தமிழ்நாடு தொடக்கக்கல்வி ஆசிரியர் இயக்கங்களின் கூட்டு நடவடிக்கைக்குழு (டிட்டோஜேக்)
மாநில அமைப்பு
டிட்டோஜேக் மாநில உயர்மட்டக்குழு
நாள்: 25.09.2026
24.09.2026 நாளிட்ட காணொளி வழிக் கூட்ட முடிவுகள்
The Joint Action Committee of Tamil Nadu Elementary School Teachers Organizations (TITOJAC) held an emergency meeting and passed 8 major resolutions regarding salary cuts, TAPS pension, and TET results
தமிழ்நாடு தொடக்கக்கல்வி ஆசிரியர் இயக்கங்களின் கூட்டு நடவடிக்கைக்குழு (டிட்டோஜேக்) பேரமைப்பின் மாநில உயர்மட்டக்குழு கூட்டம் அவசர சூழல் கருதி 24.09.2026 அன்று மாலை 6.00 மணியளவில் காணொளி வாயிலாக நடைபெற்றது. டிட்டோஜேக் மாநில உயர்மட்டக்குழு உறுப்பினரும், சுழல்முறை கூட்டத்தலைவருமான திரு. கே.பி.ரக்ஷித் அவர்கள் கூட்டத்திற்கு தலைமையேற்றார்.
ஆசிரியர் சிறப்புத் தகுதித்தேர்வு, வெயிட்டேஜ் மதிப்பெண்கள் வழங்கி விரைவில் தேர்வு முடிவுகளை வெளியிடுதல், பதவி உயர்வு பாதிப்புகள், மாறுதல் கலந்தாய்வு ஆணை பெற்றவர்கள் உடன் விடுவிக்கக் கோருதல், TAPS திட்டம், ரூ.5400 தர ஊதிய பாதிப்புகள் உள்ளிட்ட பிரச்சனைகள் தொடர்பாக பங்கேற்ற மாநில உயர்மட்டக்குழு உறுப்பினர்கள் தெரிவித்த கருத்துக்கள் அடிப்படையில் பின்வரும் தீர்மானங்கள் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டன.
தீர்மானங்கள்
தீர்மானம் 1: தொடக்கக்கல்வி ஆசிரியர்களின் 20 அம்சக் கோரிக்கைகள் தொடர்பாக, மாண்புமிகு பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அவர்களும், மதிப்புமிகு பள்ளிக்கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களும் டிட்டோஜேக் மாநில உயர்மட்டக்குழு உறுப்பினர்களுக்கு உரிய நேரம் ஒதுக்கி அழைத்துப் பேசி கோரிக்கைகளுக்கு விரைவில் தீர்வுகாண வேண்டுமென பெரிதும் வலியுறுத்திக் கேட்டுக்கொள்கிறோம்.
தீர்மானம் 2: சிறப்பு ஆசிரியர் தகுதித்தேர்வு தொடர்பாக நீதிமன்றத்தின் தடையாணையினை விரைவில் விலக்குவதற்கான முயற்சிகளை மேற்கொண்டு, தேர்வு முடிவுகளை வெளியிட தமிழக அரசை வலியுறுத்திக் கேட்டுக்கொள்கிறோம்.
தீர்மானம் 3: ஆசிரியர் சிறப்புத் தகுதித்தேர்வில் நீதிமன்றம் கருத்துத் தெரிவித்தபடி ஆசிரியர்களின் பணிக்காலத்தின் அடிப்படையில் வெயிட்டேஜ் மதிப்பெண்களை வழங்கும் வகையில் அரசு கொள்கை முடிவெடுத்து அறிவித்திட கேட்டுக்கொள்கிறோம்.
