ஒரு வாரமாக போராட்டம் நடத்திய ஆசிரியர்கள் கைது.. காலை 10 மணிக்குள் அனைவரையும் வெளியேற்ற போலீஸ் நடவடிக்கை!! - Kalviseithi Official - No:1 Education Website in Tamil Nadu

Latest

Wednesday, October 4, 2023

ஒரு வாரமாக போராட்டம் நடத்திய ஆசிரியர்கள் கைது.. காலை 10 மணிக்குள் அனைவரையும் வெளியேற்ற போலீஸ் நடவடிக்கை!!



ஒரு வாரமாக போராட்டம் நடத்திய ஆசிரியர்கள் கைது.. காலை 10 மணிக்குள் அனைவரையும் வெளியேற்ற போலீஸ் நடவடிக்கை!!

சம வேலைக்கு சம ஊதியம், பணி நிரந்திரம் உள்ளிட்ட கோரிக்கைகளை முன்வைத்து சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள டிபிஐ வளாகத்தில் கடந்த ஒரு வாரமாக போராட்டம் நடத்திய ஆசிரியர்கள் கைது செய்யப்பட்டனர். சென்னை கல்லூரிச் சாலையில் உள்ள டிபிஐ வளாகத்தில், கடந்த 10 நாட்களாக இடைநிலை பதிவு மூப்பு ஆசிரியர் சங்கத்தினர் தொடர் உண்ணாவிரதம் இருந்து வந்தனர். அவர்களை தொடர்ந்து கடந்த 7 நாட்களாக தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்ற ஆசிரியர்களின் கூட்டமைப்பு, பகுதி நேர சிறப்பாசிரியர்கள் சங்கம் ஆகிய சங்கங்களை சேர்ந்த ஆயிரக்கணக்கான பட்டதாரி ஆசிரியர்கள் இரவு பகலாக தொடர் உண்ணாவிரதம் இருந்து வந்தனர். இதையடுத்து போராட்டத்தில் ஈடுபட்டு வரும் ஆசிரியர் சங்கங்களின் பல்வேறு கோரிக்கைகள் தற்போது ஏற்கப்பட்டுள்ளது.அதில், பகுதி நேர ஆசிரியர்களின் மாத ஊதியத்தில் கூடுதலாக ரூ.2,500 வழங்கப்படும், அவர்களுக்கு ரூ.10 லட்சத்துக்கான மருத்துவக் காப்பீடும் வழங்கப்படும். தகுதித் தேர்வு எழுதும் ஆசிரியர்களுக்கான வயது வரம்பு பொதுப் பிரிவினருக்கு 53, இதர பிரிவினருக்கு 58 ஆக வயது தளர்வு செய்யப்படும், 171 தொழில் கல்வி ஆசிரியர்களை பணி நிரந்தரம் செய்வதற்கான அரசாணை வெளியிடப்படும், இடைநிலை ஆசிரியர்களின் ஊதிய முரண்பாடுகளை களைய 3 பேர் கொண்ட குழு அமைக்கப்படும் என்று பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி நேற்று மாலை அறிவித்தார்.. இந்த நிலையில், அமைச்சர் அன்பில் மகேஷ் வெளியிட்ட 5 அறிவிப்புகளில் முக்கிய கோரிக்கை நிறைவேற்றப்படாததால், சம வேலைக்கு சம ஊதியம் வழங்க வலியுறுத்தி, சென்னையில் தங்களது போராட்டத்தைத் தொடர்ந்த இடைநிலை ஆசிரியர்கள் இன்று (அக்.5) அதிகாலை அதிரடியாக கைது செய்யப்பட்டனர். ஏழு நாட்கள் மட்டுமே போராட்டம் நடத்த அனுமதி வழங்கப்பட்ட நிலையில், அதற்கு மேலாக அனுமதி வழங்க முடியாது என்று கூறி, காவல் துறையினர் கைது நடவடிக்கையை மேற்கொண்டனர்.கைது செய்யப்பட்ட ஆசிரியர்கள் ராஜரத்தினம் ஸ்டேடியம் மற்றும் அதன் அருகே உள்ள சமூகநலக் கூடங்களில் தங்கவைக்கப்பட்டனர். ஆனால் அங்கும் அவர்கள் உள்ளிருப்புப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.