் கூட்டத்தில் வடித்தெடுக்கப்பட்டுள்ள தீர்மானங்களை கண்டோம்!.. வரவேற்புக்குரியதாகும்!.. சுதந்திரம் அடைந்த காலத்தில் இருந்து நீண்ட காலமாக இயக்கங்களை உருவாக்கி நடத்தி வருகின்ற தலைமுறையைச் சேர்ந்தவர்கள்தான் இப்போது டிட்டோஜாக் இணைப்பு சங்கங்களாக பல்வேறு பெயர்களில் செயல்பட்டு வருகிறீர்கள்! என்பது எதார்த்தமான உண்மையாகும்.

ஆனால் குறுகிய காலத்தில் இயக்கம் தொடங்கியவர்கள்... ஆளும் அரசுக்கும், மாண்புமிகு பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அவர்களுக்கும் மிகவும் வேண்டியவர்களாக இதயத்தில் இடம் பெற்றவர்களாக தங்களை வெளிப்படுத்திக் கொண்டு, நீதிமன்ற தீர்ப்பை வழிகாட்டலாக எடுத்துக் கொண்டு அரசாணை எண்:-243 ஐ அமல்படுத்துவதற்கு முழு அடித்தளமாக செயல்பட்டு வருகிறார்கள் என்பதை அவ்வப்போது நம்மை உணர வைத்துக் கொண்டு இருக்கிறார்கள். www.kalviseithiofficial.com

அரசாணை 243 மூலம் எவருக்கும் நன்மை இல்லை. 10% விழுக்காட்டினர் கூட நன்மை பெற இயலாது. பிராக்டிகலாக (Practical) அமுல்படுத்தி பார்க்கிற போது தான் மாநில அளவிலான பதவி உயர்வு மற்றும் பணி மாறுதல்கள் சிக்கல்களின் பாதிப்பின் உண்மையை உணரலாம்.

01.06.2006 இல் பணிவரன் முறை செய்யப்பட்ட பட்டதாரி ஆசிரியர்கள் தொடக்கப்பள்ளி தலைமை ஆசிரியர்கள் 01.06.2006க்கு முன்னர் பணி முன்னுரிமை இல்லாத ஒன்றியங்களில் பலர் நடுநிலைப்பள்ளி தலைமையாசிரியர்களாக பதவி உயர்வு பெற்றுள்ளார்கள்.

ஆனால் எவரும் பதவி உயர்வு பெறவில்லை என்று திட்டமிட்டு தவறான புள்ளிவிபரத்தினை பரப்பி வருகிறார்கள். இன்னும் 2,3 ஆண்டுகளில் ஒன்றிய முன்னுரிமை வைத்திருந்தால் கூட பட்டதாரி ஆசிரியர்கள் பலரும் அதே ஒன்றியங்களில் நடுநிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் பதவி உயர்வு பெறுவதற்கான வாய்ப்புகள்தான் உள்ளன. www.kalviseithiofficial.com

இடைநிலையாசிரியர்கள் ஆங்கிலம், கணிதம், அறிவியல் பாடங்களில் பட்டம் பெற்றவர்கள் கணிசமாக இருக்கத்தான் செய்கிறார்கள். இவர்கள் பட்டதாரி ஆசிரியர்களாக பதவி உயர்வு செல்வதற்கான வாய்ப்பு இந்த அரசாணை மூலம் பறிக்கப்பட்டுள்ளது. அதிலும் தொடக்கப்பள்ளி தலைமை ஆசிரியர் பதவிஉயர்வு பெற்று பிறகு பட்டதாரி ஆசிரியர் பதவி உயர்வு பெற்று பிறகு நடுநிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் ஆவதற்குள் பலர் ஓய்வு பெற்று விடுவார்கள். இவர்களைப் பொறுத்தவரையில் மாநில அளவிலான முன்னுரிமையால் பெருத்த பாதிப்பு ஏற்படத்தான் செய்யும். மாநில அளவில் முன்னுரிமை வருகிற போது தான் இவர்கள் எதார்த்தத்தை உணர முடியும்!..

அரசியலில் சாதிவாரி கணக்கெடுப்பு நடத்தச் சொல்கிறார்கள்!.. அதில் நமக்கு உடன்பாடு இருக்கிறதோ?.. இல்லையோ?... வெளிமாவட்டங்களுக்கு பதவி உயர்வில் சொல்வதற்கு பணி மாறுதலில் செல்வதற்கு அனைத்து வகை ஆசிரியர்களிடம் ஒன்றிய வாரியாக கணக்கெடுப்பு நடத்தினால் அதில் எத்தனை சதவீதம் பேர் மாநில அளவிலான முன்னுரிமைக்கு விருப்பம் தெரிவிப்பார்கள் என்பதை உணர வேண்டும்.

