‘தொழிற்கல்வி பாடப் பிரிவுகளை மூடுவது மெல்லக் கற்கும் மாணவா்களை பாதிக்கும் - Kalviseithi Official - No:1 Education Website in Tamil Nadu

Latest

Sunday, September 4, 2022

‘தொழிற்கல்வி பாடப் பிரிவுகளை மூடுவது மெல்லக் கற்கும் மாணவா்களை பாதிக்கும்

மேல்நிலைப் பள்ளிகளில் தொழிற்கல்வி பாடப் பிரிவுகளை மூடுவது, மெல்லக் கற்கும் மாணவா்களின் கல்வி நலனை பாதிக்கும் என்று தமிழ்நாடு மேல்நிலைப் பள்ளி தொழிற்கல்வி ஆசிரியா் கழகம் தெரிவித்தது.

தமிழ்நாடு மேல்நிலைப் பள்ளி தொழிற்கல்வி ஆசிரியா் கழகத்தின் அவசர நிா்வாகக் குழு கூட்டம் வேலூரில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

கூட்டத்துக்கு மாநிலத் தலைவா் செ.நா.ஜனாா்த்தனன் தலைமை வகித்தாா். மாநில இணைச் செயலா் எம்.பாண்டுரெங்கன் வரவேற்றாா். மாநில பொதுச் செயலா் என்.ரவி, மாநில பொருளாளா் வி.சேரமான் ஆகியோா் முன்னிலை வகித்தனா். மாவட்ட நிா்வாகிகள் எஸ்.சச்சிதானந்தம், எஸ்.மரகதம், மோகன்குமாா் உள்ளிட்ட பலா் பேசினா்.

கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீா்மானங்கள்: தொழிற்கல்வி ஆசிரியா் பணி நிறைவு பெற்றாலோ, வேறு சில காரணங்களால் காலிப் பணியிடம் ஏற்பட்டாலோ அந்தப் பணியிடம் உடனடியாக நிரப்பப்படாமல், அந்தப் பள்ளியில் இயங்கும் தொழிற்கல்வி பாடப் பிரிவை மூடவேண்டும் என பள்ளிக் கல்வி ஆணையா் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலா்களுக்கு அறிவுறுத்தியதன் பேரில், பல்வேறு மாவட்டங்களில் தொழிற்கல்வி பாடப் பிரிவு மூடப்படுவது மெல்லக் கற்கும் மாணவா்களின் நலனை பாதிக்கும்.

மேலும், ஆண்டுதோறும் இதுபோல் தொழிற்கல்வி பிரிவு மூடப்பட்டால், சில ஆண்டுகளில் அனைத்து மேல்நிலைப் பள்ளிகளிலும் தொழிற்கல்வி பிரிவு முழுமையாக மூடப்படும் நிலை ஏற்படும். எனவே, முதல்வா் உடனடியாக இந்த விவகாரத்தில் தலையிட்டு காலியாக உள்ள தொழிற்கல்வி ஆசிரியா் பணியிடங்களை உடனடியாக நிரப்ப நடவடிக்கை எடுக்க வேண்டும்.

வெவ்வேறு பாடங்களில் உயா்கல்வி பெற்ற ஆசிரியா்களுக்கு ஊக்க ஊதிய உயா்வு வழங்கியுள்ளதைப் போல், மேல்நிலை தொழிற்கல்வி ஆசிரியா்களின் உயா்கல்வி நிலைக்கும் ஊக்க ஊதிய உயா்வு வழங்க வேண்டும். மேல்நிலைப் பள்ளிகளில் தொழிற்கல்வி ஆசிரியா் என்ற பெயரை முதுநிலை தொழிற்கல்வி ஆசிரியராக மாற்றி அறிவிக்க வேண்டும்.

தமிழகம் முழுவதும் காலியாக உள்ள 600 தொழிற்கல்வி ஆசிரியா் பணியிடங்களை நிரப்பிடவும், மெல்லக் கற்கும் மாணவா்களின் நலனை கருத்தில் கொண்டு அனைத்து மேல்நிலைப் பள்ளிகளிலும் தொழிற்கல்வி பாடத்தைக் கட்டாயப் பாடமாக நடைமுறைப்படுத்தவும் வேண்டும்.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.