பள்ளிக்கல்வித்துறை உயர் அதிகாரி மீது லஞ்ச ஒழிப்புத்துறை வழக்கு - காரணம் என்ன? - முழு விவரம் - Kalviseithi Official - No:1 Education Website in Tamil Nadu

Latest

Friday, October 13, 2023

பள்ளிக்கல்வித்துறை உயர் அதிகாரி மீது லஞ்ச ஒழிப்புத்துறை வழக்கு - காரணம் என்ன? - முழு விவரம்



Anti-corruption department case against top official of school education department - what is the reason? - Full details பள்ளிக்கல்வித்துறை உயர் அதிகாரி மீது லஞ்ச ஒழிப்புத்துறை வழக்கு - காரணம் என்ன? - முழு விவரம்

வருமானத்திற்கு அதிகமாக ராமேஸ்வர முருகன் மற்றும் அவரது குடும்பத்தினர் 354.66 சதவீதம் அளவுக்கு சொத்து சேர்த்ததாக முதல் தகவல் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பள்ளிக்கல்வித்துறையிலும் பல்வேறு பொறுப்புகளிலும் இருந்து தற்போது ஆசிரியர் தேர்வு வாரியத்தின் செயலாளராக இருந்து வருபவர் ராமேஸ்வர முருகன். இவருக்கு தொடர்புடைய சென்னை மற்றும் கோவை வீடுகளில் லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் நேற்று அதிரடியாக சோதனை மேற்கொண்டனர்.

இந்த நிலையில் இன்று ராமேஸ்வர முருகன் மற்றும் அவரது குடும்பத்தினர் ஆறு பேர் மீது வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக லஞ்ச ஒழிப்புத்துறை வழக்குப் பதிவு செய்துள்ளது.

இது தொடர்பான முதல் தகவல் அறிக்கை தற்போது வெளியாகி உள்ளது. ராமேஸ்வர முருகன், அவரது மனைவி அகிலாண்டேஸ்வரி, அவரது தந்தை சின்ன பழனிச்சாமி, தாயார் மங்கையகரசி, அவரது மாமனார் அறிவுடை நம்பி, மாமியார் ஆனந்தி ஆகிய 6 பேர் மீது லஞ்ச ஒழிப்புத்துறை ஊழல் வழக்குப் பதிவு செய்துள்ளது.

கடந்த 2012 ஆம் ஆண்டு முதல் 2016 ஆம் ஆண்டு வரை பல்வேறு பொறுப்புகளை வகித்து வந்த ராமேஸ்வர முருகன் வருமானத்திற்கு அதிகமாக தனது பெயரிலும் குடும்பத்தினர் பெயர்களிலும் 354.66% சொத்துக்கள் சேர்த்துள்ளதாக முதல் தகவல் அறிக்கையில் குற்றம்சாட்டப்பட்டுள்ளது.

மேலும் அந்த நான்காண்டு காலத்தில் இவர்கள் சேர்த்து உள்ள சொத்துக்கள் தொடர்பான பட்டியலையும் லஞ்ச ஒழிப்புத்துறை வெளியிட்டுள்ளது.

ராமேஸ்வர முருகன் பெயரில் ஒரு கோடியே 98 லட்சம் மதிப்புள்ள சொத்துகளும், அவரது மனைவியுடைய பெயரில் 6 கோடியே 52 லட்சத்து 50 ஆயிரம் மதிப்புள்ள சொத்துகளும் அவரது குடும்பத்தினர்கள் மற்றும் வங்கிகளும் முதலீடு விவசாய நிலங்கள் உள்ளிட்ட பல கோடி மதிப்பிலான சொத்துகள் இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இவர் வகித்து வந்த பொறுப்புகளில் இருந்து கிடைக்கப்பெற்ற வருவாயை விட கடந்த நான்கு ஆண்டுகளில் 354.66% வருமானத்திற்கு அதிகமாக சொத்துக் குவித்ததாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது. நேற்று ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையத்தில் உள்ள ராமேஸ்வர முருகனின் தாய் - தந்தை வசிக்கும் வீடு, சென்னை கீழ்ப்பாக்கத்தில் ராமேஸ்வரம் முருகனின் வீடு உள்ளிட்ட பகுதிகளில் லஞ்ச ஒழிப்புத் துறை அதிகாரிகள் சோதனை செய்தனர். அந்த சோதனையில் பல்வேறு முக்கிய ஆவணங்கள் கைப்பற்றப்பட்டு இருந்த நிலையில் அதன் அடிப்படையில் ராமேஸ்வர முருகன் மற்றும் அவரது குடும்பத்தினர் மீது வழக்குப் பதிவு செய்து முதல் தகவல் அறிக்கையை லஞ்ச ஒழிப்புத் துறை வெளியிட்டுள்ளது.

ராமேஸ்வரம் முருகன் முதலில் துவக்கப் பள்ளி இயக்குனராகவும் பிறகு பள்ளிக்கல்வித்துறை இயக்குனராகவும் மாநில கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனத்தின் இயக்குனராகவும், மேலும் இவர் பல்வேறு பொறுப்புகளிலும் பதவி வகித்து வந்துள்ளார். இவர் வகித்து வந்த பொறுப்புகளில் கொண்டுவரப்பட்ட பல்வேறு திட்டங்களில் பல்வேறு முறைகேடுகள் நடைபெற்றுள்ளதாகவும் அதன் மூலமாக கிடைத்த வருவாயை முதலீடு செய்து கணக்கில் காட்டாமல் மறைத்துள்ளார் எனவும் லஞ்ச ஒழிப்புத்துறை குற்றம் சாட்டியுள்ளது.

மேலும் அவரது மனைவி மற்றும் குடும்பத்தினர் மீது அசையும் மற்றும் அசையா சொத்துக்களை வாங்கி வைத்திருப்பதாகவும் அதன் அடிப்படையில் தான் இந்த வழக்குப் பதிவு செய்யப்பட்டிருப்பதாக லஞ்ச ஒழிப்புத் துறை அதிகாரிகள் முதல் தகவல் அறிக்கையில் குறிப்பிட்டுள்ளனர்.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.