அரசுப்பள்ளி மாணவர்கள் வரலாற்றுச் சாதனை!! - Kalviseithi Official - No:1 Education Website in Tamil Nadu

Latest

Tuesday, April 25, 2023

அரசுப்பள்ளி மாணவர்கள் வரலாற்றுச் சாதனை!!



திண்டுக்கல் அரசுப்பள்ளி மாணவர்கள் வரலாற்றுச் சாதனை

ரஷ்ய விண்வெளி ஆய்வு மையத்தை பார்வையிட திண்டுக்கல் அரசுப் பள்ளி மாணவர்கள் 4 பேர் தேர்வு

ரஷ்யாவில் உள்ள யூரி ககாரின் விண்வெளி ஆய்வு மையத்தை பார்வையிட, அரசுப் பள்ளி மாணவர்கள் 4 பேர் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.

கடந்த ஓராண்டு காலமாக அகத்தியம் அறக்கட்டளை மற்றும் URSAGO Solutions இணைந்து நடத்திய இணையவழி மற்றும் நேரடிப் பயிற்சி வகுப்புகளில் பிரம்மோஷ் ஏவுகணை நாயகன் பத்மஸ்ரீ சிவதாணுப்பிள்ளை, பத்மஸ்ரீ மயில்சாமி அண்ணாதுரை உட்பட பல்வேறு இஸ்ரோ விஞ்ஞானிகள் கலந்து கொண்டு ஏவுகலன் அறிவியலை மாணவர்களுக்கு கற்றுக் கொடுத்தனர்.

அரசுப் பள்ளி மாணவர்களின் திறமைகளை மேம்படுத்தும் விதமாக 'ராக்கெட் சையின்ஸ்' என்ற இந்த இணையவழிப் பயிற்சி வகுப்பில் தமிழகத்தில் இருந்து 67 அரசு பள்ளிகளைச் சேர்ந்த 500 மாணவர்கள் முதற்கட்டமாக தேர்வு செய்யப்பட்டு பங்கேற்றனர்.

பல்வேறு தொடர் பயிற்சிக்குப்பின் இரண்டாம் கட்ட பயிற்சிக்கு 220 பேர் தேர்வு செய்யப் பட்டனர். செய்முறை விளக்கம், மாதிரிகள் தயாரிப்பு என பலகட்ட தேர்வுகளுக்குப் பின் இதில் 130 மாணவர்கள் மட்டுமே மூன்றாம் கட்ட பயிற்சிக்கு தேர்வாகினர். நிறைவாக இணையவழி போட்டித் தேர்வுக்குப் பின் 75 மாணவர்கள் தேர்வு செய்யப்பட்டு, அதில் முதல் 50 மாணவர்கள் தமிழக அரசின் ஆதரவுடன் ஜூன் மாதம் ரஷ்யா நாட்டில் உள்ள யூரி ககாரின் விண்வெளி ஆய்வு மையத்தை பார்வையிட தேர்வு செய்யப்பட்டுள்ளனர். இதற்கு தமிழக அரசிடம் இருந்து பாராட்டுக்கள் குவிந்து வரும் நிலையில் நமது *திண்டுக்கல் மாவட்டத்தில் 6 மாணவர்கள் தேர்வாகி, முதல் 50 இடங்களுக்குள் இடம் பெற்றுள்ள அகரம் அரசு மேல்நிலைப் பள்ளியை சேர்ந்த மாணவர்கள் S.நவீன் கார்த்திக், K.நந்தகுமார், M.சுபஹரீஷ் மற்றும் காசிப்பாளையம் அரசு மாதிரி மேல்நிலைப் பள்ளியை சேர்ந்த மாணவர் K.ஶ்ரீகாந்த் ஆகிய 4 பேரும் தேர்வாகியுள்ளனர் என்பது அரசுப் பள்ளிக்கும் நம் மாவட்டத்திற்கும் கிடைத்த பெருமையாகும்.

ரஷ்ய விண்வெளி மையத்தைப் பார்வையிடவிருக்கும் மாணவர்களை கடந்த ஓராண்டுக்கும் மேலாக ஒருங்கிணைத்து வழிகாட்டி வரும் அகரம் அரசு மேல்நிலைப் பள்ளி கணினி ஆசிரியர் திரு.A.R.A.H. முபாரக் சாதிக் அலி கான் அவர்களையும், மாணவர்களையும் திண்டுக்கல் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் அ.நாசரூதீன், நேர்முக உதவியாளர் கதிரேசன், துணை ஆய்வர் சிவக்குமார், அகரம் அரசு மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் திரு.S.மதி, காசிப்பாளையம் அரசு மாதிரி மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் திரு.T.சிவசுப்பிரமணி, பள்ளியின் அனைத்து ஆசிரியர்கள் மற்றும் பெற்றோர்களும் வெகுவாய் பாராட்டி வருகின்றனர். அரசுப் பள்ளி வறுமையின் அடையாளம் அல்ல, நற்பெருமையின் அடையாளம் என்று நிரூபித்துக் காட்டிய மாணவர்களுக்கு வாழ்த்துக்கள்.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.