2022-2023 ஆசிரியர் பொது மாறுதல் கலந்தாய்வு தொடர்பாக தொடக்கக்கல்வி இயக்குநருக்கு அனுப்பப்பட்டுள்ள இரண்டாவது கோரிக்கை விண்ணப்பம் - Kalviseithi Official - No:1 Education Website in Tamil Nadu

Latest

Saturday, April 29, 2023

2022-2023 ஆசிரியர் பொது மாறுதல் கலந்தாய்வு தொடர்பாக தொடக்கக்கல்வி இயக்குநருக்கு அனுப்பப்பட்டுள்ள இரண்டாவது கோரிக்கை விண்ணப்பம்



2022-2023 ஆசிரியர் பொது மாறுதல் கலந்தாய்வு தொடர்பாக தொடக்கக்கல்வி இயக்குநர் அவர்களுக்கு அனுப்பப்பட்டுள்ள இரண்டாவது கோரிக்கை விண்ணப்பம்

2022-2023 ஆசிரியர் பொது மாறுதல் கலந்தாய்வு தொடர்பாக தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணியின் சார்பில் மதிப்புமிகு. தொடக்கக்கல்வி இயக்குநர் அவர்களுக்கு இன்று (28.04.2023) அனுப்பப்பட்டுள்ள இரண்டாவது கோரிக்கை விண்ணப்பம். பொருள்:

கலந்தாய்வு தொடர்பான கூடுதல் கோரிக்கைகள் சமர்ப்பித்தல் - சார்பு, பார்வை:

2022-23ஆம் கல்வியாண்டிற்கான ஆசிரியர்கள் பொது மாறுதல் தமிழ்நாடு பள்ளிக் கல்வி ஆணையர் மற்றும் தொடக்கக் கல்வி இயக்குநரின் செயல்முறைகள் ந.க.எண்:21243/இ3/இ1/2023 நாள்:26.04.2023.

2022-23ஆம் ஆண்டிற்கான ஆசிரியர் பொதுமாறுதல் கலந்தாய்வு நடத்துவது தொடர்பாக தமிழ்நாடு பள்ளிக் கல்வி ஆணையர் மற்றும் தொடக்கக் கல்வி இயக்குநரின் செயல்முறைகள் ந.க.எண்:21243/இ3/இ1/2023 நாள்:26.04.2023 வெளியிடப்பட்டுள்ளது. தொடக்கக் கல்வித் துறையில் பணியாற்றும் ஆசிரியர்களுக்கான பொதுமாறுதல் கலந்தாய்வு தொடர்பாக தமிழ்நாடு ஆரம்பப் பள்ளி ஆசிரியர் கூட்டணியின் மாநில அமைப்பு 27.04.2023 நாளிட்ட கடிதத்தின் மூலம் கோரிக்கைகளை ஏற்கனவே தங்களின் மேலான கவனத்திற்குச் சமர்ப்பித்துள்ளது. தற்போது கீழ்க்காணும் கோரிக்கைகளையும் கூடுதலாகத் தங்களுக்கு சமர்ப்பிக்கின்றது.

கோரிக்கைகள்:

1. வட்டாரக் கல்வி அலுவலர்களின் பதவி உயர்வு தொடர்பாக செயல்முறை ஆணையில் எதுவும் குறிப்பிடப் படவில்லை. வட்டாரக் கல்வி அலுவலர்களுக்கான பதவி உயர்வு மாறுதல் கலந்தாய்வு கடைசியாக 28.12.2021ல் நடைபெற்றது. அதன் பின்பு பணி ஓய்வு உள்ளிட்ட காரணங்களால் மாநிலம் முழுவதும் பல்வேறு ஒன்றியங்களில் வட்டாரக் கல்வி அலுவலர் பணியிடங்கள் காலியாக உள்ளன. வட்டாரக் கல்வி அலுவலர் பணிக்கான பதவி உயர்வுக் கலந்தாய்வு நடைபெற்றால் நடுநிலைப் பள்ளித் தலைமை ஆசிரியர்கள் பலருக்குப் பதவி உயர்வு வாய்ப்பு கிடைக்கும். அதற்குரிய தேர்ந்தோர் பட்டியல் ஏற்கனவே தயாரிக்கப்பட்டு தயார் நிலையில் உள்ளது. இதனால் ஆரம்பப் பள்ளித் தலைமை ஆசிரியர் மற்றும் பட்டதாரி ஆசிரியர்களுக்கு நடுநிலைப் பள்ளித் தலைமை ஆசிரியர் பதவி உயர்வு வாய்ப்பு கிடைக்கும். அதன் மூலம் இடைநிலை ஆசிரியர்களுக்கு ஆரம்பப் பள்ளி தலைமையாசிரியர் மற்றும் பட்டதாரி ஆசிரியர் பதவி உயர்வு வாய்ப்பு கிடைக்கும். அதன்மூலம் இடைநிலை ஆசிரியர்களுக்கு மாறுதல் பெறுவதற்கான காலிப் பணியிடங்களின் எண்ணிக்கை உயரும். எனவே, வட்டாரக் கல்வி அலுவலர் பணிக்கான பதவி உயர்வுக் கலந்தாய்வு நடத்திட தங்களைப் பெரிதும் வேண்டுகிறோம்.

