மீண்டும் பழைய ஓய்வூதியத் திட்டத்தை நடைமுறைப்படுத்த முடியாது என உச்சந்தலையில் ஓங்கி அடித்த நிதி அமைச்சர்! சங்கப் பொறுப்பாளர்கள் இனி எமனா? மாவீரனா? - Kalviseithi Official - No:1 Education Website in Tamil Nadu

Latest

Sunday, July 23, 2023

மீண்டும் பழைய ஓய்வூதியத் திட்டத்தை நடைமுறைப்படுத்த முடியாது என உச்சந்தலையில் ஓங்கி அடித்த நிதி அமைச்சர்! சங்கப் பொறுப்பாளர்கள் இனி எமனா? மாவீரனா?

*மீண்டும் பழைய ஓய்வூதியத் திட்டத்தை நடைமுறைப்படுத்த முடியாது என உச்சந்தலையில் ஓங்கி அடித்த நிதி அமைச்சர்! சங்கப் பொறுப்பாளர்கள் இனி எமனா? மாவீரனா?*

_✍🏼செல்வ.ரஞ்சித் குமார்_

20.05.23-ல் ஆங்கில ஊடகத்தில், *"மாநில அரசு ஊழியர்களுக்கு மீண்டும் பழைய ஓய்வூதியத் திட்டம் நடைமுறைப்படுத்தப்படும் என்று திமுகவின் சட்டமன்றத் தேர்தல் அறிக்கையில் வாக்குறுதி அளிக்கப்பட்டிருந்தது. கொடுக்கப்பட்ட வாக்குறுதிக்கு உங்களால் மதிப்பளிக்க இயலுமா. . .?"* என்று கேட்கப்பட்ட கேள்விக்கு. . . .

*"அதையெல்லாம் மதிக்கவே முடியாதுங்க"* என்பதே அப்போது மாண்புமிகு தமிழ்நாட்டு நிதி அமைச்சராகப் பொறுப்பேற்ற திரு.தங்கம் தென்னரசு அவர்களது பதிலின் சாரமாக இருந்தது.

ஆம், *". . . . பழைய ஓய்வூதியத் திட்டம் குறித்து இந்திய அரசு ஒரு குழுவை அமைத்துள்ளது. பல்வேறு இயக்கங்கள் கோரிக்கை விடுத்துள்ளன. ஏற்ற நேரத்தில் முடிவு எடுக்கப்படும்."* என்று பதிலளித்திருந்தார். உண்மையில் இப்பதில், தங்கம் வந்துட்டாரு எங்க சங்கடமெல்லாம் தீர்ந்திடும்னு நம்புன சங்கப் பொறுப்பாளர்களின் முகத்தில் கரியைப் பூசியது போல இருந்தது. இருந்தாலும் அவர்கள் இன்னும் நம்பிக்கை கொண்டிருக்கின்றனர்.

இதற்கிடையே, நேற்று (22.07.2023) தலைமைச் செயலகத்தில் செய்தியாளர்களுக்குப் பேட்டியளித்த மாண்புமிகு நிதி & மனிதவள மேலாண்மைத் துறை அமைச்சர் திரு.தங்கம் தென்னரசு அவர்கள் தன்மீது நம்பிக்கை கொண்டிருக்கும் சங்கப் பொறுப்பாளர்களை (மன்னிக்கவும்) . . . . . . . .-ஆல் அடித்தது போல ஒரு பதிலைச் சொல்லியுள்ளார்.

அது என்னவென்றால், *"ஒன்றிய அரசின் சோமநாதன் கமிட்டி & ஆந்திரா அரசின் முடிவுகள் இரண்டையும் பார்த்து இதில் எது பொறுத்தமா இருக்குமோ அதைத் தமிழ்நாட்டு முதலமைச்சரின் கவனத்துக்குக் கொண்டுசென்று பேசினால்தான் முடிவு சொல்லமுடியும்" என்பதே பழைய ஓய்வூதிய திட்டம் குறித்த அரசின் நிலைப்பாடு* என்று கூறியுள்ளார்.

