ஊழியர் வேலைநிறுத்தம் காரணமாக இடையில் ஒருநாள் தவிர வங்கிகள் நாளை முதல் 5 நாட்கள் செயல்படாது - Kalviseithi Official - No:1 Education Website in Tamil Nadu

Latest

Tuesday, January 24, 2023

ஊழியர் வேலைநிறுத்தம் காரணமாக இடையில் ஒருநாள் தவிர வங்கிகள் நாளை முதல் 5 நாட்கள் செயல்படாது



ஊழியர் வேலைநிறுத்தம் காரணமாக இடையில் ஒருநாள் தவிர வங்கிகள் நாளை முதல் 5 நாட்கள் செயல்படாது

சென்னை: குடியரசு தின விழா மற்றும் ஊழியர்கள் வேலை நிறுத்தப் போராட்டம் காரணமாக, இடையில் ஒரு நாள் தவிர நாளை முதல் வங்கிகள் 5 நாட்கள் செயல்படாது. இதனால், வங்கி சேவைகள் கடுமையாக பாதிக்கும் சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.

தொழில் நிறுவனங்கள், வர்த்தகர்கள், அரசு கருவூலங்கள் மற்றும் பொதுமக்களின் தினசரி பணப் பரிவர்த்தனைக்கு வங்கிகள் முக்கியப் பங்காற்றி வருகின்றன. ஒருநாள் வங்கிக்கு விடுமுறை விடப்பட்டாலே பணப் பரிவர்த்தனை, காசோலை சேவைகள் பாதிக்கப்படுகின்றன. அத்துடன், மறு நாள் அனைத்து வங்கிகளிலும் கூட்டம் அலைமோதும்.

இந்நிலையில், நாளை முதல்5 நாட்களுக்கு வங்கிகள் செயல்படாது. வாரத்துக்கு 5 நாட்கள் வேலை, காலிப் பணியிடங்களை நிரப்ப வேண்டும், பழைய ஓய்வூதியத்தை மீண்டும் செயல்படுத்த வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி அகில இந்திய வங்கி ஊழியர்கள் சங்கம் சார்பில் வரும் 30-ம் தேதிதிங்கள்கிழமை, 31-ம் தேதி செவ்வாய்க்கிழமை ஆகிய 2 நாட்கள் வேலை நிறுத்தப் போராட்டம் நடத்துகின்றனர்.

இதனால், அன்றைய தினம் தமிழகம் உட்பட நாடு முழுவதிலும் உள்ள அனைத்துப் பொதுத்துறை வங்கிகளும் செயல்படாது. மேலும், குடியரசு தினத்தை முன்னிட்டு வங்கிகளுக்கு நாளை(26-ம் தேதி) அரசு விடுமுறை நாளாகும். வரும் சனிக்கிழமை (28-ம் தேதி) 4-வது சனிக்கிழமை என்பதால் அன்றைய தினமும்,மறுநாள் 29-ம் தேதி ஞாயிற்றுக்கிழமை என்பதாலும் வங்கிகளுக்கு விடுமுறை நாளாகும். இடையில் நாளை மறுதினம் வெள்ளிக்கிழமை (27-ம் தேதி) ஒரு நாள் மட்டும் வங்கிகள் செயல்படும்.

வங்கிகள் 5 நாட்கள் செயல்படாததால் வங்கிச் சேவைகள் கடுமையாக பாதிக்கப்படும். அதே சமயம், ஏடிஎம் மையங்களில் போதிய அளவு பணம் வைத்திருக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளதாகவும் மற்றும் ஆன்லைன் சேவைகள் வழக்கம்போல செயல்படும் எனவும் வங்கி அதிகாரிகள் தெரிவித்தனர்.

தொடர் விடுமுறைகளாக பார்த்து வங்கி ஊழியர்கள் வேலைநிறுத்தத்தில் ஈடுபடுகின்றனர். இதைக் கண்டு வாடிக்கையாளர்கள் அதிருப்தி அடைந்துள்ளனர்.

இதனிடையே, மும்பையில் துணை தலைமை தொழிலாளர் ஆணையர் முன்னிலையில் நேற்றுசமரச பேச்சுவார்த்தை நடைபெற்றது. இதில், ஊழியர் சங்கத்தின் கோரிக்கைகள் குறித்து இந்திய வங்கிகள் சங்கம் எவ்வித உத்தரவாதமும் அளிக்கவில்லை. இதையடுத்து, சமரச கூட்டம் நாளை மறுநாளுக்கு (27-ம் தேதி) தள்ளி வைக்கப்பட்டுள்ளது.

ஏடிஎம்மில் போதிய அளவு பணம் வைத்திருக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.