எந்த திட்டத்தில் பாடம் நடத்துவது? 'குழப்பத்தில்' அரசு பள்ளி ஆசிரியர்கள்
நடுவுல கொஞ்சம் கற்றலை தேடி', 'திறன்' திட்டத்தால், 'ஸ்லோ லேனர்ஸ்' மாணவர்களுக்கு, எந்த திட்டத்தில் பாடம் நடத்துவது என தெரியாமல் அரசு பள்ளி ஆசிரியர்கள் குழம்பி உள்ளனர்.
கடலுார் மாவட்டம் கல்வியில் பின் தங்கிய மாவட்டமாக இருந்தது. அதைத்தொடர்ந்து, மாவட்டம் கல்வியில் முன்னேற்றம் அடைய பல்வேறு முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது. அதன் ஒருபகுதியாக, மாவட்டத்தில் உள்ள 520 அரசு பள்ளிகளில் 6, 7, 8 ம் வகுப்புகளில் படிக்கும் மாணவர்களுக்கு கடந்த ஜூன் மாதம் தமிழ், கணிதம், ஆங்கிலம் தேர்வு நடத்தப்பட்டது.
இதில், 7 மதிப்பெண்ணிற்கு குறைவாக எடுத்த மாணவர்கள் 'ஸ்லோ லேனர்ஸ்' என தரம் பிரிக்கப்பட்டனர்.
அவர்களுக்கு 'நடுவுல கொஞ்சம் கற்றலை தேடி' என்ற திட்டத்தின் மூலம் கற்றல் பணிகளை மேற்கொள்ள கலெக்டர் சிபி ஆதித்யா செந்தில்குமார் ஜூன மாதம் கடைசி வாரத்தில் உத்தரவிட்டார்.
இந்த திட்டத்தில், ஸ்லோ லேனர்ஸ்களுக்கு பட்டதாரி ஆசிரியர்கள் கற்பித்தல் பணியில் ஈடுபட்டுள்ளனர். ஒவ்வொரு பள்ளியிலும் குறைந்தது 10 முதல் 100 மாணவர்கள் வரை தேர்வு செய்யப்பட்டு பாடம் நடத்தப்படுகிறது.
இவர்களுக்கென தனி அறையில், தனி ஆசிரியர்களை கொண்டு பாடம் நடத்தப்படுகிறது. பாடத்திட்டம் அவர்களுக்கு எந்த அளவு புரிகிறது என அவ்வப்போது ஆசிரியர்கள் சோதனை தேர்வு நடத்தி பார்க்க வேண்டும்.
அதேபோல், ஆகஸ்ட் மாதம் பள்ளி கல்விதுறை சார்பில் தமிழகத்தில் உள்ள அரசு பள்ளிகளில் 6, 7, 8, 9 ஆகிய வகுப்புகளில் படிக்கும் 'ஸ்லோ லேனர்ஸ்' மாணவர்களுக்கு 'திறன்' திட்டத்தின் மூலம் பாடம் நடத்த பள்ளிக்கல்வி துறை உத்தரவிட்டுள்ளது. இந்த இரண்டு திட்டங்களிலும், 'ஸ்லோ லேனர்ஸ்' கற்றல் திறனை மேம்படுத்தவே நடைமுறைபடுத்தப்பட்டுள்ளது. இதனால், இரண்டு வகுப்பறைகளிலும் அதே மாணவர்கள் அமர்ந்து படிக்கும் நிலை உள்ளது. பெயர்தான் மட்டும் தான் வேறு வேறு என்றாலும், நோக்கம் என்பது இரண்டு திட்டங்களிலும் ஒன்றாகவே உள்ளது.
இதனால், 'ஸ்லோ லேனர்ஸ்' பயடைவர் என்றாலும், அரசு பொதுத்தேர்வு எழுதும் மாணவர்களுக்கு பாடம் நடத்தும் பட்டதாரி ஆசிரியர்களை, இந்த இரண்டு திட்டத்தில் பயன்படுத்துவதால், அரசு பொதுத்தேர்வு எழுதும் மாணவர்களுக்கு கற்பித்தல் பணி பாதிக்கிறது.
மேலும், நடுவுல கொஞ்சம் கற்றலை தேடி, திறன் திட்டங்களுக்கு, தனித்தனி கேள்வி தாள்கள் தயார் செய்து, மாணவர்களுக்கு தேர்வு நடத்த வேண்டும்.
அவர்களுக்கு, இரண்டு திட்டங்களுக்கும் தனிதனி பதிவேடுகளை பராமரிக்க வேண்டும்.
இரண்டு திட்டங்களும் ஒரு நோக்கத்திற்கு ஆரம்பிக்கப்பட்டிருந்தாலும், தற்போது, ஆசிரியர்களுக்கு இரட்டிப்பு பணியாக இது உள்ளது.
அதனால் மாணவர்கள், ஆசிரியர்கள் நலனை கருத்தில் கொண்டு, இதில், ஏதேனும் ஒரு திட்டத்தை மட்டும் நடைமுறைக்கு கொண்டு வர, மாவட்ட நிர்வாகம் முன்வர வேண்டும் என ஆசிரியர்கள் எதிர்பார்க்கின்றனர்.
இதுகுறித்து பட்டதாரி ஆசிரியர் ஒருவர் கூறுகையில், 'கலெக்டர் சிபி ஆதித்யா செந்தில்குமார், மாவட்டத்தில் அரசு பள்ளியில் படிக்கும் 'ஸ்லோ லேனர்ஸ்' கற்றல் திறனை மேம்படுத்த, கடந்த ஜூன் மாதம் 'நடுவுல கொஞ்சம் கற்றலை தேடி' திட்டத்தினை கொண்டு வந்தார். அப்போது, இந்த திட்டம் செப்டம்பர் மாதம் வரை மட்டும் நடைமுறைபடுத்த கலெக்டர் உத்தரவிட்டிருந்தார். ஆனால், தற்போது, இந்த திட்டத்தினை பிப்ரவரி மாதம் வரை நீட்டிப்பு செய்துள்ளனர்.
அதேபோல், பள்ளிக்கல்வி துறை அறிமுகம் செய்துள்ள திறன் திட்டத்தினையும் வரும் பிப்ரவரி மாதம் வரை நடத்த அறிவுறுத்தியுள்ளனர்.
இரண்டு திட்டமும் ஒரே நோக்கம் என்பதால், இரட்டிப்பு வேலையாக உள்ளது. எனவே, ஒரு திட்டத்தை மட்டும் நடைமுறைபடுத்தி, 'ஸ்லோ லேனர்ஸ்களின்' கற்றல் திறனை மேம்படுத்தலாம். இதனால், பொதுத்தேர்வு எழுத உள்ள மாணவர்களின் வகுப்பகளுக்கு சென்று பாடம் நடத்த முடியாத நிலை உள்ளது.
எனவே, மாணவர்களின் நலன் கருதி, மாவட்ட நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்,' என்றார்.


ليست هناك تعليقات:
إرسال تعليق
கல்விச்செய்தி நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.