2. 2022-2023ஆம் ஆண்டுக்கான ஆசிரியர் பொது மாறுதல் கலந்தாய்வுக்கான செயல்முறை ஆணை 26.04.2023 அன்று இரவு வெளியிடப்பட்டது. மாறுதலுக்கு விண்ணப்பிப்பவர்கள் 01.05.2023 மாலைக்குள் இணையவழியில் விண்ணப்பிக்க அறிவுறுத்தப் பட்டுள்ளது. அவ்வாறு விண்ணப்பம் செய்வதற்கான கால அவகாசம் குறைவாக உள்ளது. 29.04.2023 முதல் 01.05.2023 முடிய 3 நாட்கள் விடுமுறை நாட்களாக உள்ளது. இரண்டு வேலை நாட்களில் விண்ணப்பத்துடன் இணைக்க வேண்டிய முன்னுரிமைக்கான சான்றுகள் பெறுவது, மாறுதல் விண்ணப்பங்களில் தலைமை ஆசிரியர் உள்ளிட்ட அலுவலர்களின் கையொப்பம் பெறுவது, விண்ணப்பத்தின் நகல்களை அலுவலகத்தில் ஒப்படைப்பது ஆகிய பணிகளைச் செய்வது சிரமமானது. எனவே, மாறுதல் கோரி விண்ணப்பிப்பதற்கான தேதியை நீட்டித்து உதவுமாறு தங்களைப் பெரிதும் வேண்டுகிறோம்.

3. கடந்த பொது மாறுதல் கலந்தாய்வில் மாறுதல் ஆணை பெற்று பல்வேறு காரணங்களால் இதுவரை பணி விடுவிப்பு செய்யப்படாத அனைத்து ஆசிரியர்களையும் உடனடியாகப் பணி விடுவிப்புச் செய்திட உரிய நடவடிக்கை மேற்கொண்டு உதவிட வேண்டுகிறோம்.

4. 2022-2023 கல்வியாண்டில் உபரி ஆசிரியர்கள் என்ற அடிப்படையில் அரசுப் பள்ளிகளுக்கு மாற்றுப் பணியில் (Deputation) நியமிக்கப்பட்ட அரசு உதவிபெறும் பள்ளிகளின் ஆசிரியர்கள் அனைவரையும் கல்வியாண்டின் இறுதி வேலை நாளான 28.04.2023ல் விடுவிப்புச் செய்து தங்களது தாய்ப் பள்ளிகளில் பணியில் சேர தாங்கள் உடனடி நடவடிக்கை மேற்கொண்டு உதவிட வேண்டுகிறோம். 5. கடந்த 22.01.2019 முதல் 30.01.2019 முடிய நடைபெற்ற ஜாக்டோ - ஜியோ வேலைநிறுத்தப் போராட்டத்தில் பங்கேற்றதற்காக தண்டனையாகப் பணியிட மாறுதல் செய்யப்பட்ட ஆசிரியர்களை மீண்டும் அவர்களது பழைய பள்ளியில் அவர்கள் பணியாற்றிய பணியிடம் காலியாக இருந்தால் அங்கு அவர்களுக்கு மீண்டும் பணிமாறுதல் வழங்கப்பட்டது. அவ்வாறு காலிப் பணியிடம் இல்லாத சூழலில் அவர்களுக்கு பழைய பணியிடம் வழங்கப்படவில்லை. எனவே, தற்போது அவர்கள் முன்பு பணியாற்றிய பணியிடம் காலியாக இருந்தால் அவர்களுக்கு தற்போதைய கலந்தாய்வில் முன்னுரிமை வழங்கி மாறுதல் வழங்கிட தாங்கள் உரிய நடவடிக்கை மேற்கொண்டு உதவிட வேண்டுகிறோம்.

மேற்கண்ட கோரிக்கைகளைத் தாங்கள் கனிவுடன் பரிசீலித்து நிறைவேற்றித் தந்து உதவிட தமிழ்நாடு ஆரம்பப் பள்ளி ஆசிரியர் கூட்டணியின் மாநில அமைப்பின் சார்பில் தங்களைப் பெரிதும் வேண்டுகிறோம்.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.