சொல்ல மறந்த கதை.. ஆசிரியையின் முன்னெடுப்பும்; பெற்றோர்களின் வியப்பும்!  - Kalviseithi Official - No:1 Education Website in Tamil Nadu

Latest

Friday, January 27, 2023

சொல்ல மறந்த கதை.. ஆசிரியையின் முன்னெடுப்பும்; பெற்றோர்களின் வியப்பும்! 

சொல்ல மறந்த கதை.. ஆசிரியையின் முன்னெடுப்பும்; பெற்றோர்களின் வியப்பும்! The story that forgot to tell.. The teacher's initiative; Surprised parents!   

திருவண்ணாமலை மாவட்டம், போளூர் ஒன்றியத்தில் கன்னிகாபுரம் கிராமத்தில் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி உள்ளது. இந்த பள்ளியில் 196 மாணவ – மாணவிகள் படித்து வருகின்றனர். இந்தப் பள்ளியில் பயிலும் மூன்றாம் வகுப்பு மாணவர்களால் உருவாக்கப்பட்ட திராட்சை தோட்டம் என்கிற கதை புத்தகத்தினை கடந்த ஜனவரி 25ஆம் தேதி மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் கணேசமூர்த்தி வெளியிட, மாவட்ட தொடக்கல்வி அலுவலர் கார்த்திகேயன் பெற்றுள்ளார்.   

இந்த நூலை தொகுத்த பள்ளி ஆசிரியர் பூர்ணிமா பார்த்தசாரதியிடம் நாம் பேசியபோது, “நான் வகுப்பாசிரியராக உள்ள மூன்றாம் வகுப்பில் 22 மாணவ – மாணவிகள் படித்துவருகிறார்கள். பள்ளியில் ‘அறம் செய்வோம்’ அமைப்பு உருவாக்கித் தந்த நூலகம் உள்ளது. அதேபோல் அரசு வழங்கும் கதை புத்தகங்கள் உள்ளன.  

  என்னுடைய மூன்றாம் வகுப்பு குழந்தைகளை அழைத்து சென்று இந்த நூலகத்திலிருந்து தினமும் ஏதாவது ஒரு புத்தகத்தை எடுத்து படிக்கச்சொல்வேன். அவர்கள் எழுத்துக்கூட்டி படிப்பதால் நான் அவர்களுக்கு தினமும் கதை வாசிப்பேன். அப்போது குழந்தைகள் அபிநயாவும், காவியாபிரியாவும், ‘நாங்களும் கதை எழுதலாமா மிஸ்’ என என்னிடம் வந்து கேட்டார்கள்.
எனக்கு ஆச்சர்யமாக இருந்தது. நானும் சரியென்றேன். அவர்கள் தினமும் என்னிடம் வந்து கதை சொல்வார்கள். இதனைப்பார்த்து மற்ற குழந்தைகளும் கதை சொன்னார்கள். அவர்கள் சொன்ன கதைகளை தொகுத்தேன். அதில் 11 குழந்தைகளின் கதைகளை மட்டும் தொகுத்து திராட்சை தோட்டம் என்கிற தலைப்பில் புத்தகமாக்கினேன். அந்த புத்தகத்தைத் தான் வெளியிட்டுள்ளோம். 

ஜனவரி 26 ஆம் தேதி குடியரசு தினத்தன்று பள்ளியில் கொடியேற்றியபின் கதை சொன்ன குழந்தைகளுக்கு புத்தகத்தை வழங்கினோம். ஒவ்வொரு கதையின் கீழும் யார் அந்த கதையை சொன்னது, அவர்கள் பெயர், புகைப்படம் போன்றவற்றையும் அச்சிட்டிருந்தோம். அதைப்பார்த்ததும் அவர்கள் முகத்தில் அவ்வளவு மகிழ்ச்சி. சில பெற்றோர்கள் மகிழ்ச்சியில் கண் கலங்கிவிட்டார்கள்.   

என்னிடம் மூன்றாம் வகுப்பு படித்துவிட்டு இப்போது 7 ஆம் வகுப்பு, 8 ஆம் வகுப்பு படிக்கும் பிள்ளைகள் வந்து என்னிடம் சண்டை போட்டார்கள். ‘எங்களையெல்லாம் இப்படி ஊக்குவிக்கலயே மேடம்’ எனக்கேட்டபோது, நான் இவ்வளவு நாளாக இதை செய்யாமல் விட்டுவிட்டோமே என சங்கடமாக இருந்தது.  
ஒவ்வொரு குழந்தையிடமும் ஒவ்வொரு திறமை உள்ளது. அந்த திறமையை கண்டறிந்து ஊக்குவிக்கவேண்டியது ஆசிரியர்களின் கடமை. அந்த கடமையை இவ்வளவு நாள் செய்யாமல் விட்டுவிட்டோமே என இப்போது யோசிக்கவைத்துள்ளது. இனி ஒவ்வொரு ஆண்டும் குழந்தைகளை கதை சொல்லவைத்தும், ஓவியங்கள் வரையை வைத்தும் அதனை புத்தகமாக்கலாம் என முடிவு செய்துள்ளேன்” என்றார்.   

அரசு பள்ளியில் படித்தால் அவர்களின் திறமை வெளியே வராது, அவர்களை யாரும் ஊக்குவிக்கமாட்டார்கள் என்கிற எண்ணத்தை உடைத்து, அரசு பள்ளியில் படிக்கும் குழந்தைகளை ஊக்குவித்து, அவர்கள் சொன்ன கதைகளை புத்தகமாக்கிய ஆசிரியரை பலரும் பாராட்டிவருகிறார்கள்.  

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.