தேர்வுப் பணியில் நாற்காலி மறுக்கப்படுவது - மனிதநேயமா? Being denied a chair in an examination process - is it humane?
பன்னிரண்டாம் வகுப்பு மேல்நிலைப் பொதுத் தேர்வில் அறைக் கண்காணிப்பாளர்களாகப் பணியாற்றும் முதுகலை ஆசிரியர்கள் சுமார் 3 மணி 45 நிமிடங்களுக்கு மேல் இடைவிடாமல் நின்றபடி பணி செய்ய வேண்டிய சூழ்நிலையில் உள்ளனர்.(TNPSC மற்றும் TRB தேர்வுகளில் நான்கு மணி நேரங்களுக்கும் மேலாக நிற்க வேண்டிய சூழ்நிலை இருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.)
சில ஆண்டுகளுக்கு முன்பு, தேர்வறையின் முன்பகுதியில் ஆசிரியர்கள் நாற்காலியில் அமர்ந்திருந்தால் முறையான கண்காணிப்பு செய்ய முடியாது என்ற காரணத்தால், எழுத்துப்பூர்வமற்ற வாய்மொழி உத்தரவின் அடிப்படையில் தேர்வறைகளில் நாற்காலிகள் நீக்கப்படும் நடைமுறைகள் தொடங்கின.
ஆனால் தற்போது அதிகாரிகளே,
* தேர்வு அறைகளை தொடர்ந்து சுற்றி வரத் தேவையில்லை
* மாணவர்களின் அருகினில் நின்று தொந்தரவு செய்யக்கூடாது.
* அறையின் முன்பகுதியில் நின்று கண்காணித்தால் போதுமானது
என்று கூறி வருகின்றனர்.
ஆக நடைமுறை திரும்பி விட்டது ஆனால் நாற்காலி மட்டும் இன்னும் திரும்பவில்லை?
வெளியில் வைக்கப்பட்டுள்ள உயிரற்ற குடம் கூட நாற்காலியில் ஒய்யாரமாக அமர்ந்திருக்கிறது.
ஆனால் உயிருள்ள மனிதர்களான ஆசிரியர்கள் மட்டும் மூன்று மணி நாற்பத்தைந்து நிமிடங்கள் தொடர்ந்து நின்றுகொண்டே இருக்க வேண்டிய நிலை உருவாக்கப்பட்டுள்ளது.
இது ஒரு நிர்வாக நடைமுறை அல்ல —மனிதநேயத்தை மறந்த கட்டுப்பாடு.
மருத்துவ ரீதியாகவும் இது சரியான நடைமுறை அல்ல
மருத்துவ ரீதியாக, ஒரு மனிதன் தொடர்ந்து நீண்ட நேரம் நின்று கொண்டிருப்பது உடலுக்கு பல பிரச்சினைகளை ஏற்படுத்தும் என்று மருத்துவர்கள் கூறுகின்றனர். > பொதுவாக 30 முதல் 60 நிமிடங்களுக்கு ஒருமுறை உடல் நிலையை மாற்றிக் கொள்ள வேண்டும் என்று மருத்துவ ஆலோசனைகள் கூறுகின்றன.
தொடர்ச்சியாக பல மணி நேரம் நின்று கொண்டிருப்பது:
✅ கால்வலி மற்றும் தசை சோர்வு
✅ முதுகுவலி
✅ இரத்த ஓட்ட குறைபாடு
✅ சக்கரை நோய் (Diabetes) உள்ளவர்களுக்கு சிரமம்
✅ உயர் இரத்த அழுத்தம் உள்ளவர்களுக்கு உடல் அழுத்தம்
✅ வயதான ஆசிரியர்களுக்கு மயக்கம் அல்லது சோர்வு
போன்ற பல உடல் நலப் பிரச்சினைகளை ஏற்படுத்தக்கூடியதாகும்.
> மேலும், பெண்களை ஆசிரியர்களைப் பொறுத்தவரை மாதவிலக்கு காலத்தில் பணியில் இருக்கும் ஆசிரியர்களும் இருக்கலாம்.அந்த நேரத்தில் தொடர்ந்து நீண்ட நேரம் நிற்க வேண்டிய சூழ்நிலை அவர்களுக்கு மிகுந்த உடல் வேதனையை ஏற்படுத்தும்.
ஆக அடிப்படை உடல் தேவைகளே தடையாகும் சூழ்நிலை ஏற்படுத்தப்பட்டுள்ளது .
"தொழிற்சாலைகள் சட்டம், 1948-ன் பிரிவு 44-ன் கீழ், நின்று கொண்டு வேலை செய்வோருக்கு அமர்வதற்கான வசதிகள் வழங்கப்பட வேண்டும் என்பது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. ஆகவே , கல்வித் துறையில் பணியாற்றும் ஆசிரியர்களுக்கும் இந்த அடிப்படை மனித உரிமை பொருந்தும்தானே?"
