பி.ஏ வரலாறு படிப்பு ஏன் முக்கியம்? - ஒரு தெளிவுப் பார்வை - Kalviseithi Official - No:1 Education Website in Tamil Nadu

Latest

الاثنين، 12 مايو 2025

பி.ஏ வரலாறு படிப்பு ஏன் முக்கியம்? - ஒரு தெளிவுப் பார்வை



பி.ஏ வரலாறு படிப்பு ஏன் முக்கியம்? - ஒரு தெளிவுப் பார்வை

தற்போதைய சூழலுக்கு ஏற்ப புதிய புதிய படிப்புகள் தொடர்ந்து அறிமுகமாகிக் கொண்டே இருக்கின்றன. அதே சமயம், முன்னரே, நடைமுறை யில் உள்ள பழைய பாடங்களுக்கும் மாணவ, மாணவிகளிடம் வரவேற்பு உள்ளது. அந்த வகையில், மாணவ, மாணவிகள் விரும்பிப் படிக்கும் துறைகளில் முக்கியமானதாக உள்ளது இளங்கலை வரலாறு (பி.ஏ ஹிஸ்டரி).

ஒவ்வொரு தனி நபருக்கும், ஒவ்வொரு துறைக்கும், ஒவ்வொரு நகரத்துக்கும், ஊருக்கும், நாட்டுக்கும் ஒரு வரலாறு உண்டு. நம் முன்னோர்களின் வாழ்க்கை, பண்பாடு, கலாச்சாரம் போன்றவற்றை அறிந்து கொள்ளவும், நம் நாட்டின் முந்தைய கால செயல்பாட்டையும், சிறப்பையும் அறிந்து கொள்ளவும் வரலாறு அவசியம். அந்தக் காலத்தில் நம் முன்னோர்களின் வாழ்வியல் முறைகள் எவ்வாறு இருந்தது, அவர்கள் எப்படி வாழ்ந்தனர், எந்த வகையான பொருட்களை பயன்படுத்திக் கொண்டனர் என்பதை அறிய வரலாறு மிகவும் முக்கியமானதாகும். இவ்வளவு முக்கியத்துவம் வாய்ந்த வரலாறு பட்டப் படிப்பு தற்போதும் குறிப்பிட்ட எண்ணிக்கையிலான கல்லூரிகள், உயர் கல்வி நிறுவனங்கள், பல்கலைக் கழகங்களில் கற்பிக்கப்படுகிறது. ஒவ்வொரு ஆண்டும் குறிப்பிட்ட எண்ணிக்கையிலான மாணவ, மாணவிகள் வரலாறு பாடத்தை இளநிலை, முதுநிலை பிரிவுகளில் படித்து முடித்துவிட்டு வெளியே வருகின்றனர்.

பி.ஏ வரலாறு பாடம் குறித்து கோவையில் உள்ள கல்லூரி பேராசிரியர்கள் கூறியது: பி.ஏ வரலாறு பட்டப் படிப்பு மொத்தம் மூன்று வருடங்களை கொண்ட படிப்பாகும். பிளஸ் 2 வகுப்பில் எந்த பாடப் பிரிவை மாணவ, மாணவிகள் தேர்வு செய்து இருந்தாலும், பொதுத் தேர்வில் 50 சதவீதத்துக்கு மேல் மதிப்பெண் பெற்றிருந்தால் பி.ஏ வரலாறு பாடத்தில் சேரலாம்.

மூன்று வருட படிப்பில் நாம் ஐரோப்பிய வரலாற்றையும், உலக வரலாற்றையும், இந்திய வரலாற்றையும், தமிழகத்தின் வரலாற்றையும், புவியியல், சட்டம், கலாச்சாரம், பாரம்பரியம், தொல்லியல் துறை, சுற்றுலாத் துறை, ஊடகவியல், பத்திரிகை , சமூக அறிவியல் பற்றியும் இந்த மூன்று வருடங்களில் படிக்கிறோம்.

பி.ஏ வரலாறு முடித்த பின்னர், எம்.ஏ வரலாறு படிக்கலாம். அல்லது தொல்லியல் துறை, பண்டைய இந்திய வரலாறு, இந்திய கலை வரலாறு போன்றவற்றை படிக்கலாம். அதேபோல், வரலாறு சார்ந்த முனைவர் பட்டப்படிப்புக்கும் படிக்கலாம். வரலாறு பாடத்தை படித்தவர்களுக்கு அரசுப் பணியில் வேலை கிடைக்க வாய்ப்புகள் அதிகம் உள்ளது. அரசு நடத்தும் போட்டித் தேர்வுகளில் வரலாறு முக்கிய பங்கு வகிக்கிறது. அதேபோல், நாட்டின் அதிகாரம் மிக்க ஐஏஎஸ், ஐபிஎஸ் போன்ற பணியிடங்களுக்கு ஆட்களைத் தேர்வு செய்யும் யு.பி.எஸ்.சி தேர்வுகளில் வரலாறு பாடப்பிரிவு முக்கியப் பங்கு வகிக்கிறது.

அதேபோல், மத்திய துணை ராணுவப் படைகள், ராணுவம், கப்பற்படை, ரயில்வே துறை போன்ற அரசுப் பணிகளிலும் வேலை வாய்ப்பு உண்டு. அதேபோல், தொல்லியல் துறை மற்றும் அதன் உட் பிரிவுத் துறைகளான தொல்லியல், உயிர் தொல்லியல், கலாச்சார வள மேலாண்மை, கள தொல்லியல், அருங்காட்சியகங்கள், ஆராய்ச்சித்துறைகள் போன்றவற்றில் வேலை வாய்ப்புகள் அதிகளவில் உள்ளன.

மேலும், பழங்காலத்தை பற்றிய பயனுள்ள பதிவுகளை மதிப்பீடு செய்தல், சேகரித்தல், பாதுகாத்தல் ஆகியவை காப்பக வல்லுநரின் பணியாகும். இந்த காப்பாளர் பிரிவு, புலனாய்வு நிபுணர் போன்ற துறைகளிலும் வேலை வாய்ப்புகள் உள்ளன என்று அவர்கள் கூறினர்.

ليست هناك تعليقات:

إرسال تعليق

கல்விச்செய்தி நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.