2021 சட்டமன்றத் தேர்தலில் ஒன்றிய ஆட்சியாளர்களின் தேர்தல் அறிக்கையைப் பார்த்தோ, ஆந்திர முதல்வர் ஜெகன்மோகனின் வாக்குறுதியை நம்பியோ தமிழ்நாட்டு அரசு ஊழியர்களும் - ஆசிரியர்களும் - சங்கப் பொறுப்பாளர்களும் - அவர்தம் குடும்பங்களும் திமுக-விற்கு வாக்களிக்கவில்லை. திமுக-வின் தேர்தல் அறிக்கையையும் திரு.மு.க.ஸ்டாலின் போராட்டக் களத்திற்கு நேரில் வந்து அளித்த வாக்குறுதியையும் நம்பித்தான் வாக்களித்தனர்.

திராவிட மாடல் விடியல் ஆட்சியில் *திமுக & திரு.மு.க.ஸ்டாலின் அவர்கள் மீது தமிழ்நாட்டு அரசு ஊழியர்களும் - ஆசிரியர்களும் - சங்கப் பொறுப்பாளர்களும் - அவர்தம் குடும்பங்களும் வைத்த நம்பிக்கைக்கு பச்சைத்துரோகம் மட்டுமே* பதிலாக மீண்டும் மீண்டும் அளிக்கப்பட்டு வருகிறது.

மாண்புமிகு அமைச்சரின் மேற்படி பதில் எப்படி பச்சைத் துரோகமாகும்? தனது கூட்டணிக் கட்சிகளான காங்கிரஸ் & ஆம் ஆத்மி உள்ளிட்டவையெல்லாம் தத்தமது மாநிலங்களில் மீண்டும் பழைய ஓய்வூதியத் திட்டத்தையே நடைமுறைப்படுத்திக் கொண்டிருக்கும் சூழலில் தனது பிரதான எதிர்க்கட்சியாகப் பொதுவெளியில் காட்டிவரும் பா.ச்ச.க சொல்வதையோ, I.N.D.I.A கூட்டணியில் இல்லாத ஆந்திராவின் ஜெகன்மோகன் சொல்வதையோதான் நிறைவேற்றுவோம் என்பது தன்னை நம்பியுள்ள தமிழ்நாட்டு மக்களுக்குச் செய்யும் பச்சைத் துரோகமில்லாமல் வேறென்ன?

மாவீரனின் காதில் ஒலிக்கும் அசரீரிபோல, இந்த பச்சைத் துரோகத்தால் விழுந்த அடியால் உண்டான பாதிப்பில் தமிழ்நாட்டு ஆசிரியர்கள் & அரசு ஊழியர் இயக்கப் பொறுப்பாளர்களின் காதுகளில் இந்நேரம் பின்வருபவை ஒலித்திருக்க வேண்டுமே. . .!

👂👂👂👂👂👂👂👂👂👂👂

🧏‍♂️ ஒன்றிய அரசு என்ன முடிவு எடுக்கும் என்பதைப் பொறுத்துத்தான் திமுக தனது தேர்தல் வாக்குறுதியை நிறைவேற்றுவேன் என்று முன்னதாகக் கூறியிருந்ததா?

🧏‍♂️ ஒன்றிய அரசின் PFRDA எனும் ஓய்வூதிய ஒழுங்காற்று ஆணையத்தில் இதுவரை ஒப்பந்தம் செய்து கொள்ளாத தமிழ்நாடு அரசு ஒன்றிய அரசின் முடிவிற்குக் காத்திருக்க வேண்டுமா?

🧏‍♂️ தமிழ்நாட்டில் நடைமுறையில் உள்ள CPS-ற்கும் ஒன்றிய அரசு PFRDA மூலம் நடைமுறைப்படுத்தி வரும் NPS-ற்கும் ஒட்டுமில்லை உறவுமில்லை என்பது மாண்புமிகு நிதியமைச்சருக்குத் தெரியாதா?

