டெங்கு காய்ச்சல் பரவுவதை தடுக்க மேற்கொள்ள வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தொடர்பாக DSE & DEE இணைச் செயல்முறைகள் - Kalviseithi Official - No:1 Education Website in Tamil Nadu

Latest

Wednesday, September 23, 2026

டெங்கு காய்ச்சல் பரவுவதை தடுக்க மேற்கொள்ள வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தொடர்பாக DSE & DEE இணைச் செயல்முறைகள்



டெங்கு காய்ச்சல் பரவுவதை தடுக்க மேற்கொள்ள வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தொடர்பாக DSE & DEE இணைச் செயல்முறைகள்!

**தமிழ்நாடு பள்ளிக் கல்வி மற்றும் தொடக்கக் கல்வி இயக்குநரின் இணைச் செயல்முறைகள், சென்னை – 06.**

**ந.க.எண். 53983 / எம்1/இ1/ 2026, நாள் : 22.09.2026.**

**பொருள் :**

பள்ளிக் கல்வி - பொது சுகாதாரம் - டெங்கு காய்ச்சல் பரவுதல் - முன்னெச்சரிக்கை மற்றும் விழிப்புணர்வு நடவடிக்கைகள் - மாவட்டக் கல்வி அலுவலக வளாகம், வட்டாரக் கல்வி அலுவலக வளாகம் மற்றும் பள்ளி வளாகங்களில் தூய்மைப் பணிகள் மற்றும் கொசு உற்பத்தித் தடுப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளுதல் – புதன்கிழமை தோறும் சிறப்பு தூய்மைப் பணி (Mission Mode Mass Clean-up) அரசு அலுவலக வளாகங்களில் மேற்கொள்ளுதல் - அறிவுரைகள் வழங்குதல் – தொடர்பாக.

**பார்வை :** மதிப்புமிகு பள்ளிக் கல்வித் துறை அரசு செயலாளர், துறைத் தலைவர்களுக்கு வழங்கிய அறிவுரைகள், நாள்: 21.09.2026 ---

பார்வையில் காணும் மதிப்புமிகு பள்ளிக் கல்வித் துறை அரசு செயலாளர் அவர்கள், துறைத் தலைவர்களுக்கு 21.09.2026 அன்று வழங்கிய அறிவுரையில்

> **"அனைத்துத் துறைத் தலைவர்களும், தங்கள் துறைக்குட்பட்ட களநிலை அலுவலர்களிடம், ஒவ்வொரு புதன்கிழமையும் அந்தந்த வளாகங்களில் தண்ணீர் தேங்காதவாறு உறுதி செய்து, அனைத்துக் கழிவுகளையும் அகற்றி, வளாகங்களைத் தூய்மையாக்கும் வகையில் மாபெரும் தூய்மைப் பணியை (Mass Clean-up) மேற்கொள்ளுமாறு தெரிவிக்க வேண்டும்"** >  என தெரிவித்துள்ளார்கள்.

எனவே, அனைத்து முதன்மைக் கல்வி அலுவலர்கள் மற்றும் மாவட்டக் கல்வி அலுவலர்கள், வட்டாரக் கல்வி அலுவலர்கள் மற்றும் தலைமை ஆசிரியர்கள் / ஆசிரியர்கள் பின்வரும் அறிவுரைகளை கவனமாக பின்பற்றி தத்தமது அலுவலகங்கள் / பள்ளிகளை தூய்மையாகப் பராமரித்து நடந்திட அறிவுறுத்தப்படுகிறார்கள். ### வட்டாரக் கல்வி அலுவலர்கள் பள்ளி வாரியாக கண்காணிப்பு

* தங்கள் கட்டுப்பாட்டின் கீழுள்ள அனைத்து பள்ளிகளிலும் புதன்கிழமை தோறும் தூய்மைப் பணிகள் நடைபெறுவதை உறுதி செய்ய வேண்டும்.

