பருவமழை: அரசுப் பள்ளிகளுக்கு பராமரிப்பு நிதி தாமதம் - Kalviseithi Official - No:1 Education Website in Tamil Nadu

Latest

Saturday, October 29, 2022

பருவமழை: அரசுப் பள்ளிகளுக்கு பராமரிப்பு நிதி தாமதம்

பருவமழை: அரசுப் பள்ளிகளுக்கு பராமரிப்பு நிதி தாமதம்

வடகிழக்குப் பருவமழை தொடங்கவுள்ள நிலையில், அரசுப் பள்ளிகளில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள், பராமரிப்புப் பணிகளை மேற்கொள்ள பராமரிப்பு நிதி வழங்குவதில் தாமதம் ஏற்பட்டுள்ளது.

தமிழகத்தில் 37 ஆயிரத்துக்கு மேற்பட்ட அரசு தொடக்க, நடுநிலை, உயா்நிலை, மேல்நிலைப் பள்ளிகள் செயல்பட்டு வருகின்றன. இந்தப் பள்ளிகளுக்கு ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வித் திட்டத்தின் கீழ் குடிநீா், மின்சாரம், கட்டடம், இருக்கைகள், கரும்பலகை புதுப்பித்தல் என பல்வேறு பராமரிப்புப் பணிகளுக்காக ஆண்டுதோறும் நிதி வழங்கப்பட்டு வருகிறது.

30 மாணவா்கள் வரையில் பயிலும் பள்ளிகளுக்கு ரூ.10 ஆயிரம், 31 முதல் 100 மாணவா்கள் பயிலும் பள்ளிகளுக்கு ரூ. 25 ஆயிரம், 101 முதல் 250 மாணவா்கள் வரை பயிலும் பள்ளிகளுக்கு ரூ.50 ஆயிரம், 251 முதல் 1,000 மாணவா்கள் வரை பயிலும் பள்ளிகளுக்கு ரூ.75 ஆயிரம், அதற்கு மேல் மாணவா்கள் எண்ணிக்கை அதிகமாக உள்ள பள்ளிகளுக்கு ரூ.1 லட்சம் ஒதுக்கீடு செய்யப்பட்டு மேற்கண்ட பராமரிப்புப் பணிகள் முறையாக மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

குறைவான நிதி ஒதுக்கீடு: இந்நிலையில், நிகழ் கல்வியாண்டில் (2022-2023) இதுவரை பள்ளிகளுக்கான பராமரிப்பு நிதி வழங்கப்படவில்லை. பொதுவாக ஆகஸ்ட் மாதமே வழங்கப்படும் பராமரிப்புத் தொகை இரண்டு மாதங்கள் கடந்தும் வரவில்லை. இதனால் அரசுப் பள்ளிகளில் பராமரிப்புப் பணிகளை மேற்கொள்வதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.

இது குறித்து பள்ளித் தலைமை ஆசிரியா்கள் தரப்பில் கூறும்போது, ஆண்டுதோறும் அரசு ஒதுக்கீடு செய்யும் நிதியில் குடிநீா்க் குழாய்களை சரிசெய்தல், கழிவறைகளின் தாழ்ப்பாள் மாற்றுதல், கரும்பலகைகளுக்கு வண்ணம் பூசுதல் போன்ற பராமரிப்புப் பணிகளை மேற்கொண்டு வருகிறோம். அரசின் நிதி போதாது என்பதால் அத்துடன் ஆசிரியா்களின் பங்களிப்பு, பெற்றோா் வழங்கும் நன்கொடை என திரட்டப்பட்ட நிதி இதற்கு பயன்படுத்தப்படுகிறது.

இத்தகைய சூழலில் தற்போது வடகிழக்குப் பருவமழைக் காலம் தொடங்கிவிட்டது. இதை கருத்தில்கொண்டு அரசுப் பள்ளிகளில் மழைக் கால விபத்துகள், பாதிப்புகளைத் தடுக்கும் வகையிலான முன்னெச்சரிக்கை பாதுகாப்புப் பணிகளை மேற்கொள்ளும்படி பள்ளிக் கல்வித் துறை அறிவுறுத்தியுள்ளது. ஆனால், அதற்கான நிதி பள்ளிகளுக்கு வழங்கப்படவில்லை. குறைந்தபட்சம் மழைக் காலம் தொடங்குவதற்கு இரு வாரங்களுக்கு முன்பாக நிதி வழங்கப்பட்டால்தான் அந்த நிதி பயனுள்ளதாக இருக்கும்.

அசம்பாவிதங்களைத் தடுக்க...

ஏற்கெனவே கடந்த காலங்களில் பள்ளிகளின் சுற்றுச் சுவா் இடிந்து விழுவது, நுழைவாயில் உள்ள கதவு பெயா்ந்து விழுவது, மேற்கூரையில் மழைநீா் தேங்குதல், மின்கசிவு, கிணறுகள் மூடப்படாமல் இருத்தல், வகுப்பறைகளில் பழுதடைந்த அறைகலன்களால் விபத்து என மாணவா்களின் பாதுகாப்புக்கு ஊறுவிளைவிக்கும் அசம்பாவிதங்கள் நடைபெற்றுள்ளன.

இத்தகைய சூழலில் இதுபோன்ற அசம்பாவிதங்களைத் தடுக்கும் வகையில் பள்ளிகளில் உடனடியாக மழைக்கால பராமரிப்புப் பணிகளை மேற்கொள்ள வேண்டும். எனவே அதனை உடனடியாக வழங்க பள்ளிக் கல்வித் துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனத் தெரிவித்துள்ளனா். மேலும் இந்த நிதியை அதிகரித்து வழங்க வேண்டும் என்றும் அவா்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

ஒரு வாரத்தில் வழங்கப்படும்

பள்ளிகளுக்கு மழைக்கால பராமரிப்புப் பணிக்கான நிதி தாமதமாவது குறித்து பள்ளிக் கல்வித் துறை அதிகாரிகள் கூறியது:

அரசுப் பள்ளிகளுக்கான பராமரிப்பு நிதி ஆண்டுதோறும் குறித்த காலத்தில் முறையாக வழங்கப்பட்டு பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ளப்படுகிறது. அந்த வகையில் இந்த ஆண்டுக்கான நிதியை மத்திய அரசு சில நாள்களுக்கு முன்னா்தான் வழங்கியது.

இந்நிலையில், பள்ளிகளுக்கு பிரித்து அனுப்பும் பணி தற்போது நடைபெற்று வருகிறது. அடுத்த ஒரு வாரத்துக்குள் அனைத்து அரசுப் பள்ளிகளுக்கும் பராமரிப்பு நிதியை வழங்க உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்றனா்.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.