திமுகவுக்கு பலனளிக்குமா ‘டாப்ஸ்’ ஓய்வூதியத் திட்டம்: மீண்டும் போராடத் தயாராகும் சங்கங்கள் - Will the 'TOPS' pension scheme benefit the DMK? Unions are preparing to protest again.
கடந்த 2021- சட்டப்பேரவைத் தேர்தலில் ‘பழைய ஓய்வூதியத் திட்டத்தை அமல்படுத்துவோம்’ என திமுக வாக்குறுதி அளித்தது. அது திமுக-வின் வெற்றிக்கு பெரிதும் உதவியது. ஆனால், 4 ஆண்டுகளுக்கும் மேலாக இதற்காக பல்வேறு போராட்டங்களை அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் நடத்தியும் பழைய ஓய்வூதியத் திட்டம் கிணற்றில் போட்ட கல்லாகவே கிடந்தது.
தற்போது, தேர்தல் நெருங்கும் நிலையில், அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் போராட்டத்தில் குதிக்கும் சூழல் ஏற்பட்டதால், ககன்தீப்சிங் பேடி தலைமையிலான குழுவின் பரிந்துரைப்படி, ‘தமிழ்நாடு உறுதியளிக்கப்பட்ட ஓய்வூதிய திட்டத்தை (டாப்ஸ்)’ முதல்வர் ஸ்டாலின் ஜனவரி 3-ல் அறிவித்தார். இதனிடையே, தேர்தலில் அரசு ஊழியர்களின் குடும்ப ஓட்டுகளை கவர்வதற்காக இந்தத் திட்டத்தை அறிவித்திருப்பதாக விமர்சனங்கள் எழுந்துள்ளன. திட்டத்தின் முக்கிய அம்சங்கள்: இந்த திட்டத்தில், ஊழியர்கள் பெற்ற கடைசி மாத ஊதியத்தில் 50 சதவீதம் ஓய்வூதியமாக வழங்கப்படும். இதற்கு பணியாளர்களின் பங்களிப்பாக ஊதியத்தில் 10 சதவீதம் பிடிக்கப்படும். ஓய்வூதியதாரருக்கு 6 மாதங்களுக்கு ஒருமுறை அகவிலைப்படி உயர்த்தப்படும். ஓய்வூதியதாரர் இறந்துவிட்டால் அவர் பெற்றுவந்த ஓய்வூதியத்தில் 60 சதவீதம் குடும்ப உறுப்பினருக்கு ஓய்வூதியமாக தரப்படும். பணிக்காலத்தில் இறந்தால் ரூ.25 லட்சம் வரை பணிக்கொடை அளிக்கப்படும் என்பன உட்பட பல்வேறு அம்சங்கள் உள்ளன.
இந்நிலையில் 23 ஆண்டுகால கோரிக்கையை பூர்த்தி செய்யும் தமிழக அரசின் முயற்சியை வரவேற்பதாக ஜாக்டோ-ஜியோ, போட்டா-ஜியோ ஆகிய பிரதான கூட்டமைப்புகள் வரவேற்றுள்ளன. அதேசமயம், மற்றொரு தரப்பினர் கடும் அதிருப்தியை வெளிப்படுத்தி மீண்டும் போராட்டங்களை அறிவித்துள்ளனர். ஜாக்டோ-ஜியோ அமைப்பிலும் டாப்ஸ் திட்டத்துக்கு எதிரான குரல்கள் வலுக்கின்றன.
இதுகுறித்தான சம்பந்தப்பட்டவர்களின் கருத்துகள் வருமாறு: பா.ஆரோக்கியதாஸ் - பழைய ஓய்வூதிய திட்ட மீட்பு இயக்க மாநில ஒருங்கிணைப்பாளர் தமிழக அரசின் புதிய ஒய்வூதியத் திட்டம் என்பது ஏமாற்று வேலை. இதில் அரசின் பங்களிப்பு இல்லை. உறுதியளித்தபடி பழைய ஓய்வூதியத் திட்டத்தை நிறைவேற்றாமல் இருப்பது ஏற்புடையதல்ல. அரசால் லாபமடைந்த குறிப்பிட்ட சில சங்கங்கள் மட்டுமே இதை ஆதரிக்கின்றன. இதைவிட மத்திய அரசின் ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தில் கூடுதலான சிறப்பம்சங்கள் உள்ளன. நீதிபதிகள், எம்எல்ஏ, எம்பி-க்களுக்கு பங்களிப்பு இல்லாத ஓய்வூதிய திட்டமே அமலில் உள்ளது. ஆனால், பல ஆண்டுகளாக அரசுக்காக பணியாற்றி ஒய்வு பெறுபவர்களுக்கு அவர்களிடம் பிடித்த பணத்தையே வைத்து பலன்களை அளிப்பது நியாயமற்ற செயலாகும். இந்தத் திட்டத்தில் ஓய்வுபெறுபவர்களுக்கு பணிக்கொடை மற்றும் முறையான ஓய்வூதியம் கிடைக்க வழியில்லை. பழைய ஓய்வூதியத் திட்டத்தையே அமல்படுத்த வேண்டும்.
சி.முருகன் - ஜாக்டோ-ஜியோ உயர்மட்டக் குழு உறுப்பினர் சிபிஎஸ் திட்டத்தில் ஊழியர்கள் மற்றும் அரசின் பங்களிப்பு தொகையையும் சேர்த்து மொத்தமாக எங்களிடம் கொடுத்துவிடுவார்கள். ஆனால் இதில், ஊழியர்களின் பங்களிப்பு தொகை எப்படி திரும்ப வழங்கப்படும் என்பது குறித்து தெளிவில்லை. அதேபோல், நிதிப் பற்றாக்குறை ஏற்பட்டால் மட்டுமே ரூ.13 ஆயிரம் கோடி தமிழக அரசு செலவிடும் என்பதும் சரியல்ல. ஏனெனில், ஊழியர்களின் பணம் ரூ.85 ஆயிரம் கோடி முதலீடு செய்யப்பட்டுள்ளது. அதற்கான வட்டி மற்றும் கமிஷன் விவரங்கள் வெளிப்படையாக இல்லை.
ஜாக்டோ-ஜியோவில் உள்ள சில சங்கங்கள் அரசுக்கு ஆதரவு தெரிவித்தாலும், பல சங்கங்கள் எதிர்ப்பில் உள்ளன. அரசாணை வந்ததும் உச்ச நீதிமன்றத்தில் வழக்குத் தொடர திட்டமிட்டுள்ளோம். ராஜஸ்தான் உள்ளிட்ட 7 மாநிலங்கள் பழைய ஓய்வூதியத் திட்டத்தை அமல்படுத்திய நிலையில், பொருளாதாரத்தில் முன்னேறிய தமிழக அரசும் அதை அமல்படுத்த வேண்டும். இல்லையெனில் தேர்தலில் தாக்கத்தை ஏற்படுத்தும்

No comments:
Post a Comment
கல்விச்செய்தி நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.