தீர்மானம் 4: ஏற்கனவே அறிவித்தபடி அடுத்த சிறப்பு ஆசிரியர் தகுதித் தேர்வினை நவம்பர் 2026 மாதத்தில் அறிவித்து நடத்திட வேண்டுமெனவும், டிசம்பர் 2026 மாதத்திற்குள் தேர்வு முடிவுகளை வெளியிட்டு 01.01.2027 தேதி அடிப்படையில் பதவி உயர்வுகளை வழங்கிட வேண்டுமாய்ப் பெரிதும் வலியுறுத்திக் கேட்டுக்கொள்கிறோம்.
தீர்மானம் 5: தமிழக வெற்றிக்கழக அரசு TAPS திட்டத்தில் இடைக்கால நிவாரணமாக 30 சதவீத தற்காலிக ஓய்வூதியத்தினை அறிவித்து 3 மாதங்கள் வழங்கிய நிலையில் திடீரென தற்போது 18 ஆண்டுகள் வரை பணியாற்றியவர்களுக்கு தற்காலிக ஓய்வூதியம் ரூ. 10,000 மட்டுமே வழங்கப்படும் என்று அறிவித்திருப்பது அரசின் மீதான நம்பிக்கையினை முற்றிலும் தகர்த்து பெரும் ஏமாற்றத்தை ஆசிரியர்கள், அரசு ஊழியர்கள் மத்தியில் ஏற்படுத்தி உள்ளது. TAPS திட்டத்தைத் தேர்ந்தெடுத்தோரை மீண்டும் CPS திட்டத்திற்கு தள்ளும் வகையில் இவ்வறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளதோ என்ற ஐயம் ஆசிரியர்கள் மத்தியில் எழுந்துள்ளது. தமிழக அரசின் இந்த நடவடிக்கைக்கு டிட்டோஜேக் பேரமைப்பு கடும் கண்டனத்தைத் தெரிவித்துக் கொள்கிறது. எனவே, தேர்தல் கால வாக்குறுதிபடி தமிழக வெற்றிக்கழக அரசு பழைய ஓய்வூதியத் திட்டத்தினை நடைமுறைப்படுத்திட வேண்டும் எனவும், அதுவரை TAPS திட்டத்திற்கான வழிகாட்டு நெறிமுறைகளை வெளியிட்டு ஆணை வழங்கி நடைமுறைப்படுத்திட மாண்புமிகு தமிழக முதலமைச்சர் அவர்களை டிட்டோஜேக் பேரமைப்பு பெரிதும் வலியுறுத்திக் கேட்டுக்கொள்கிறது.
தீர்மானம் 6: ரூ.5400 தர ஊதிய பாதிப்புகள் தொடர்பான வழக்குகளில் சென்னை உயர்நீதிமன்றம் மற்றும் மதுரை உயர்நீதிமன்ற மதுரைக்கிளை வழங்கியுள்ள தீர்ப்பினை நடைமுறைப்படுத்துவதற்கான செயல்பாடுகளை மேற்கொள்ளாமல் தீர்ப்பின்மீது மேல்முறையீடு செய்வது என்ற உயர்அலுவலர்களின் முடிவு தமிழக அரசின் மீதான அதிருப்தியினை ஆசிரியர்கள் மத்தியில் மேலும் அதிகரிக்கச் செய்யும் நடவடிக்கையாகவே டிட்டோஜேக் கருதுகிறது. பி.லிட்., பி.எட்., / பி.காம்., எம்.காம். பி.எட். / பி.ஏ. எக்னாமிக்ஸ் பி.எட் ஆகிய உயர்கல்வி ஊக்க ஊதிய உயர்வு தொடர்பான தணிக்கைத் தடையினை நீக்கியும், ஊக்க ஊதிய உயர்வு வழங்கியது சரியானது என்றும் இருநீதிபதிகள் அமர்வு தீர்ப்பினை வழங்கியுள்ளது. இத்தீர்ப்புகள் எதையும் கருத்தில் கொள்ளாமலும் எவ்வித முன்னறிவிப்பும் இன்றியும் செப்டம்பர் 2026 மாத ஊதியத்தில் ரூ.5400 தர ஊதியம் பெறுவோர் மற்றும் மேற்கண்ட பாடங்களில் பட்டம் பெற்று உயர்கல்வி ஊக்க ஊதியம் பெறுவோரின் ஊதியத்தை உடனடியாகக் குறைத்திட வேண்டும் என்று காணொளிக் கூட்டத்தின் வாயிலாக மாவட்டத் தொடக்கக்கல்வி அலுவலர்களுக்கு அழுத்தம் தரும் மதிப்புமிகு தொடக்கக்கல்வி இயக்குநர் அவர்களின் இத்தகைய