🧏‍♂️ மாநில அரசின் அதிகார மட்டத்திற்குட்பட்ட கேள்விக்கு ஒன்றிய அரசையும் ஆந்திர அரசையும் துணைக்கு அழைப்பது ஏன்?

🧏‍♂️ தமிழ்நாட்டில் நடைமுறையில் உள்ள CPS திட்டம் குறித்த போதுமான புரிதல் இல்லாமல் தான் மாண்புமிகு நிதியமைச்சர் அவர்கள் மேற்படி பதிலை அளித்தாரா? 🧏‍♂️ CPS & NPS குறித்து மாண்புமிகு நிதியமைச்சர் அவர்களுக்கு நன்கு தெரியுமெனில், திமுகவின் தேர்தல் வாக்குறுதியை மறுதலிக்கவே ஒன்றிய அரசின் குழுவையும் ஆந்திராவையும் கை காட்டுகிறாரா?

🧏‍♂️ அண்ணா தந்தது போல ஊக்க ஊதியம் தருவேன் என்று அளித்த வாக்குறுதியைப் பொய்யாக்கி, ஒன்றிய அரசைப் பின்பற்றி ஊக்கஊதியத்தைத் தடை செய்த திமுக அரசு, தற்போது ஓய்வூதியத்திற்கும் ஒன்றிய அரசின் முடிவை எதிர்நோக்கி இருப்பது மீண்டுமொரு துரோகத்தை நிகழ்த்தத்தானே?

🧏‍♂️ மெய்யாகவே ஒன்றிய அரசு பழைய ஓய்வூதியத் திட்டம் குறித்து குழு ஏதும் அமைத்துள்ளதா?

உண்மை நிலவரம் என்னவெனில்,

*இந்திய ஒன்றிய அரசு பழைய ஓய்வூதியத் திட்டம் குறித்து எந்தவொரு குழுவையும் அமைக்கவே இல்லை.*

இறுதியாக, *நாடாளுமன்றத்தில் கேள்வி ஒன்றிற்கு ஒன்றிய அரசு சார்பில் அளிக்கப்பட்ட பதிலிலும், பழைய ஓய்வூதியத் திட்டத்தை மீண்டும் நடைமுறைப்படுத்தும் எண்ணமே இல்லை* என்றுதான் தெரிவிக்கப்பட்டது.

மேலும் 24.03.2023 அன்று மாண்புமிகு இந்திய ஒன்றிய நிதியமைச்சர் அறிவித்த அறிவிப்பின்படி, 06.04.2023-ல் தற்போது நடைமுறையில் உள்ள *NPS திட்டத்தில் ஓய்வூதியம் சார்ந்த சிக்கல்களைக் குறித்து ஆராய குழு அமைத்து இந்திய அரசின் நிதி அமைச்சக செலவுகள் துறை உத்தரவு* பிறப்பித்துள்ளது.

இக்குழு *100% NPS எனும் ஒன்றிய அரசின் தேசிய ஓய்வூதியத் திட்டம் குறித்த மீளாய்வுக் குழுதானே அன்றி, பழைய ஓய்வூதியத் திட்டத்தை நடைமுறைப்படுத்த அமைக்கப்பட்ட குழு அல்ல.* மேலும், PFRDA-வுடன் ஒப்பந்தம் செய்து கொள்ளாத தமிழ்நாட்டு அரசின் CPS திட்டம் எந்தவகையிலும் NPS திட்ட சீரமைப்புகளின் கட்டுப்பாட்டிற்குள் வராது.

உதாரணமாக NPS-ல் அரசு 14% பங்களிக்கிறது. CPS-ல் அரசின் பங்களிப்பு 10% மட்டும் தான். NPS-ல் பணிக்கொடை எனும் Gratuity உண்டு. CPS-ல் இல்லை. NPS-ல் 40% தொகை பங்குச் சந்தையில் முதலீடு செய்யப்பட்டு அதில் இலாபம் வந்தால் ஓய்வூதியமாகக் கிடைக்கும். CPS-ல் பணி ஓய்விற்குப்பின் அரசுக்கும் ஊழியருக்கும் தொடர்பேயில்லை.

