வெளிநாட்டு மருத்துவ மாணவர்கள் பயிற்சி பெறுவதில் சிக்கல் ஏன்? - Kalviseithi Official - No:1 Education Website in Tamil Nadu

Latest

Tuesday, April 19, 2022

வெளிநாட்டு மருத்துவ மாணவர்கள் பயிற்சி பெறுவதில் சிக்கல் ஏன்?

''பிலிப்பைன்சில் மருத்துவம் படித்த மாணவர்கள், தமிழக மருத்துவமனைகளில் பயிற்சி பெற அனுமதிக்காததற்கு, உச்ச நீதிமன்ற தடையே காரணம்,'' என, மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் சுப்பிரமணியன் தெரிவித்தார்.

கவன ஈர்ப்பு தீர்மானத்தின் மீது நடந்த விவாதம்:

தமிழக வாழ்வுரிமை கட்சி - வேல்முருகன்:

பிலிப்பைன்ஸ் நாட்டில், தமிழக மாணவர்கள் நுாற்றுக்கும் மேற்பட்டோர், மருத்துவம் இறுதியாண்டு படித்து வந்தனர். கொரோனா காரணமாக, அந்த மாணவர்களை மத்திய அரசு, இந்தியாவுக்கு அழைத்து வந்தது. அவர்கள் ஆறு மாத கல்வியை, 'ஆன்லைனில்' நிறைவு செய்தனர். மத்திய அரசு தேர்வில் தேர்ச்சி பெற்று விட்டனர்.மருத்துவராக பணிபுரிய, அரசு மருத்துவமனைகளில், ஓராண்டு பயிற்சி பெற வேண்டும்.

ஆறு மாதம் ஆன்லைனில் படித்ததால், பயிற்சிக்கு அனுமதிக்க மாட்டோம் என, மருத்துவக் கல்வி இயக்குனரகம் கூறியுள்ளது. அவர்கள் பயிற்சி முடிக்க வாய்ப்பளிக்க வேண்டும். அமைச்சர் சுப்பிரமணியன்: சீனா, பிலிப்பைன்ஸ் போன்ற நாடுகளில் படித்தவர்கள், மருத்துவமனையில் பயிற்சி பெறுவதில் பிரச்னை உள்ளது. வெளிநாடுகளில் மருத்துவ படிப்பை முடித்ததும், இங்கு மத்திய அரசு நடத்தும் தேர்வை எழுத வேண்டும். அதன்பின், எம்.ஜி.ஆர்., மருத்துவ பல்கலையில் தங்கள் பெயரைப் பதிவு செய்ய வேண்டும். பின்னர், மருத்துவமனையில் பயிற்சிக்கு செல்ல வேண்டும்.வெளிநாடுகளில் படித்த மாணவர்கள், 10 சதவீதம் பேருக்கு பயிற்சி அளிக்கலாம் என்பது, ௨௦௨௧ நவம்பர் மாதம், 7.5 சதவீதமாக குறைக்கப்பட்டது. இதனால், தமிழகத்தில் உள்ள, 36 அரசு மருத்துவ கல்லுாரி மருத்துவமனைகளில், 384 மாணவர்களை மட்டும் பயிற்சிக்கு அனுப்ப முடிகிறது.

இதை, 20 சதவீதமாக உயர்த்தக் கோரி, மத்திய அரசுக்கு முதல்வர் கோரிக்கை விடுத்தார். டில்லியில் பிரதமரை சந்தித்தபோதும் வலியுறுத்தினார்.இதற்கு தீர்வு காணப்பட்டால், 1,010 மாணவர்கள் பயிற்சி பெற முடியும். சீனா, பிலிப்பைன்ஸ் மாணவர்கள், ஆறு மாதங்கள் ஆன்லைனில் படித்திருந்தாலும், அவர்களை பயிற்சிக்கு அனுமதிக்கும்படி, சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது. இதை எதிர்த்து, மத்திய அரசு உச்ச நீதிமன்றம் சென்றது.

'ஆன்லைனில் படித்தவர்கள் பயிற்சி பெற அனுமதிக்கக் கூடாது' என, உச்ச நீதிமன்றம் தடை விதித்தது. இதனால், அந்த மாணவர்கள் பயிற்சி பெறுவதில் தடை ஏற்பட்டுஉள்ளது. இது தொடர்பாகவும், பிரதமரிடம் முதல்வர் வலியுறுத்தி உள்ளார்.இவ்வாறு விவாதம் நடந்தது.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.