அரசுப் பள்ளியில் வடமாநில ஆசிரியர்களா? தமிழ் தெரியாமல் எப்படி பாடம் நடத்துவார்கள்? சேலத்தில் பரபரப்பு!
சேலம் அரசு மாதிரிப் பள்ளியில் வடமாநில ஆசிரியர்கள் நியமனம்! பெரும் சர்ச்சை பின்னணி என்ன?
சேலம்: சேலம் மாவட்டம் ஓமலூர் அருகே இயங்கி வரும் அரசு மாதிரிப் பள்ளியில் வடமாநிலத்தைச் சேர்ந்த ஆசிரியர்கள் நியமிக்கப்பட்டுள்ளதாக வெளியான தகவல், பெற்றோர் மற்றும் கல்வியாளர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியையும் சர்ச்சையையும் ஏற்படுத்தியுள்ளது.
ஓமலூர் அருகே உள்ள சிக்கனம்பட்டி ஊராட்சிக்கு உட்பட்ட குப்பூர் பகுதியில் அரசு மாதிரிப் பள்ளி ஒன்று செயல்பட்டு வருகிறது. இங்கு 6-ஆம் வகுப்பு முதல் பிளஸ்-2 வரை விடுதி வசதியுடன் 400-க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் தங்கிப் பயின்று வருகின்றனர்.
தமிழ் தெரியாத ஆசிரியர்களால் மாணவர்கள் பாதிப்பு?
குறிப்பாக, பிளஸ்-2 பயிலும் மாணவர்களுக்குப் பாடம் கற்பிக்க வடமாநிலங்களைச் சேர்ந்த ஆசிரியர்கள் நியமிக்கப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. தமிழ் மொழியே தெரியாமல், இந்தி மட்டுமே தெரிந்த ஆசிரியர்கள் எவ்வாறு தமிழ்நாட்டு மாணவர்களுக்குப் புரியும்படி பாடம் நடத்த முடியும் என்று பெற்றோர்கள் கேள்வி எழுப்பியுள்ளனர்.
இதனால் மாணவர்களின் கல்வித் திறன் பாதிக்கப்படுவதோடு, அவர்கள் உளவியல் ரீதியாகவும் சிரமத்திற்கு ஆளாகி வருவதாக குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன.
கல்வித்துறை அதிகாரி விசாரணை
இந்தச் சர்ச்சை குறித்து சேலம் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் (CEO) எல்லாப்பனிடம் கேட்டபோது:
"குப்பூர் அரசு மாதிரிப் பள்ளியில் வெளிமாநிலத்தைச் சேர்ந்த ஆசிரியர்கள் நியமிக்கப்பட்டிருப்பது தொடர்பாகப் பள்ளி தலைமை ஆசிரியர் பாலமுருகனிடம் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. மேலும், பள்ளி மேலாண்மைக் குழு (SMC) மூலம் அவர்களுக்கு ஊதியம் வழங்கப்படுகிறதா என்பது குறித்தும் விளக்கம் கேட்கப்பட்டுள்ளது" என்று தெரிவித்தார்.
தற்போது இந்த விவகாரம் தொடர்பான செய்திகளும் கண்டனப் பதிவுகளும் சமூக வலைத்தளங்களில் வேகமாகப் பரவி வைரலாகி வருகின்றன.

No comments:
Post a Comment
கல்விச்செய்தி நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.