* ஒவ்வொரு பள்ளியிலும் **"கழிவு இல்லை - நீர்த்தேக்கம் இல்லை - கொசு உற்பத்தி இல்லை"** என்ற நிலையை ஏற்படுத்த நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.

* பள்ளி வளாகத்தில் காணப்படும் குறைபாடுகளை தலைமை ஆசிரியரின் கவனத்திற்கு கொண்டு வந்து உடனடியாக சரிசெய்ய வேண்டும்.

* பள்ளி வளாகங்களில் நீர் தேங்குவதற்கான வாய்ப்புள்ள இடங்கள் கண்டறியப்பட்டு, அவற்றை உடனடியாக சரிசெய்ய உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.

* பழைய கட்டிடங்கள், பயன்பாட்டில் இல்லாத அறைகள் அல்லது பகுதிகளில் கழிவுகள் குவிந்து கிடந்தால், அவற்றை பாதுகாப்பான முறையில் அகற்றுவதற்கு சம்பந்தப்பட்ட உள்ளாட்சி அமைப்புகள் / துறைகளுடன் ஒருங்கிணைந்து நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.

* பள்ளிகளில் தூய்மைப் பணிகள் முறையாக நடைபெறுகின்றனவா என்பதை தொடர் கள ஆய்வுகள் மூலம் கண்காணிக்க வேண்டும்.

* நீர் தேங்கியுள்ள அல்லது கொசு உற்பத்திக்கான வாய்ப்பு அதிகம் உள்ள பள்ளிகளுக்கு முன்னுரிமை அளித்து உடனடி நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.

பள்ளி வளாகங்களில் புதன்கிழமை தோறும் மாபெரும் தூய்மைப் பணி: டெங்கு காய்ச்சல் பரவுவதை தடுக்க மேற்கொள்ள வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தொடர்பாக DSE & DEE இணைச் செயல்முறைகள்



### பள்ளித் தலைமை ஆசிரியர்களுக்கான அறிவுறுத்தல்கள்

அனைத்து தலைமை ஆசிரியர்களும் பள்ளி வளாகத் தூய்மைப் பணியை வழக்கமான பணியாக மட்டுமன்றி, தொடர்ந்து மேற்கொள்ள வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக கருதி செயல்பட வேண்டும்.

#### புதன்கிழமை சிறப்பு தூய்மைப் பணி

ஒவ்வொரு புதன்கிழமையும் பள்ளி வளாகம் முழுவதும் ஆய்வு செய்து:

* தேவையற்ற கழிவுகளை அகற்றுதல்;

* குப்பைகள் குவிந்து கிடப்பதைத் தவிர்த்தல்;

* மழைநீர் தேங்கியுள்ள பகுதிகளை கண்டறிந்து நீரை அகற்றுதல்;

* நீர் தேங்கக்கூடிய பொருட்களை அகற்றுதல் அல்லது முறையாக மூடி வைத்தல்;

#### குறிப்பாக ஆய்வு செய்ய வேண்டிய பகுதிகள்

* மொட்டை மாடி

* மழைநீர் வடிகால்

* குடிநீர் தொட்டிகள்

* கழிப்பறைகள் மற்றும் அவற்றை சுற்றியுள்ள பகுதிகள்

* பள்ளி சமையலறை

* விளையாட்டு மைதானம்

* கட்டிடங்களின் பின்புறப் பகுதிகள்

* சுற்றுச்சுவர் ஓரங்கள்

* மரங்கள் மற்றும் புதர்கள் அடர்ந்த பகுதிகள்

* பயன்படுத்தப்படாத பொருட்கள் வைக்கப்பட்டுள்ள இடங்கள்

* பழைய டயர்கள், பிளாஸ்டிக் மற்றும் உலோகக் கொள்கலன்கள் வைக்கப்பட்டுள்ள இடங்கள்.

