TET தேர்வு விவகாரம்: ஆசிரியர்களுக்கு விலக்கு அளிப்பதில் அரசின் இரட்டை நிலைப்பாடு - அதிர்ச்சியில் 8,000 ஆசிரியர்கள்! - Kalviseithi Official - No:1 Education Website in Tamil Nadu

Latest

Tuesday, August 25, 2026

TET தேர்வு விவகாரம்: ஆசிரியர்களுக்கு விலக்கு அளிப்பதில் அரசின் இரட்டை நிலைப்பாடு - அதிர்ச்சியில் 8,000 ஆசிரியர்கள்!



டெட் தேர்வு விவகாரம்: ஆசிரியர்களுக்கு விலக்கு அளிப்பதில் அரசின் இரட்டை நிலைப்பாடு - அதிர்ச்சியில் 8,000 ஆசிரியர்கள்!

சென்னை: நாடு முழுவதும் செயல்பட்டு வரும் அனைத்து அரசுப் பள்ளிகளிலும், இடைநிலை மற்றும் பட்டதாரி ஆசிரியர் பணி இடங்களுக்கு நியமனங்கள் மேற்கொள்ள கடந்த 2010 ஆம் ஆண்டு ஆசிரியர் தகுதித்தேர்வு (டெட்) கட்டாயமாக்கப்பட்டது. தொடர்ந்து, தற்போது பணியிலிருக்கும் ஆசிரியர்களும் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற வேண்டும் என உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.


இதுதொடர்பான சீராய்வு மனுவின் மீதான தீர்ப்பில், பணியில் உள்ள ஆசிரியர்கள் வரும் 2028-ம் ஆண்டுக்குள் ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற வேண்டும் என ஆணையிடப்பட்டுள்ளது.


அமைச்சரின் அறிவிப்பும் இரட்டை நிலைப்பாடும்:


இந்நிலையில், தமிழக சட்டப்பேரவையில் பேசிய அமைச்சர் எஸ். ராஜேந்திரன், 2010 ஆம் ஆண்டுக்கு முன்பு பணி நியமனம் பெற்ற 3 லட்சத்திற்கும் மேற்பட்ட ஆசிரியர்கள் தற்போது அரசுப் பள்ளிகளில் பணிபுரிந்து வருவதாகத் தெரிவித்தார். இவர்களுக்காக ஆண்டுதோறும் சிறப்பு தகுதித்தேர்வு நடத்தப்படும் என கடந்த திமுக ஆட்சியில் அறிவிக்கப்பட்டதைத் தொடர்ந்து, கடந்த மாதம் தகுதித்தேர்வு நடத்தப்பட்டது. இதனிடையே, தகுதித்தேர்வில் தேர்ச்சி பெறுவதற்கான மதிப்பெண்களைக் குறைப்பது தொடர்பாக வழக்கு தொடரப்பட்டதால் முடிவுகள் இன்னும் வெளியிடப்படவில்லை.


நேற்று சட்டப்பேரவையில் பேசிய அமைச்சர், ஆசிரியர் தகுதித் தேர்விலிருந்து விலக்கு அளிப்பதற்கான தனித் தீர்மானத்தை கொண்டு வந்தார். இதற்கான உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ள ஒன்றிய அரசை வலியுறுத்தி தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இதனிடையே, தகுதித் தேர்வு விவகாரத்தில் அரசு எடுத்தது இரட்டை நிலைப்பாடு என்பதால் ஆசிரியர்கள் மத்தியில் கடும் அதிர்ச்சி ஏற்பட்டுள்ளது.


ஆசிரியர் சங்கங்களின் குற்றச்சாட்டு:


இதுகுறித்து ஆசிரியர் சங்க நிர்வாகிகள் கூறியதாவது: "சட்டமன்றத்தில் பேசிய அமைச்சர், ஆசிரியர்களின் வாழ்வாதார உரிமையை பாதிக்கும் சூழ்நிலையைக் கருத்தில் கொண்டு தகுதித்தேர்வில் இருந்து விலக்கு அளிக்க ஒன்றிய அரசை வலியுறுத்தி தீர்மானம் கொண்டு வந்தார். இதனால் ஆசிரியர்களுக்கு எந்தவிதமான பலனும் இல்லை."


"ஏனெனில் ஏற்கனவே தமிழகத்தில் நீட் தேர்வு ரத்து, கச்சத்தீவு மீட்பு, இலங்கை தமிழர் பிரச்சனை, ஜிஎஸ்டி சட்டம், ஒன்றிய வேளாண் சட்டங்கள் எதிர்ப்பு, மேகேதாட்டு அணை கட்ட எதிர்ப்பு உள்ளிட்ட பல விவகாரங்களில் இதுவரை எந்தவித சாதகமான முடிவும் எட்டப்படவில்லை. இதே நிலைதான் ஆசிரியர்களுக்கும் ஏற்படும்," என்றனர்.


அதே சமயம், ஆசிரியர் விவகாரத்தில் அரசு இரட்டை நிலைப்பாட்டைக் கொண்டுள்ளதாகக் கருதுகிறோம். நேற்று சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றும் போது ஆசிரியர்களைப் பாதுகாக்கும் நடவடிக்கை என்றார். ஆனால், நேற்று முன்தினம் தகுதித்தேர்வுக்கான தேர்ச்சி மதிப்பெண்களைக் குறைப்பது தொடர்பாக சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு விசாரணைக்கு வந்தபோது, தேர்ச்சி மதிப்பெண்களைக் குறைக்க முடியாது என்று வாதிடப்பட்டுள்ளது. ஒரே விவகாரத்தில் முதல் நாள் ஆசிரியர்களுக்கு எதிராகவும், அடுத்த நாள் ஆதரவாகவும் செயல்படுவதால் அரசின் நிலைப்பாட்டில் முரண்பாடு இருப்பது தெள்ளத்தெளிவாகத் தெரிகிறது.


8,000 ஆசிரியர்களின் நிலை என்ன?


23.08.2010-க்கு முன்பாக நியமிக்கப்பட்ட ஆசிரியர்களுக்கு தகுதித் தேர்விலிருந்து நிரந்தர விலக்கு அளிப்பதற்கான நடவடிக்கை மேற்கொள்ளப்படும் எனத் தெரிவிக்கப்பட்டது. ஆனால், தமிழகத்தில் கடந்த 2011-ம் ஆண்டு சுமார் 8 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஆசிரியர்கள் சீனியாரிட்டி அடிப்படையில் நியமிக்கப்பட்டு தற்போது அரசுப் பள்ளிகளில் பணிபுரிந்து வருகின்றனர்.


அமைச்சரின் அறிவிப்புபடி பார்த்தால், இந்த 8 ஆயிரம் ஆசிரியர்கள் கட்டாயம் தேர்வு எழுதியாக வேண்டுமா? என்ற கேள்வி எழுந்துள்ளது. இதுகுறித்து அரசு தரப்பில் தெளிவான விளக்கம் அளிக்க வேண்டும் என்று ஆசிரியர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.