இவ்வாறாக, இதுவரை NPS-ல் நடைமுறையில் உள்ள எதையுமே பின்பற்றாத சூழலில், தமிழ்நாடு அரசின் CPS-ஐ ஒழிக்க. . . . மாநில நிதியமைச்சர் ஒன்றிய அரசின் NPS மீளாய்வுக் குழுவின் (அதுவும் பழைய ஓய்வூதியத் திட்டம் சார்ந்த குழுவென) முடிவைப் பற்றி குறிப்பிட வேண்டிய தேவையே இல்லை. எனவே, செய்தியாளரின் கேள்விக்கு மாண்புமிகு தமிழ்நாடு நிதி & மனித மேலாண்மைத்துறை அமைச்சர் திரு.தங்கம் தென்னரசு அவர்கள் அளித்த பதில் அடிப்படையிலேயே, தமிழ்நாட்டு நடைமுறைக்கும் திமுகவின் வாக்குறுதிக்கும் 100% முரணானது என்பதோடே துளியும் தொடர்பற்றதும் தமது தேர்தல் வாக்குறுதியை மறுதலிப்பதுமாகும்.

PFRDA-வுடன் ஒப்பந்தம் செய்து கொண்ட பல்வேறு மாநிலங்களில்கூட இன்று பழைய ஓய்வூதியத் திட்டம் மீண்டும் நடைமுறைக்கு வந்துவிட்ட சூழலில், அதனுடன் ஒப்பந்தமிடாத தமிழ்நாட்டில் மீண்டும் பழைய ஓய்வூதியத் திட்டத்தை நடைமுறைப்படுத்துவதில் மாநில அரசிற்கு எவ்வித பெரிய சிக்கலும் எழப்போவதில்லை.

கூடுதலாக, மீண்டும் பழைய ஓய்வூதியத் திட்டத்தை நடைமுறைப்படுத்துவதன் மூலமாக CPS-ல் உள்ள அரசின் பங்களிப்புத் தொகையான சுமார் 30,000 கோடி ரூபாய் மாநில அரசுக்கு உடனடி உபரி நிதியாகக் கிடைப்பதோடே, மாதந்தோறும் ஒதுக்கியாக வேண்டிய 10% பங்குத் தொகைச் சுமையும் அறவே நீங்கும்.

எதார்த்தம் இவ்வாறாக இருக்க, மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.மு.க.ஸ்டாலின் அவர்களை ஊழியர் நலனில் அக்கறையுள்ளவர், நிச்சயம் செய்வாரென ஆசிரியர் & அரசு ஊழியர் இயக்கங்கள் இனியும் வெற்று நம்பிக்கை கொண்டிருப்பதால் எவ்விதப்பலனுமில்லை. ஏனெனில், முதல்வருக்கு ஆலோசனை வழங்கும் அமைச்சரே தமது கட்சி அளித்த வாக்குறுதிக்கு எதிரான ஆலோசனையைத்தான் தருவேன் என்று இரண்டாவது முறையாக எழுத்துப்பூர்வமாகப் பதில் அளித்துவிட்டார். தம்மையும்

தமது உறுப்பினர்களையும்

தமது வெற்று நம்பிக்கையால்

இனியும் ஏமாற்றிக் கொண்டிருக்காது,

சங்கப் பொறுப்பாளர்கள் தம்மை,

ஓய்வூதிய உரிமை மீட்கும்

மாவீரனாக உணர்ந்து

போராட்டக் களம்புக வேண்டும்.

அதெல்லாமில்லை

அவராவே செய்வாரென

வெற்று நம்பிக்கையில்

காலம் தாழ்த்துவீரெனில்,

இனி இறக்கப்போகும்

CPS பாதிப்பாளரின் குடும்பங்களுக்கு

நீங்கள் துரோகிகளாக அல்ல

எமனாகவே இருப்பீர்கள்!

எமனா?

மாவீரனா?

முடிவு உங்களுடையதே!

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.