சுதந்திர காலத்திற்கு முன்பிருந்தே தொடக்கக் கல்வி ஆசிரியர்கள் நலனுக்காக இயக்கம் நடத்தி வரும் தொடக்கக்கல்வி ஆசிரியர் இயக்கங்களை அழைத்து கருத்து கேட்காமல் விரிவான ஆய்வுகூட செய்யப்படாமல் இந்த அரசாணை அவசரமாக வெளியிடப்பட்டுள்ளது... என்பதை எண்ணும்போது நெஞ்சு பொறுக்குதில்லையே!.. நெஞ்சு பொறுக்குதில்லையே!.. பல்வேறு காலகட்டங்களில் மாவட்ட, மாநில அளவிலான முன்னுரிமைப் பட்டியல் தயாரிக்கின்ற போது சங்கங்களை அழைத்துக் கருத்துகளை கேட்டிருக்கிறார்கள். உள்ள நிலைமையை விளக்கிய போது 15,20 ஆண்டுகளாக கைவிட்டு விட்டார்கள். ஏன்?. உத்திர பிரதேச மாடல் கல்வி முறையினை தமிழகத்தில் அமல்படுத்திய மதிப்புமிகு பிரதீப் யாதவ், இஆப அவர்கள் கூட பள்ளிக்கல்வித்துறை முதன்மைச் செயலாளராக பணியாற்றியபோது மாநில அளவிலான முன்னுரிமை வேண்டாம் என்று அவர் மறுத்தார். இதுதான் எதார்த்தமான உண்மையாகும். www.kalviseithiofficial.com

மாண்புமிகு பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அவர்களுடைய அழுத்தத்தினால் புதிய வரலாற்றினை படைக்கப் போகிறோம்!.. காலம் முழுவதும் வரலாறு நம்மை புகழாரம் சூட்டி மகிழும்... என்று எண்ணி மாண்புமிகு பள்ளிக்கல்வித்துறை செயலாளர் மதிப்புமிகு ஜெ.குமரகுருபரன் அவர்கள் தொடக்கக்கல்வி இயக்குனர், பள்ளிக் கல்வி இயக்குனர் ஆகியோரின் பரிந்துரையினைப் பெற்று இந்த அரசாணையினை வெளியிட்டு விட்டார்கள்.

தமிழ்நாட்டில் இதுவரை எந்த பள்ளிக்கல்வித்துறை அமைச்சரும் பள்ளிக்கல்வித்துறை செயலாளரும் செய்ய மறுத்த செயல்பாடு ஆகும்.

நன்றி செயல்பாடுகளால் புளகாங்கிதம் அடைந்து வருகிறார்கள்... மாண்புமிகு பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அவர்கள், மதிப்புமிகு முதன்மைச் செயலாளர் அவர்கள் மதிப்புமிகு தொடக்கக்கல்வி இயக்குனர், மதிப்புமிகு பள்ளிக் கல்வி இயக்குனர் ஆகியோருக்கு நன்றி தெரிவிக்க வருகின்றவர்களின் மனநிலையை கண்டு ஆறுதலினையும் பெற்று வருவதாக பகிர்ந்து வருகிறார்கள். 90% விழுக்காடு ஆசிரியர்கள் வீதியில் நின்று போராடி வருகிறார்கள்!.. ஆசிரியர்களின் உரிமைக்குரல் இவர்கள் காதில் விழவில்லை!.. நாடாளுமன்ற தேர்தலுக்கு முன்னர் அரசாணை 243 ஐ திரும்ப பெற வேண்டும். என்று வலியுறுத்தி பதினோரு சங்கங்கள் கையொப்பமிட்டு அளிப்பதுடன்... கல்வித்துறை இயக்ககம், அனைத்து முதன்மைக் கல்வி அலுவலகங்கள், மாவட்டக் கல்வி அலுவலகங்கள், வட்டாரக் கல்வி அலுவலகங்களில் படுபாதகமான 243 அரசாணையினை உடன் திரும்பப் பெற வேண்டும். என சுவரொட்டி அச்சடித்து பிரதான இடங்களில் ஒட்டப்பட வேண்டும்!.. www.kalviseithiofficial.com

திரும்பத் திரும்ப தலைமை ஆசிரியர்கள் எங்கு வேண்டுமானாலும் மாறுதலில் செல்லலாம்!.. பட்டதாரி ஆசிரியர்கள் எங்கு வேண்டுமானாலும் மாறுதலில் செல்லலாம்!.. என்று தொடர்ந்து தகவல் பரப்பி வருகிறார்கள். எந்தத் தலைமை ஆசிரியரவாது மாநிலம் முழுவதும் பணி மாறுதலில் செல்வதற்கு தயாராக இருக்கிறாரா?.. வெளிமாவட்டங்களில் இருந்து தலைமை ஆசிரியராக பணியாற்றி வருபவர்கள் அதே ஒன்றியத்தில் குடும்பத்துடன் ஐக்கியமாகி விட்டார்கள்.