#### அறிக்கை

ஒவ்வொரு புதன்கிழமையும் மேற்கொள்ளப்பட்ட தூய்மைப் பணிகளின் நிலை குறித்து தலைமை ஆசிரியர்களிடமிருந்து தகவல் பெற்று, வட்டார அளவில் கண்காணிப்பு செய்து, தேவையான நடவடிக்கைகளை மேற்கொண்டு அதன் அறிக்கையை சம்பந்தப்பட்ட மாவட்டக் கல்வி அலுவலர்களுக்கு சமர்ப்பிக்க வேண்டும்.

பள்ளி வளாகங்களில் புதன்கிழமை தோறும் மாபெரும் தூய்மைப் பணி: டெங்கு காய்ச்சல் பரவுவதை தடுக்க மேற்கொள்ள வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தொடர்பாக DSE & DEE இணைச் செயல்முறைகள்



### கூடுதல் பாதுகாப்பு மற்றும் பராமரிப்பு வழிமுறைகள்

* குடிநீர் தொட்டிகள் மற்றும் பிற நீர்த்தொட்டிகள் மூடப்பட்டிருப்பதை உறுதி செய்தல்;

* மழைநீர் வடிகால்களில் அடைப்பு இருந்தால் அவற்றை சரிசெய்தல்;

* புதர்கள் மற்றும் தேவையற்ற செடிகள் அதிகமாக வளர்ந்துள்ள பகுதிகளை சுத்தம் செய்தல்;

* கழிப்பறைகள் மற்றும் கை கழுவும் பகுதிகளை சுத்தமாக வைத்திருத்தல்;

* பள்ளி சமையலறை மற்றும் அதன் சுற்றுப்புறங்களை சுகாதாரமாக பராமரித்தல்;

* பள்ளி வளாகத்தில் பயன்படுத்தப்படாமல் கிடக்கும் பழைய பொருட்களை வகைப்படுத்தி அகற்றுதல் ஆகிய பணிகளை மேற்கொள்ள வேண்டும்.

* தொடர் மழை காரணமாக பள்ளியின் சுற்றுச்சுவர் மிகுந்த ஈரப்பதத்துடன் காணப்படலாம். எனவே, சுற்றுச்சுவர் உறுதி தன்மையை கண்காணிக்க வேண்டும். பழுதடைந்துள்ள சுற்றுச்சுவர் இருப்பின் அப்பகுதிக்கு மாணவர்கள் அருகில் செல்லாமல் இருக்க சுற்றி வேலி அல்லது தடுப்புகளை ஏற்படுத்திட வேண்டும்.

* மழையின் காரணமாக பள்ளியின் வகுப்பறைகள் மற்றும் கழிப்பறைகள் ஏதேனும் பாதிக்கப்பட்டிருப்பின், அத்தகைய வகுப்பறைகள் மற்றும் கழிப்பறைகள் பயன்படுத்தாமல் பூட்டிவைக்க கேட்டுக் கொள்ளப்படுகிறது.

* பள்ளியில் உள்ள அனைத்துக் கட்டிடங்களின் மேற்கூரைகள், கைப்பிடிச்சுவர்கள், மேல்நிலை நீர்த்தேக்க தொட்டிகள் மற்றும் சன்னல்கள், கதவுகளுக்கு மேல் உள்ள வெயில் மறைப்பு சுவர்கள் உறுதியாக உள்ளனவா என்று அவ்வப்போது ஆய்வு செய்து உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். மேற்கூரையில் நீர் தேங்காவண்ணமும், தேங்கியுள்ள நீரை உடனடியாக வெளியேற்றவும் நடவடிக்கை மேற்கொள்ளவேண்டும்.

* பள்ளி வளாகத்தில், கட்டிட பராமரிப்பு பணிகள் மற்றும் புதிய கட்டிடங்கள் கட்டும் பணிகள் நடைபெறும் இடங்களில் உள்ள பள்ளங்களை சுற்றி பாதுகாப்பான தடுப்பு அமைக்கவும் நடவடிக்கை மேற்கொள்ளப்படவேண்டும்.

