ஆன்லைன் வழியில் விடைத்தாள் திருத்தம்: CBSE முடிவுக்கு ஆசிரியர்கள் எதிர்ப்பு சி.பி.எஸ்.இ., பொதுத்தேர்வு எழுதும் பிளஸ் 2 மாணவர்களின் விடைத்தாள்கள், இந்தாண்டு முதல், 'ஆன்லைன்' வழியாக மதிப்பீடு செய்ய உள்ள நிலையில், அதற்கேற்ப போதிய பயிற்சி வழங்கப்படவில்லை என்று, ஆசிரியர்கள் குற்றஞ்சாட்டி உள்ளனர். இந்தாண்டு, சி.பி.எஸ்.இ., பிளஸ் 2 பொதுத்தேர்வில், 31,000 பள்ளிகளைச் சேர்ந்த, 18.5 லட்சம் மாணவர்கள் பங்கேற்கின்றனர். அவர்கள், 120 பாடங்களுக்கு தேர்வுகள் எழுதுகின்றனர்.
அவர்களின் விடைத்தாள்கள் குறைந்தபட்சம், 6,000 பள்ளிகளில் உள்ள மையங்களில், 'ஆன்லைன்' வாயிலாக திருத்தப்பட உள்ளன. இதுவரை, மாணவர்களின் விடைத்தாள்களை நேரடியாக கையில் எடுத்து படித்து, அதிலேயே மதிப்பெண்களை வழங்கும் முறை நடைமுறையில் இருந்தது. தற்போது, விடைத்தாள்கள், 'ஸ்கேன்' செய்யப்பட்டு, ஆசிரியர்களின் கணினிக்கு அனுப்பப்படும். கணினி திரையில் அதை படித்துப் பார்த்து, வழங்கப்பட்டுள்ள குறிப்பேட்டில், மதிப்பெண்களை வழங்க வேண்டும். இந்த முறை எளிதாகவும், விரைவாகவும் முடியும் என, சி.பி.எஸ்.இ., தெரிவித்துள்ளது. அதேசமயம், தேர்வு துவங்குவதற்கு மூன்று நாட்களுக்கு முன்னர் தான், இந்த முறை பற்றி சி.பி.எஸ்.இ., அறிவித்தது. இதனால், மாணவர்களும் ஆசிரியர்களும் குழப்பம் அடைந்தனர். இந்நிலையில், சி.பி.எஸ்.இ., வாரியம், விடைத்தாள் திருத்தும் பணியில் ஈடுபடும் ஆசிரியர்களுக்கு, ஆன்லைன் வழியாக திருத்துவது குறித்து பயிற்சி வழங்கியது. ஏற்கனவே, மாணவர்களுக்கு தேர்வுப் பயிற்சி அளித்து வரும் ஆசிரியர்களுக்கு, அந்த பயிற்சியில் பங்கேற்பதில் சிரமம் ஏற்பட்டது. இதுகுறித்து, ஆசிரியர்கள் கூறியதாவது:
காலத்துக்கு ஏற்ப, இடைநிலை கல்வி வாரியம், 'டிஜிட்டல்' முறைக்கு மாறுவதில் தவறில்லை. அதேசமயம், அனைத்து விடைத்தாள் திருத்தும் மையங்களிலும், இணையதள இணைப்புடன் கூடிய, நல்ல கணினிகள் இருக்குமா என்பது சந்தேகமே. மேலும், அனுபவம் வாய்ந்த வயதான ஆசிரியர்களுக்கு, விடைத்தாள்களில் எழுதப்பட்டு இருப்பதை படித்துப் பார்த்து, மதிப்பெண் வழங்கும் முறை தான் பழக்கமாகி இருக்கிறது. திடீரென கணினி வழியில் படிப்பதும், அவற்றை பெரிதாக்குவதோ, சிறிதாக்குவதோ இயலாத காரியம். விடைத்தாள்களை ஸ்கேன் செய்வோர், ஏதாவது ஒரு பக்கத்தை விடுவதற்கும், பென்சிலால் வரையப்பட்ட வரைபடங்கள் உள்ளிட்டவற்றை தெளிவாக ஸ்கேன் செய்யாமல் விடுவதற்கும் வாய்ப்புகள் அதிகம். இதுபோல பல சிக்கல்கள் உள்ளன. அவற்றுக்கெல்லாம் சி.பி.எஸ்.இ., வாரியம் தீர்வு காண வேண்டும். அப்போது தான் மாணவர்கள் பாதிக்கப்படாமல் இருப்பர். இவ்வாறு அவர்கள் கூறினர்
2026-ஆம் ஆண்டு சிபிஎஸ்இ (CBSE) 12-ஆம் வகுப்பு பொதுத்தேர்வு விடைத்தாள்களை 'ஆன்-ஸ்கிரீன் மார்க்கிங்' (On-Screen Marking - OSM) எனப்படும் டிஜிட்டல் முறையில் திருத்த வாரியம் முடிவு செய்துள்ளது. இந்த நவீன மாற்றத்திற்கு ஆசிரியர்கள் தரப்பில் பல்வேறு நடைமுறைச் சிக்கல்களைச் சுட்டிக்காட்டி எதிர்ப்புகள் கிளம்பியுள்ளன. ஆசிரியர்கள் முன்வைக்கும் முக்கியப் புகார்கள்:
கட்டமைப்பு வசதிகள்: அனைத்து விடைத்தாள் திருத்தும் மையங்களிலும் அதிவேக இணைய வசதி மற்றும் தரமான கணினிகள் இருக்குமா என்பதில் சந்தேகம் உள்ளது.
பயிற்சி இன்மை: நீண்டகாலமாக காகிதத்தில் திருத்திப் பழகிய அனுபவம் வாய்ந்த மூத்த ஆசிரியர்களுக்கு, கணினித் திரையில் விடைத்தாள்களைப் படித்து மதிப்பெண் வழங்குவது சிரமமாக இருக்கும்.
தொழில்நுட்பத் தவறுகள்: விடைத்தாள்களை ஸ்கேன் செய்யும்போது சில பக்கங்கள் விடுபடலாம் அல்லது பென்சிலால் வரையப்பட்ட வரைபடங்கள் தெளிவற்றதாகத் தெரியலாம். இது மாணவர்களின் மதிப்பெண்களைப் பாதிக்க வாய்ப்புள்ளது.
கண்காணிப்பு அழுத்தம்: ஆசிரியர்கள் ஒரு விடைத்தாளுக்கு எவ்வளவு நேரம் செலவிடுகிறார்கள் என்பது டிஜிட்டல் முறையில் கண்காணிக்கப்படும். இது தங்களுக்கு தேவையற்ற மன அழுத்தத்தைத் தரும் என ஆசிரியர்கள் கருதுகின்றனர்.
வாரியத்தின் விளக்கம்:
இந்த முறையினால் கூட்டல் தவறுகள் (Totalling errors) தவிர்க்கப்படும், விடைத்தாள்கள் காணாமல் போகாது மற்றும் முடிவுகளை மிக விரைவாக வெளியிட முடியும் என சிபிஎஸ்இ (CBSE) தெரிவித்துள்ளது. இதற்காக ஆசிரியர்களுக்குப் பயிற்சி அளிக்க பிரத்யேக OSM Dashboard மற்றும் மாதிரிப் பயிற்சிகள் (Mock evaluation) வழங்கப்பட்டு வருகின்றன.
இந்த ஆண்டு 10-ஆம் வகுப்பு விடைத்தாள்கள் மட்டும் வழக்கம்போல காகித முறையிலேயே திருத்தப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.

No comments:
Post a Comment
கல்விச்செய்தி நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.