தலைமையாசிரியர் இன்றி 2,500 அரசு பள்ளிகள்! - Kalviseithi Official - No:1 Education Website in Tamil Nadu

Latest

الثلاثاء، 5 نوفمبر 2024

தலைமையாசிரியர் இன்றி 2,500 அரசு பள்ளிகள்!



தலைமையாசிரியர் இன்றி 2,500 அரசு பள்ளிகள்!

தமிழகத்தில், 2,500 தொடக்க, நடுநிலை பள்ளிகள், தலைமையாசிரியர்கள் இன்றி இரண்டரை ஆண்டுகளாக செயல்படுவதால், கல்விச்சூழல் பாதிக்கும் அபாயம் எழுந்துள்ளது. மத்திய அரசின் கட்டாய கல்வி உரிமை சட்டத்தின் கீழ், அரசு தொடக்க, நடுநிலை பள்ளி ஆசிரியர்கள் நியமனங்களுக்கு, 2010 ஆகஸ்ட், 23ம் தேதி முதல், ஆசிரியர் தகுதி தேர்வு தேர்ச்சி கட்டாயமாகும். இதை பட்டதாரி ஆசிரியர், தொடக்க, நடுநிலை தலைமையாசிரியர்கள் பதவி உயர்வுக்கும் பின்பற்ற வேண்டும் என, நீதிமன்றம் உத்தரவிட்டது.

இதனால், 2010க்கு முன் பணியில் சேர்ந்தவர்களும், பதவி உயர்வுக்காக ஆசிரியர் தகுதி தேர்வில் தேர்ச்சி பெற்றாக வேண்டும் என்ற சூழல் ஏற்பட்டுள்ளது. இது தொடர்பாக, நீதிமன்றங்களில் வழக்குகள் தாக்கலாகின. தமிழக அரசும், இவ்வழக்குகள் தொடர்பாக உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தது.

இதனால், தலைமையாசிரியர் உள்ளிட்ட பதவி உயர்வுகள் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன. இதன் எதிரொலியாக தான், 1,650 தொடக்க மற்றும் 800க்கும் மேற்பட்ட நடுநிலை பள்ளிகள் என, 2,500க்கும் மேற்பட்ட அரசு பள்ளிகளில் தலைமையாசிரியர் பணியிடங்கள் காலியாக உள்ளன. மேலும், 50 சதவீதம் பட்டதாரி, இடைநிலை ஆசிரியர் காலி பணியிடங்களையும் நிரப்ப முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. தமிழ்நாடு அனைத்து ஆசிரியர் பேரவை மாநில தலைவர் ஆரோக்கியதாஸ் கூறியதாவது:பதவி உயர்வுக்கு டி.இ.டி., எனப்படும், ஆசிரியர் தகுதி தேர்வில் தேர்ச்சி கட்டாயம் என்ற வழக்கில் தமிழக அரசின் நிலைப்பாடு முற்றிலும் முரணாக உள்ளது. இவ்வழக்குகள் தொடர்பாக உத்தரவு ஒன்றில் அலகாபாத் உயர்நீதிமன்றம், 'பதவி உயர்வுக்கு டி.இ.டி., தேவையில்லை' என்று தெளிவுபடுத்தியுள்ளது. தெலுங்கானா உயர்நீதிமன்றமும் அதை உறுதிப்படுத்தியுள்ளது.

ஆனால், தமிழக அரசு இது தொடர்பான வழக்கில், உச்சநீதிமன்றத்தில் வலுவான வாதங்களை முன்வைத்து, இடைக்கால உத்தரவு பெற ஆர்வம் காட்டவில்லை. அதேபோல, தேசிய ஆசிரியர் கல்வி கவுன்சில் விதிமுறைகளை பின்பற்றுவதிலும், தமிழக அரசு பின்தங்கியுள்ளது.

இதனால், பதவி உயர்வு வழங்க முடியாமல் ஆயிரக்கணக்கான அரசு பள்ளிகள் தலைமையாசிரியர்கள் இன்றி தத்தளிக்கின்றன. அங்கு கல்விச்சூழல் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. இனியாவது, தமிழக கல்வித்துறை முனைப்புடன் நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

ليست هناك تعليقات:

إرسال تعليق

கல்விச்செய்தி நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.