* மாணவர்கள் சாலையில் மழைநீர் காலவாய்கள் பாதாள சாக்கடைக் குழிகள் இருக்கும் இடங்களில் கவனமாக செல்ல அறிவுறுத்துவதுடன் அதனை தவிர்க்க மாணவர்கள் மற்றும் பெற்றோர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த தலைமையாசிரியர்கள் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

* பருவகால மாற்றங்களால் மாணாக்கர்களுக்கு ஏற்படக்கூடிய நோய்களிலிருந்து (குறிப்பாக டெங்கு, சிக்குன்குனியா போன்ற காய்ச்சல்களிலிருந்து) பாதுகாத்துக் கொள்வதற்கான தேவையான அறிவுரைகளை வழங்குவதுடன், ஏற்கனவே அறிவுறுத்தியுள்ளபடி நடவடிக்கைகளும் மேற்கொள்ளவேண்டும். மேலும், மாணவர்களுக்கு காய்ச்சல் இருப்பின் காலதாமதம் இல்லாமல் உடனடியாக அருகில் உள்ள அரசு மருத்துவமனை / ஆரம்ப சுகாதார நிலையங்களுக்கு சென்று மருத்துவ சிகிச்சை மேற்கொள்ள அறிவுறுத்தவேண்டும். ### ஆசிரியர்களின் பொறுப்புகள்

அனைத்து ஆசிரியர்களும் பள்ளி வளாகத் தூய்மை மற்றும் மாணவர் சுகாதாரப் பாதுகாப்பில் செயல்பட்டு பங்காற்ற வேண்டும்.

1. தங்களுக்கு ஒதுக்கப்பட்ட வகுப்பறை மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளை தினசரி கண்காணிக்க வேண்டும்.

2. மாணவர்களுக்கு:

* குப்பைகளை கண்ட இடத்தில் போடாமல் இருப்பது;

* தண்ணீர் தேங்கும் வகையில் பொருட்களை வெளியில் விடாமல் இருப்பது;

* குடிநீரை வீணாக்காமல் இருப்பது;

* பள்ளி வளாகத்தை தூய்மையாக வைத்திருப்பது;

* கொசு உற்பத்தியைத் தடுப்பதன் அவசியம் ஆகியவை குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும்.

3. பள்ளி வளாகத்தில் நீர் தேக்கம், கழிவுக் குவியல் அல்லது கொசு உற்பத்திக்கான வாய்ப்பு காணப்பட்டால், உடனடியாக தலைமை ஆசிரியரின் கவனத்திற்கு கொண்டு வர வேண்டும்.

4. மாணவர்களை ஆபத்தான தூய்மைப் பணிகளில் நேரடியாக ஈடுபடுத்தக் கூடாது. குறிப்பாக கழிவுநீர், கழிவுகள், கூரைகள், மொட்டை மாடிகள், கூர்மையான பொருட்கள், இரசாயனப் பொருட்கள் அல்லது ஆபத்தான பகுதிகளை மாணவர்கள் சுத்தம் செய்யக் கூடாது.

--- ### பள்ளி வளாகத்தில் கழிவுகளை அகற்றுதல்

பள்ளிகளில் குவிந்து கிடக்கும் அனைத்து வகையான கழிவுகளும் உரிய முறையில் அகற்றப்பட வேண்டும்.

* மக்கா மற்றும் மக்காத கழிவுகளை முறையாகப் பிரிக்க வேண்டும்.

* மறுசுழற்சி செய்யக்கூடிய பொருட்களை உரிய முறையில் அகற்ற வேண்டும்.

* பயன்படுத்தப்படாத பொருட்களை பள்ளி வளாகத்தில் நீண்டகாலமாக குறித்து வைக்கக் கூடாது.

* உள்ளாட்சி அமைப்புகளுடன் ஒருங்கிணைந்து குப்பைகளை முறையாக அகற்ற வேண்டும்.