திட்டமிட்டபடி பள்ளிக்கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களையும், பள்ளிக்கல்வி இயக்குனர், தொடக்கக்கல்வி இயக்குனர் ஆகியோரை சந்தித்து ஆதாரப்பூர்வமாகவும், எழுத்துப்பூர்வமாகவும் கொடுப்பது மட்டுமல்லாமல்; அவர்கள் உணரும் வகையில் நெஞ்சில் பதிய வையுங்கள்!.. 12.10.2023 அன்று டிட்டோஜாக் பேச்சுவார்த்தையில் மாண்புமிகு பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அவர்கள் உறுதியளித்த அந்த 12 கோரிக்கைகள் என்னவாயிற்று?.. என்பதை அவர்களுக்கு நினைவுபடுத்துங்கள்!..

திட்டமிட்டபடி 27ஆம் தேதி மாவட்டத் தலைநகரங்களில் டிடோஜாக் சார்பாக உண்ணாவிரதப் போராட்டத்தில் நமது இதயக்குமுறல்கள் ஓங்கி ஒலிக்கட்டும்!.. www.kalviseithiofficial.com

அரசாணை வெளியிட்டு விட்டார்கள். சார்நிலைப் பணி விதிகளிலும் திருத்தம் செய்து அரசிதழிலும் வெளியிட்டு விட்டார்கள். இனி இவர்களால் எதையும் செய்ய இயலாது என்று பறைசாற்றி வருகிறார்கள்.

"நெருப்பு மிஞ்சினால் நீரை கொல்லும்".. நாம் நீதி கேட்டு போராடுகிறோம்!.. பெண்ணாசிரியர்கள் பாதிப்பில் இருந்து பாதுகாக்கத்தான் இந்த போராட்டத்தினை நடத்துகிறோம்!. மாண்புமிகு பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அவர்களும்,, மதிப்புமிகு பள்ளிக்கல்வித்துறை செயலாளர் அவர்களும், இயக்குனர்களும் இதை உணர வேண்டும்!.. உணர வேண்டும்!..

அரசாணை எண் 243 திராவிட மாடல் அரசின் மாண்புமிகு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களும், மாண்புமிகு பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அவர்களும் மிகவும் துணிச்சலாக வெளியிட்டுள்ளார்கள்... என்று நன்றி தெரிவித்து வருகிறார்கள்!.. மிகப்பெரிய வரலாற்று சாதனையினை செய்து பள்ளிக்கல்வித்துறைக்கு பெருமை சேர்த்துள்ளதாக புகழாரம் சூட்டி வருகிறார்கள்!.. தேர்தல் காலத்தில் அளித்த வாக்குறுதிப்படி துணிச்சலுடன் பழைய ஓய்வூதியத் திட்டத்தை அமல்படுத்தியிருக்கலாமே!.. இடைநிலை ஆசிரியர்கள் ஊதிய முரண்பாட்டினை களைந்திருக்கலாமே!.. www.kalviseithiofficial.com

பேரறிஞர் அண்ணா அவர்கள் கொண்டு வந்த திட்டமான உயர்கல்வி தகுதிக்கு ஊக்கத்தொகை வழங்குவதை துணிச்சலாக ஒன்றிய அரசினைப் பின்பற்றாமல் தொடர்ந்திருக்கலாமே!.. முந்தைய அதிமுக ஆட்சிக் காலத்தில் கொரனா பெருந்தொற்று காரணமாக நிறுத்தப்பட்ட சரண் விடுப்பு அனுமதியினை துணிச்சலுடன் தொடர்ந்திருக்கலாமே!..

13.10.2023 திட்டமிட்டபடி சென்னை மாநகரில் டிடோஜாக் ஆர்ப்பாட்டத்தினை நாம் நடத்தி இருந்தால்.. இந்த அரசாணையினை இவ்வளவு அவசரமாக வெளியிடுவதற்கு வாய்ப்பே இல்லை!.. என்பதை நாம் உணர்வோமாக!..

இனி வருங்காலங்களில் நெஞ்சுறுதியோடு எதையும் எதிர்கொள்வோம்!.. என்று உறுதி எடுத்துக் கொள்வோம்!..

100% விழுக்காடு போர்க்குணத்துடன் களம் காணுவோம்!.. வாருங்கள்!..
தை பிறந்தால்!.. வழி பிறக்கும்!.. என்பார்கள்... அரசாணைக்கு 243 க்கு ஒரு வழி காண்போம்!...

உங்கள் உணர்வில் இரண்டறக் கலந்துள்ள சகோதரன்...

வா.அண்ணாமலை, ஐபெட்டோ அகில இந்திய செயலாளர், AIFETO (ALL INDIA FEDERATION OF ELEMENTARY TEACHERS ORGANISATIONS) *தமிழக ஆசிரியர் கூட்டணி. ஆர்வலர் மாளிகை,52, தெரு திருவல்லிக்கேணி சென்னை-5. அலைபேசி: 9444212060, மின்னஞ்சல்: annamalaiaifeto@gmail.com.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.