எந்த படிப்பு என்பதை விட எந்த கல்லூரியில் படிக்கிறோம் என்பதே முக்கியம்: அண்ணா பல்கலை - Kalviseithi Official - No:1 Education Website in Tamil Nadu

Latest

Wednesday, July 6, 2022

எந்த படிப்பு என்பதை விட எந்த கல்லூரியில் படிக்கிறோம் என்பதே முக்கியம்: அண்ணா பல்கலை

Engineering Studies : பொறியியல் படிப்பு குறித்து அண்ணா பல்கலைக்கழக துணைவேந்தர் வேல்ராஜ் மாணவர்களுக்கு பல்வேறு கருத்துக்களை தெரிவித்திருக்கிறார்

பொறியியல் படிப்புகளில் சேர மாணவர்கள் தீவிர ஆர்வம் காட்டி வரும் நிலையில், மாணவர்கள் எந்த படிப்பை தேர்வு செய்தாலும், தேர்வு செய்யும் படிப்பை விட, எந்த கல்லூரிகளில் சேர்கிறோம் என்பதே முக்கியம் என்றும் எனவே தரமான, நல்ல கல்லூரிகளை தேர்வு செய்வது அவசியம் என்றும், அண்ணா பல்கலைக்கழக துணைவேந்தர் வேல்ராஜ் அறிவுறுத்தியுள்ளார்.

பொறியியல் கல்லூரிகளில் சேருவதற்கு மாணவர்கள் விண்ணப்பித்து வருகின்றனர். இதுவரை ஒரு லட்சத்திற்கும் அதிகமான மாணவர்கள் விண்ணப்பித்துள்ளனர். இதைத் தொடர்ந்து விரைவில் மாணவர் சேர்க்கை கலந்தாய்வு நடைபெற இருக்கிறது. இந்த நிலையில், பொறியியல் படிப்பு குறித்து அண்ணா பல்கலைக்கழக துணைவேந்தர் வேல்ராஜ் மாணவர்களுக்கு பல்வேறு கருத்துக்களை தெரிவித்திருக்கிறார்.

தற்போது பொறியியல் படித்து வரக்கூடிய மாணவர்கள் நடப்பு கல்வியாண்டில் சேரக் கூடிய மாணவர்கள் என அனைவருக்குமே அவர்களுடைய திறன்களை வளர்ப்பதற்கு, தொழில்துறையினரோடு புரிந்துணர்வு ஒப்பந்தம் மேற்கொண்டு இருக்கிறோம் என்றும், ஆறு மாத காலங்கள் நேரடியாக சம்பந்தப்பட்ட தொழில் துறைக்கு சென்று மாணவர்கள் பயிற்சி பெறுவார்கள் என்றும், இதன் மூலமாக அவர்கள் படிப்பை முடித்ததும் உடனடியாக வேலை வாய்ப்புகள் கிடைக்கும் என்றும் துணைவேந்தர் வேல்ராஜ் தெரிவித்திருக்கிறார்.

மேலும் எத்தகைய பாடப்பிரிவை தேர்வு செய்தாலும், அதை விட மாணவர்கள் சேர்க்கின்ற கல்லூரியின் தரம் முக்கியம் என்றும், எனவே தரமான கல்லூரியை, சிறப்பான கல்லூரியை தேர்வு செய்வது மிகவும் முக்கியம் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார். தரமான கல்லூரியை அடையாளம் காண்பதற்கு, முந்தைய ஆண்டுகளில் கல்லூரிகளின் செயல்பாடுகள், கல்லூரிகள் பெற்ற தேர்ச்சி விகிதம் உள்ளிட்டவற்றை இணையதளத்தில் பார்த்து தெரிந்து கொள்ளலாம் என்றும், அதன் மூலம் மாணவர்கள் ஒரு முடிவுக்கு வர இயலும் என்றும் துணைவேந்தர் வேல்ராஜ் அறிவுரை வழங்கியுள்ளார்.

தற்சமயம் பொறியியல் படிப்பில் சேரக்கூடிய மாணவர்களுக்கு வேலைவாய்ப்பு என்பது மிகவும் சவாலான ஒன்றாக உள்ளது. நல்ல கல்லூரியில் படிக்கின்ற போது மட்டுமே வேலை வாய்ப்பு உறுதிப்படுத்தப்படுகிறது. தரம் குறைவான கல்லூரிகளில் படிக்கின்ற போது அவர்களுக்கான வேலைவாய்ப்பு கிடைப்பது மிகவும் சவாலான ஒன்றாக உள்ளது.

இதனை கருத்தில் கொண்டே மாணவர்கள் எத்தகைய கல்லூரிகளில் தாங்கள் சேருகிறோம் என்பதை முன்கூட்டியே தெளிவுபடுத்திக்கொள்ள வேண்டும் என்கிற கருத்தை பெரும்பாலான கல்வியாளர்கள் முன்வைக்கின்றனர். அண்மையில் அண்ணா பல்கலைக் கழகம் தமிழகத்தில் உரிய கட்டமைப்பு வசதிகள் இல்லாத பேராசிரியர்கள் இல்லாத 225 பொறியியல் கல்லூரிகளுக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

இரண்டு வார காலத்தில் தங்கள் கல்லூரிகளில் இருக்கும் குறைபாட்டை சரிசெய்து அண்ணா பல்கலைக்கழகத்திற்கு தெரிவிக்க வேண்டும் என்றும் அண்ணா பல்கலைக்கழகம் உத்தரவிட்டுள்ளது. எனவே இத்தகைய பின்னணியில் கல்லூரிகளை மாணவர்கள் தேர்வு செய்வது மிகவும் இன்றியமையாத ஒன்றாக உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.