* பள்ளி வளாகத்தில் எந்தவிதமான கழிவுக் குவியலும் நீண்டகாலம் காணப்படாதவாறு நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.

#### உள்ளாட்சி அமைப்புகளுடன் ஒருங்கிணைப்பு

பள்ளி வளாகத்திற்கு வெளியே, பள்ளியை ஒட்டியுள்ள பகுதிகளில் கழிவுகள் குவிந்து கிடந்தாலோ அல்லது நீர் தேங்கியிருந்தாலோ, தலைமை ஆசிரியர்கள் உரிய நகர்ப்புற / ஊரக உள்ளாட்சி அமைப்புகளின் அலுவலர்களுக்கு தகவல் தெரிவித்து அகற்ற நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.

தேவையான இடங்களில்:

* குப்பை அகற்றுதல்

* புதர் அகற்றுதல்

* வடிகால் சீரமைத்தல்

* நீர் தேக்கம் அகற்றுதல்

* கொசு தடுப்பு நடவடிக்கைகள்

ஆகியவற்றை உள்ளாட்சி அமைப்புகளுடன் ஒருங்கிணைந்து மேற்கொள்ள வேண்டும்.

--- ### முக்கியமான அறிவுறுத்தல்

டெங்கு காய்ச்சல், ஏடிஸ் வகை கொசுவால் தான் உண்டாகிறது. இக்கொசுக்கள் அதிக வீரியம் கொண்டவையாக தற்போது மாறி வருகின்றன. இதற்கு காரணம், நீண்டகாலமாக பொது இடங்களில் தேங்கி கிடக்கும் கழிவு மூலப்பொருட்களில் இருந்து அவை உற்பத்தியாவதே ஆகும். தற்போது பல்வேறு பொது இடங்களில், கழிவு மூலப்பொருட்கள் அப்புறப்படுத்தாமல் அப்படியே இருப்பதை காண முடிகிறது. இவற்றில் தேங்கும் மழைநீரில் உண்டாகும் ஏடிஸ் கொசு, டெங்கு காய்ச்சல் உண்டாக்குவதோடு, அவை அங்கேயே முட்டையிடுகின்றன. இதனால், முட்டையில் இருந்து உருவாகும் நிலையிலேயே டெங்கு வைரஸை உடலில் சுமக்கிறது. இவை, பல்கி பெருகுவதோடு, வேகமாக காய்ச்சல் பாதிப்பை உண்டாக்குகிறது. பொது சுகாதாரத்துறையுடன் உள்ளாட்சி அமைப்புகள் இணைந்து, பொது இடத்தை சுத்தப்படுத்தினால் மட்டுமே, டெங்கு காய்ச்சல் தாக்கத்தை குறைக்க முடியும் என வல்லுநர்கள் குறிப்பிடுகின்றனர். > **"நோய்நாடி நோய்முதல் நாடி அதுதணிக்கும்** > 

> **வாய்நாடி வாய்ப்பச் செயல்"** > 

> — *குறள் 948* > 

என்ற வள்ளுவரின் வாக்கிற்கேற்ப நோய் ஏற்படுவதற்கான காரணத்தை முன்கூட்டியே கண்டறிந்து, அதனைத் தடுப்பதற்கான உரிய நடவடிக்கைகளை மேற்கொள்வதே சிறந்த முன்னெச்சரிக்கை நடவடிக்கையாகும்.

எனவே, பள்ளித் தூய்மைப் பணியின் நோக்கம் மாணவர்களிடம் தூய்மை குறித்த பழக்கத்தை ஏற்படுத்துவதும், பள்ளி வளாகத்தை பாதுகாப்பாகவும் சுகாதாரமாகவும் பராமரிப்பதுமே ஆகும். மாணவர்களின் பாதுகாப்பிற்கு எந்தவித பாதிப்பும் ஏற்படாத வகையில் பணிகள் மேற்கொள்ளப்பட வேண்டும். ஆபத்தான கழிவுகள், கூர்மையான பொருட்கள், கழிவுநீர், மின்சாரப் பகுதிகள், உயரமான இடங்கள் போன்றவற்றில் மாணவர்களை ஈடுபடுத்தாமல், உரிய பெரியவர்கள் மூலம் பணிகளை மேற்கொள்ள வேண்டும்.

