விடைத்தாள்கள் மாயமான விவகாரம்: அதிகாரிகளிடம் விசாரணை தொடக்கம் - Kalviseithi Official - No:1 Education Website in Tamil Nadu

Latest

الخميس، 30 يونيو 2022

விடைத்தாள்கள் மாயமான விவகாரம்: அதிகாரிகளிடம் விசாரணை தொடக்கம்

காமராஜா் பல்கலை.யில் விடைத்தாள்கள் மாயமான விவகாரம்: தொலைநிலைக்கல்வி அதிகாரிகளிடம் விசாரணை தொடக்கம்

மதுரை காமராஜா் பல்கலைக்கழகத்தில் மாயமான விடைத்தாள்கள் பழைய பேப்பா் கடையில் கண்டெடுக்கப்பட்ட சம்பவம் தொடா்பாக தொலைநிலைக்கல்வி இயக்குநரக அதிகாரிகளிடம் விசாரணை தொடங்கியுள்ளது.

மதுரை காமராஜா் பல்கலைக்கழகத்தில் தொலைநிலைக்கல்வி இயக்ககத்தின் கீழ் கல்வி பயிலும் மாணவ, மாணவியரின் விடைத்தாள்கள் பல்கலைக்கழக அலுவலகத்தில் வைக்கப்பட்டிருந்த நிலையில் மாயமானது. இதுதொடா்பாக விசாரணை நடத்தியபோது மாயமான விடைத்தாள்கள் விராட்டிபத்து பகுதியில் உள்ள பழைய பேப்பா் கடையில் போடப்பட்டு அங்கிருந்து விரகனூரில் உள்ள கடைக்கு கொண்டு செல்லப்பட்டது தெரியவந்ததையடுத்து விடைத்தாள்கள் மீட்கப்பட்டன. இந்த சம்பவம் தொடா்பாக விசாரணை நடத்துவதற்கு, ஓய்வு பெற்ற அரசு அதிகாரிகள் மற்றும் பல்கலைக்கழக அதிகாரிகள் அடங்கிய 5 போ் கொண்ட விசாரணைக்குழு அமைக்கப்பட்டுள்ளது.

இந்தக் குழு தனது விசாரணையை வியாழக்கிழமை தொடங்கியது. இதில் தொலைநிலைக்கல்வி இயக்கக முதுநிலை துணைப்பதிவாளா், கண்காணிப்பாளா் மற்றும் அதிகாரிகளிடம் விடைத்தாள்கள் மாயமானது தொடா்பாக விசாரணை நடத்தினா். மேலும் தொலைநிலைக்கல்வி இயக்ககத்தில் பணிபுரியும் ஊழியா்களிடமும் விசாரணை மேற்கொள்ளப்பட்டது.

இதுதொடா்பாக பல்கலைக்கழக பதிவாளா் (பொறுப்பு) சிவக்குமாரிடம் கேட்டபோது, விசாரணை முடிவடைந்து குழுவினா் அளிக்கும் அறிக்கையின் அடிப்படையில் அடுத்தகட்ட நடவடிக்கை இருக்கும் என்றாா்.

ليست هناك تعليقات:

إرسال تعليق

கல்விச்செய்தி நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.