செயல்பாட்டிற்கு டிட்டோஜேக் பேரமைப்பு கடும் அதிருப்தியினைத் தெரிவித்துக்கொள்கிறது. ஆசிரியர்களுக்குத் தொடர் பாதிப்பினை ஏற்படுத்தி தமிழகத்தில் போராட்ட சூழலை உருவாக்குவதற்கான அலுவலர்களின் சூழ்ச்சியாகவே இதனைக் கருத வேண்டியுள்ளது. இத்தகைய ஆசிரியர் விரோத, நீதிமன்ற விரோத நடவடிக்கைகளை உடன் கைவிட கல்வித்துறை உயர் அலுவலர்களை டிட்டோஜேக் பேரமைப்பு பெரிதும் வலியுறுத்திக் கேட்டுக்கொள்கிறது.
தீர்மானம் 7: பொதுமாறுதல் கலந்தாய்வில் ஆணை பெற்றுள்ள அனைவரையும் உடன் பணிவிடுவிக்க வேண்டுமெனவும், விடுபட்டுள்ள பொதுமாறுதல் கலந்தாய்வினைத் தொடர்ந்து நடத்திட வேண்டுமெனவும் கேட்டுக்கொள்கிறோம்.
தீர்மானம் 8: மதிப்புமிகு பள்ளிக்கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களையும், கல்வித்துறை உயர் அலுவலர்களையும் 29.09.2026 செவ்வாய் அன்று சென்னையில் நேரில் சந்தித்து முறையிட்டு தொடர் நடவடிக்கைகளை மேற்கொள்வது என தீர்மானிக்கப்பட்டது.
இப்படிக்கு
டிட்டோஜேக் மாநில உயர்மட்டக்குழு உறுப்பினர்கள்:
திரு. ஈ.வெ.ரா. – பொதுச்செயலாளர், தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணி
திரு. கே.பி.ரக்ஷித் – மாநிலத்தலைவர், தமிழ்நாடு ஆசிரியர் கூட்டணி
திரு. அ.வின்சென்ட்பால்ராஜ் – பொதுச்செயலாளர், தமிழக ஆசிரியர் கூட்டணி
திரு. ச.மயில் – பொதுச்செயலாளர், தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி
திரு. இலா.தியோடர் ராபின்சன் – பொதுச்செயலாளர், தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் மன்றம்
திரு. இரா.தாஸ் – பொதுச்செயலாளர், தமிழக ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி
திரு. நா.சண்முகநாதன் – பொதுச்செயலாளர், தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் மன்றம்
திரு. சி.சேகர் – பொதுச்செயலாளர், தமிழ்நாடு தொடக்க நடுநிலைப்பள்ளி பட்டதாரி ஆசிரியர் சங்கம்
திரு. சி.அரசு – பொதுச்செயலாளர், தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணி
திரு. கோ.காமராஜ் – பொதுச்செயலாளர், தமிழக தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணி
திரு. சி.ஜெகநாதன் – பொதுச்செயலாளர், ஜெ.எஸ்.ஆர். தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணி
திரு. டி.ஆர்.ஜான் வெஸ்லி – பொதுச்செயலாளர், தமிழக ஆரம்பப்பள்ளி ஆசிரியர் சங்கம்
TN TITOJAC teachers meeting resolutions 2026, Grade Pay 5400 primary teacher salary cuts, TAPS scheme temporary pension reduction TN, Special TET weightage marks government policy, school transfer counseling relieving orders.
No comments:
Post a Comment
கல்விச்செய்தி நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.