அனைத்து மாவட்டக் கல்வி அலுவலர்கள், வட்டாரக் கல்வி அலுவலர்கள், தலைமை ஆசிரியர்கள் மற்றும் ஆசிரியர்கள் மேற்கண்ட அறிவுரைகளை முழுமையாகப் பின்பற்றி, பள்ளி வளாகங்களில் கழிவுகள் மற்றும் நீர்த்தேக்கம் இல்லாத நிலையை தொடர்ந்து உறுதி செய்ய வேண்டும். மாணவர்களின் நலன் மற்றும் பொது சுகாதாரத்தை கருத்தில் கொண்டு இப்பணியை ஒரு தொடர்ச்சியான இயக்கமாக (Mission Mode Mass Clean-up) மேற்கொள்ள வேண்டும் என அறிவுறுத்தப்படுகிறது.

முதன்மைக் கல்வி அலுவலர்கள் தங்கள் வருவாய் மாவட்ட நிர்வாகத்திற்குட்பட்ட மாவட்டக் கல்வி அலுவலக வளாகங்கள், வட்டாரக் கல்வி அலுவலக வளாகங்கள் மற்றும் பள்ளி வளாகங்களில் தூய்மைப் பணிகள் மற்றும் கொசு உற்பத்தித் தடுப்பு நடவடிக்கைகள் சார்ந்த மாவட்டக் கல்வி அலுவலர்கள், வட்டாரக் கல்வி அலுவலர்கள், தலைமை ஆசிரியர்கள் மற்றும் ஆசிரியர்களால் முறையாக மேற்கொள்ளப்படுகின்றதா என்பதை கண்காணித்து அரசுக்கு அறிக்கையாக சமர்ப்பிக்கும் வகையில் இப்பொருள் தொடர்பாக தொடக்க மற்றும் பள்ளிக் கல்வி இயக்ககத்திற்கு புகைப்படத்துடன் கூடிய அறிக்கையாக சமர்ப்பித்திட அறிவுறுத்தப்படுகிறார்கள்.

**(ஒப்பம்)**

**பள்ளிக் கல்வி இயக்குநர் / தொடக்கக் கல்வி இயக்குநர்**

**பெறுநர்:**

1. அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்கள்

2. அனைத்து மாவட்டக் கல்வி அலுவலர்கள் (தொடக்கக் கல்வி / இடைநிலைக் கல்வி)

**நகல்:**

1. மதிப்புமிகு அரசு செயலாளர், பள்ளிக் கல்வித் துறை, தலைமைச் செயலகம், சென்னை -9. (தகவலுக்காக பணிவுடன் அனுப்பலாகிறது)

2. மாண்புமிகு பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அவர்களின் சிறப்பு நேர்முக உதவியாளர், தலைமைச் செயலகம், சென்னை -9. (தகவலுக்காக கனிவுடன் அனுப்பலாகிறது)

பள்ளி வளாகங்களில் புதன்கிழமை தோறும் மாபெரும் தூய்மைப் பணி: டெங்கு காய்ச்சல் பரவுவதை தடுக்க மேற்கொள்ள வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தொடர்பாக DSE & DEE இணைச் செயல்முறைகள்



தமிழகப் பள்ளிக் கல்வித் துறையின் புதிய வழிகாட்டுதல்கள், பள்ளி மாணவர்களுக்கான சுகாதார விழிப்புணர்வு முகாம்கள் மற்றும் கல்வித் துறை சார்ந்த அதிகாரப்பூர்வச் செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள நமது வலைப்பதிவை தொடர்ந்து பின்பற்றுங்கள்!

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.