வகுப்பறையிலேயே மது அருந்திய அரசுப் பள்ளி மாணவிகள்! - வைரல் வீடியோவால் தலைமை ஆசிரியை அதிரடி இடமாற்றம்! - Kalviseithi Official - No:1 Education Website in Tamil Nadu

Latest

Friday, August 14, 2026

வகுப்பறையிலேயே மது அருந்திய அரசுப் பள்ளி மாணவிகள்! - வைரல் வீடியோவால் தலைமை ஆசிரியை அதிரடி இடமாற்றம்!


வகுப்பறையிலேயே மது அருந்திய அரசுப் பள்ளி மாணவிகள்! - வைரல் வீடியோவால் தலைமை ஆசிரியை அதிரடி இடமாற்றம்!

குமரி மாவட்டத்தில் அதிர்ச்சி: வகுப்பறையில் மது அருந்திய அரசு பள்ளி மாணவிகள்!

தக்கலை: கன்னியாகுமரி மாவட்டம் தக்கலை அரசு மேல்நிலைப்பள்ளியில், பள்ளி சீருடையில் இருந்த மாணவிகள் சிலர் வகுப்பறையிலேயே அமர்ந்து மது அருந்தும் அதிர்ச்சிகரமான வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி தமிழ்நாடு முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த விவகாரத்தைத் தொடர்ந்து, பள்ளியின் தலைமை ஆசிரியை உடனடியாக பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளார்.


சிறப்புப் பயிற்சி வகுப்பில் நடந்தது என்ன?

தக்கலை அரசு மேல்நிலைப்பள்ளியானது, நீட் (NEET), கியூட் (CUET) மற்றும் ஜே.இ.இ (JEE) போன்ற தேசிய அளவிலான போட்டித் தேர்வுகளுக்கான சிறப்புப் பயிற்சி மையமாகவும் செயல்பட்டு வருகிறது.

கடந்த ஆகஸ்ட் 1-ஆம் தேதி சனிக்கிழமை அன்று, நுழைவுத் தேர்வுகளுக்கான சிறப்பு பயிற்சி வகுப்புகள் பள்ளியில் நடைபெற்றுள்ளன. இதில் ஏராளமான மாணவ-மாணவிகள் கலந்துகொண்டனர். வகுப்புகள் முடிந்து பெரும்பாலான மாணவர்கள் வீட்டிற்குச் சென்ற பிறகு, சில மாணவிகள் மட்டும் வகுப்பறையிலேயே தங்கியுள்ளனர்.

அப்போது, அம்மாணவிகள் வகுப்பறைக்குள் அமர்ந்து மதுபானம் அருந்தியதோடு, வெளியிலிருந்து வாங்கி வரப்பட்ட அசைவ உணவுகளையும் சாப்பிட்டுள்ளனர். இதனை அங்கிருந்த சக மாணவி ஒருவர் தனது கைபேசியில் வீடியோவாகப் பதிவு செய்துள்ளார்.


சமூக வலைதளங்களில் வைரலான வீடியோ!

மாணவிகள் மது அருந்தும் இந்தக் காட்சிகள் சமீபத்தில் இணையதளங்களில் வெளியாகி காட்டுத்தீ போல பரவியது. "மதி வளர்க்கும் கல்விக்கூடங்கள் மதுக்கூடங்களாக மாறுகிறதா?" என சமூக ஆர்வலர்களும், பெற்றோர்களும் கடும் கண்டனத்தையும் அதிர்ச்சியையும் பதிவு செய்தனர்.


ஆட்சியர் உத்தரவு - தலைமை ஆசிரியை அதிரடி இடமாற்றம்!

இந்தச் சம்பவம் குறித்த வீடியோ வைரலானதை அடுத்து, கன்னியாகுமரி மாவட்ட ஆட்சியர் உடனடி விசாரணைக்கு உத்தரவிட்டார். முதற்கட்ட விசாரணையில், வீடியோவில் இருப்பது அப்பள்ளி மாணவிகள்தான் என்பதும், சம்பவம் பள்ளி வளாகத்தில் நடைபெற்றதுதான் என்பதும் உறுதி செய்யப்பட்டது.

இதனைத் தொடர்ந்து, பள்ளி வளாகத்தைக் சரியாகக் கண்காணிக்கத் தவறியதாகக் கூறி, பள்ளியின் தலைமை ஆசிரியை பிரமிளா எவாஞ்சலின் அவர்களை நாகர்கோவில் வடசேரி அரசு மேல்நிலைப்பள்ளிக்கு பணியிட மாற்றம் செய்து முதன்மை கல்வி அலுவலர் உத்தரவிட்டுள்ளார்.


மது மற்றும் உணவு வாங்கித் தந்தது யார்? - போலிஸ் விசாரணை

வைரலான வீடியோ உரையாடல்களின் அடிப்படையில் தக்கலை காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில் கிடைத்த முக்கியத் தகவல்கள்:

  • மாணவிகளுக்குத் தேவையான மதுபாட்டில்களை அவர்களின் ஆண் நண்பர் ஒருவர் டாஸ்மாக் கடையில் இருந்து வாங்கி வந்து கொடுத்துள்ளார்.
  • அவரே உணவுகளையும் பார்சல் செய்து கொடுத்துச் சென்றது தெரியவந்துள்ளது.
  • தற்போது அந்த நபரைப் பிடித்துப் காவல்துறையினர் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

பொதுமக்கள் மற்றும் பெற்றோர்களின் கொதிப்பு!

பள்ளிப் பருத்திலேயே மாணவர்கள் இதுபோன்ற போதை கலாச்சாரத்தில் சிக்குவது சமூகத்திற்குப் பெரும் அச்சுறுத்தலாக மாறியுள்ளது எனப் பெற்றோர்கள் கவலை தெரிவித்துள்ளனர்.

"பள்ளிகளைச் சுற்றியுள்ள கடைகளில் சட்டவிரோதமாக மது, கஞ்சா மற்றும் போதைப்பொருட்கள் விற்பனை செய்யப்படுகிறதா என்பதை காவல் துறையினர் தீவிரமாகச் சோதனையிட வேண்டும். மேலும், சிறப்பு வகுப்புகள் நடக்கும்போது ஆசிரியர்களின் கண்காணிப்பை பலப்படுத்த வேண்டும்"

என பொதுமக்கள் மற்றும் கல்வி ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். இச்சம்பவம் குறித்து காவல்துறையினரும், கல்வித்துறையினரும் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.