தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் மன்றம் மாநில அமைப்பு - கண்டன அறிக்கை - Kalviseithi Official - No:1 Education Website in Tamil Nadu

Latest

Wednesday, March 22, 2023

தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் மன்றம் மாநில அமைப்பு - கண்டன அறிக்கை

தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் மன்றம் மாநில அமைப்பு - கண்டன அறிக்கை

உலகெங்கும் அறிவார்ந்த சமூகத்தை உருவாக்கும் உன்னதப் பணியில் ஈடுபட்டுக் கொண்டிருக்கும் ஆசிரியப் பேரினம், தன்னலம் கருதாமல், கல்வி கற்கின்ற எல்லா மாணவர்களையும் தன் மக்களாகக் கருதி உருவாக்கி வாழ்ந்து வருகின்றார்கள்.

தான் கொண்ட கல்வி அறிவை ஒவ்வொரு மாணவனுக்கும் கற்பித்து நாட்டின் மனிதவள மேம்பாட்டை உயர்த்திப் பிடித்துக்கொண்டிருக்கும் ஆசிரியப் பேரினத்தின் இன்றைய நிலை மிகவும் பரிதாபகரமான சூழ்நிலையை எட்டியிருக்கிறது.

இன்றைய மாணவர்களிடத்தில் கத்தி மேல் நடப்பது மாதிரி செயல்பட்டு கல்விப்பணிக்கு எந்த பாதிப்பும் இன்றி பணியாற்றிக் கொண்டிருக்கும் ஆசிரியர்களை இன்றைய சமூகம் போற்றிக் கொண்டாட வேண்டிய நேரத்தில், தாயின் கருவறையினும் மேலாக மதிக்கப்பட வேண்டிய பள்ளி வகுப்பறைக்குள் சென்று அறிவு வாசலை திறந்து வைத்த ஆசிரியரைத் தாக்கியிருப்பது மனித குலம் வெட்கித் தலைகுனிய வேண்டிய செயலாகும். இதற்கு தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் மன்றம் வன்மையான கண்டனத்தை பதிவு செய்கிறது. தூத்துக்குடி மாவட்டத்தில், மாணவர்களின் அறிவுக்கோயிலாக உள்ள பள்ளியினுள் புகுந்து காட்டுமிராண்டித் தனமாக ஆசிரியரைத் தாக்கிய வன்முறை கும்பலை கைது செய்ததோடு மட்டுமின்றி, பினையில் வெளிவர இயலாத சட்டப்பிரிவுகளின் கீழ் சிறையிலடைக்க வேண்டும். சட்டத்தை மீறி வன்முறை வெறியாட்டத்தில் ஈடுபடும் இதுபோன்ற வன்முறை வெறியர்களுக்கு கிடைக்கும் தண்டனை இனிவரும் காலங்களில் வேறு ஒருவருக்கும் இதுபோன்ற சிந்தனை ழொமல் நீதிமன்றமும் அரசும் கடுமையான நடவடிக்கைகளை எடுத்திட வேண்டுமாய் தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் மன்றம் வற்புறுத்திக் கேட்டுக்கொள்கிறது,

பயமின்றி ஆசிரியர்கள் பணிபுரிந்தால்தான் எதிர்காலத்தில் நல்ல கல்வியறிவு கொண்ட சமூகத்தை கட்டமைக்க முடியம் என்ற அடிப்படையில், அனைவருக்கும் பாதுகாப்பான அரசை வழிநடத்திவரும் மாண்புமிகு தமிழக முதல்வர் அவர்களும் மாண்புமிகு பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் அவர்களும் எதிர்காலத்தில் இவ்வகையான சம்பவங்கள் நடைபெறாவண்ணம் ஆசிரியர்களுக்கு பணிப்பாதுகாப்புச் சட்டத்தினை இயற்றிட விரைந்து நடவடிக்கை எடுத்திட வேண்டும் என்றும் தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் மன்றம் வற்புறுத்திக் கேட்டுக்கொள்கிறது.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.