மேலும் "உச்ச நீதிமன்றம் CERC வழக்கில் (1995) 'தொழில் சார் உடல்நலத்திற்கான உரிமை அடிப்படை உரிமை' என்று தீர்ப்பளித்துள்ளது. ஆகவே , 3 மணி 45 நிமிடங்கள் இடைவிடாமல் நிற்க வைப்பது ஆசிரியர்களின் இந்த அடிப்படை உரிமையை மீறுவதாகும்."
கண்காணிப்பு என்பது நின்றால்தான் செய்ய முடியும் என்ற கட்டாய விதி எங்கும் இல்லை. விழிப்புணர்வுடன் கண்காணிப்பதே முக்கியம். பின் ஏன் உடலளவிலான தண்டனை?
இதில் இன்னொரு கவலைக்கிடமான நிலையும் உள்ளது. தேர்வு நேரத்தில் ஆசிரியர்கள் கழிப்பறைக்கு செல்ல வேண்டிய அவசியம் ஏற்பட்டாலும், “நீங்கள் அந்த நேரத்தில் அறையை விட்டு வெளியே சென்றால் அந்த இடைவெளியில் ஏதேனும் தவறு நடந்தால் அதற்கான பொறுப்பு உங்கள்மீது வரும்” என்ற அதிகாரிகளின் மென்மையான எச்சரிக்கைகள் வழங்கப்படுவது, மறைமுகமாக அந்த உரிமையையும் கட்டுப்படுத்தப்படும் சூழ்நிலை உருவாக்கியுள்ளது.
இதனால் ஆசிரியர்கள் தங்களுடைய அடிப்படை உடல் தேவைகளைக்கூட ஒதுக்கி வைத்து மன அழுத்தத்துடன் பணி செய்ய வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. இது எந்த வகையிலும் ஒரு மனிதநேய நிர்வாக நடைமுறையாக கருத முடியாது.
"Dr. Balram Singh வழக்கில் உச்ச நீதிமன்றம், 'அடிப்படை பாதுகாப்பு வசதிகள் இல்லாத பணி கட்டாயத் தொழிலாகக் கருதப்படும்' என்று தீர்ப்பளித்துள்ளது. கழிப்பறை செல்வதற்குக் கூட அனுமதிக்கப்படாத ஆசிரியர்களின் நிலை இந்த வரையறைக்குள் வராதா?"
மற்றொரு முரண்பாடும் உள்ளத
ு ஒருகாலத்தில் உயர்கல்விக்கு நுழைவாயிலாக கருதப்பட்ட பன்னிரண்டாம் வகுப்பு பொதுத் தேர்வு, இன்று பல்வேறு நுழைவுத் தேர்வுகளின் காலத்தில் தனது முன்னைய முக்கியத்துவத்தை இழந்துள்ளது.
மருத்துவப் படிப்பிற்கு NEET,
முன்னணி பொறியியல் கல்வி நிறுவனங்களுக்கு JEE, மேலும் பல உயர்கல்விப் பாடப்பிரிவுகளுக்கு தனித்தனி நுழைவுத் தேர்வுகள் — இவை அனைத்தும் முக்கிய தீர்மானிகளாக மாறிவிட்டன.
ஆனால் அதே நேரத்தில்,
இந்த பொதுத் தேர்வை நடத்தும் முறையில் கட்டுப்பாடுகளும் நெருக்கடிகளும் மட்டும் நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே வருகின்றன. விதிமுறைகள் அதிகரிக்கின்றன…
கட்டுப்பாடுகள் கடுமையடைகின்றன…
ஆனால் அந்தப் பணியைச் செய்யும் ஆசிரியர்களின் அடிப்படை மனிதநேய வசதிகள் கூட உறுதி செய்யப்படவில்லை என்பதே எவ்வளவு வேதனைக்குரிய விஷயம்?
*எங்களின் கோரிக்கை:*
✍️ பன்னிரண்டாம் வகுப்பு பொதுத் தேர்வில் பணியாற்றும் ஆசிரியர்களுக்கு:
தேர்வறைகளில் நாற்காலி வழங்க வேண்டும.
✍️ அமர்ந்து கண்காணிக்க அனுமதி வழங்க வேண்டும்.
✍️ அடிப்படை உடல் தேவைகளுக்கான மனிதநேயமான நடைமுறைகள் உறுதி செய்ய வேண்டும்
✍️ இது சலுகை அல்ல.
மனிதர்களுக்கான அடிப்படை மரியாதை.
50 வயதிற்கும் மேலான முதுகலை ஆசிரியர்கள்,பெண் ஆசிரியர்கள் பள்ளிக்கல்வித்துறையில் அதிகமாக பணியாற்றும் சூழ்நிலையில் பள்ளிக்கல்வித்துறை அதிகாரிகள் மனிதநேயத்துடன் சிந்திக்க வேண்டும்; உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே முதுகலை ஆசிரியர்களின் கோரிக்கையாகும்.
*க. பன்னீர்செல்வம்*
*மாவட்ட அமைப்புச் செயலாளர்*
*தமிழ்நாடு முதுநிலைப் பட்டதாரி ஆசிரியர் கழகம்*
*தூத்துக்குடி மாவட்டம்

No comments:
Post a Comment
கல்விச்செய்தி நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.