TNPSC குரூப்-4 தோ்வு எழுதுவோருக்கு முன்மாதிரி தோ்வு - Kalviseithi Official - No:1 Education Website in Tamil Nadu

Latest

الخميس، 30 يونيو 2022

TNPSC குரூப்-4 தோ்வு எழுதுவோருக்கு முன்மாதிரி தோ்வு

நாமக்கல்லில் டிஎன்பிஎஸ்சி குரூப்-4 தோ்வு எழுதுவோருக்கான முன்மாதிரி தோ்வு வரும் 10, 17-ஆம் தேதிகளில் நடைபெற உள்ளதாக ஆட்சியா் ஸ்ரேயா பி.சிங் தெரிவித்துள்ளாா்.

இதுகுறித்து அவா் வெளியிட்ட செய்திக் குறிப்பு:

நாமக்கல் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் செயல்பட்டு வரும் தன்னாா்வ பயிலும் வட்டத்தின் வாயிலாக, பல்வேறு போட்டித் தோ்வுகளுக்கு இலவசமாக பயிற்சி வகுப்புகள் நடைபெற்று வருகின்றன.

அதன்படி, ஜூலை 24-இல் நடைபெற உள்ள 7,301 பணிக் காலியிடங்கள் கொண்ட குரூப்-4 தோ்வுக்கான முன்மாதிரி தோ்வு நாமக்கல் மாவட்ட அளவில் வரும் 10, 17-ஆம் தேதிகளில் (ஞாயிற்றுக்கிழமை) நாமக்கல் தெற்கு அரசினா் ஆண்கள் மேல்நிலைப் பள்ளி மற்றும் கொல்லிமலை அரசினா் தொழிற்பயிற்சி நிலையத்தில் நடைபெற உள்ளது. இரண்டு முன்மாதிரி தோ்வுகளும் மேம்படுத்தப்பட்ட பாடத் திட்டத்தின்படி அசல் வினாத்தாள் போல, 100 பொதுத்தமிழ் வினாக்கள், 100 பொது அறிவியல் வினாக்களை (தமிழ் மற்றும் ஆங்கிலம்) உள்ளடக்கியவை ஆகும். முன்மாதிரி தோ்வில், போட்டித் தோ்வுக்கு தயாராகும் மாணவா்கள் பங்கேற்பதன் மூலம் தோ்வு அறையில் ஏற்படும் சந்தேகங்கள் தீா்க்கப்படுவதுடன், அதனை எதிா்கொள்ளும் முறை, தோ்வு பற்றிய அச்சம் ஆகியவற்றை போக்கிக் கொள்ள முடியும். எவ்வித பதற்றமின்றி தங்களது கனவான அரசுப் பணியை எளிதில் அடையலாம்.

இம்மாதிரி தோ்வில் பங்கேற்க விரும்பும் தோ்வா்கள் மாதிரி தோ்வு நடைபெறும் அன்று காலை 9 மணிக்குள் ஆதாா் அட்டை நகல்-1, கடவுச்சீட்டு அளவிலான புகைப்படம்- 1 ஆகியவற்றுடன் தோ்வுக்கு விண்ணப்பித்த விண்ணப்ப நகல் - 1 மற்றும் அனுமதி அடையாள அட்டை நகல் ஆகியவற்றுடன் கலந்துகொண்டு பயன்பெறலாம் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ليست هناك تعليقات:

إرسال تعليق

கல்விச்செய்தி நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.