பட்டப்படிப்பு சான்றிதழ்: யு.ஜி.சி., கடும் எச்சரிக்கை - Kalviseithi Official - No:1 Education Website in Tamil Nadu

Latest

Tuesday, December 2, 2025

பட்டப்படிப்பு சான்றிதழ்: யு.ஜி.சி., கடும் எச்சரிக்கை



பட்டப்படிப்பு சான்றிதழ்: யு.ஜி.சி., கடும் எச்சரிக்கை

'செமஸ்டர் தேர்வு முடிவுகள் வெளியான, 180 நாட்களுக்குள், பட்டப்படிப்பு சான்றிதழ் வழங்காத கல்வி நிறுவனங்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும்' என, உயர்கல்வி நிறுவனங்களை பல்கலை மானிய குழுவான, யு.ஜி.சி., எச்சரித்து உள்ளது.

நாடு முழுதும் உள்ள உயர்கல்வி நிறுவனங்களில், செமஸ்டர் தேர்வுகள் முடிந்து, மாணவ - மாணவியருக்கு பட்டப்படிப்பு சான்றிதழ்கள் வழங்குவதில், பல்வேறு குளறுபடிகள் நிகழ்ந்து வருகின்றன.

இது, மாணவ - மாணவியரின் வேலை வாய்ப்பு மற்றும் உயர்கல்வியில் தாக்கத்தை ஏற்படுத்துகிறது. இந்நிலையில், செமஸ்டர் தேர்வு முடிவுகள் வெளியான, 180 நாட்களுக்குள், பட்டப்படிப்பு சான்றிதழ்களை, மாணவ - மாணவியருக்கு வழங்க வேண்டும் என, உயர்கல்வி நிறுவனங்களை, யு.ஜி.சி., எச்சரித்துள்ளது. இதுகுறித்து, யு.ஜி.சி.,யின் செயலர் மணீஷ் ஆர்.ஜோஷி, அனைத்து உயர்கல்வி நிறுவனங்கள் மற்றும் பல்கலை களுக்கு அனுப்பிஉள்ள கடிதம்:

நாட்டில் சில உயர்கல்வி நிறுவனங்கள், உரிய காலக்கட்டத்துக்குள், செமஸ்டர் தேர்வுகளை நடத்துவதில்லை. பட்டப்படிப்பு சான்றிதழ்களை வினியோகிப்பதில்லை என, புகார்கள் வந்துள்ளன.

இது போன்ற தாமதங்கள், மாணவ - மாணவியர் தகுதியான வேலை வாய்ப்புகளை பெற தடையாக உள்ளன. அவர்களின் உயர்கல்விக்கும் இடையூறாக உள்ளது. யு.ஜி.சி., சட்ட விதியின்படி, மாணவ - மாணவியர் பட்டம் பெற தகுதி பெற்ற 180 நாட்களுக்குள், அவர்களுக்கு பட்டங்களை வழங்க வேண்டும்.

குறிப்பிட்ட கால அட்டவணையின்படி, செமஸ்டர் தேர்வுகள் நடத்தப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட வேண்டும். இதைப் பின்பற்றாத, உயர்கல்வி நிறுவனங்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும். மாணவ - மாணவியருக்கு பட்டப்படிப்பு சான்றிதழ்களை, தாமதமின்றி வழங்க வேண்டும்.

இவ்வாறு கடிதத்தில் கூறப்பட்டுள்ளது

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.