சம வேலைக்கு சம ஊதியம் வழங்க கோரி ஆசிரியர்கள் போராட்டம் Teachers protest demanding equal pay for equal work
சமவேலைக்கு சம ஊதியம் வழங்க கோரி 20 ஆயிரத்திற்கும் மேற்பட்ட இடைநிலை ஆசிரியர்கள் டிச.,1 முதல் பலகட்ட போராட்டங்கள் நடத்தப் போவதாக அறிவித்து உள்ளனர்.
தொடக்கக் கல்வித் துறையில் 2009-க்கு பின் நியமிக்கப்பட்ட இடைநிலை ஆசிரியர்களுக்கு 'சம வேலைக்கு சம ஊதியம்' வழங்க வேண்டும் என 15 ஆண்டுகளாக ஆசிரியர்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர்.
அ.தி.மு.க., ஆட்சியில் நடந்த போராட்டத்தில் அப்போதைய எதிர்க்கட்சி தலைவரான ஸ்டாலினே நேரில் பங்கேற்று, 'தி.மு.க., ஆட்சி அமைந்த வுடன் இக்கோரிக்கையை நிறைவேற்றுவோம்' என உறுதியளித்தார்.
அ.தி.மு.க., தி.மு.க., என இரண்டு கட்சிகள் தேர்தல் அறிக்கைகளிலும் இக்கோரிக்கையை நிறைவேற்றுவதாக உறுதியளித்தனர். ஆனால் இதுவரை நிறைவேற்றவில்லை. இதுதொடர்பாக தமிழக அரசால் நியமிக்கப்பட்ட அதிகாரிகள் குழு பேச்சு வார்த்தையும் இழுத் தடிக்கப்படுவதாக சர்ச்சை எழுந்துள்ளது. இந்நிலையில் இடைநிலை பதிவு மூப்பு ஆசிரியர்கள் இயக்கம் (எஸ்.எஸ்.டி.ஏ.,) டிச.,1 முதல் போராட்டம் நடத்தப்போவதாக அறிவித்துள்ளது. இதுகுறித்து எஸ்.எஸ்.டி.ஏ., மாநில பொதுச் செயலாளர் ராபர்ட் கூறியதாவது:
இக்கோரிக்கை குறித்து பல ஆண்டுகளாக போராடுகிறோம். தி.மு.க., ஆட்சியில் நிறைவேற்றப்படும் என நம்பினோம். ஆனால் இதுவரை நடக்கவில்லை.
செப்.,ல் 48 மணிநேரம் போராட்டம் நடக்கும் என அறிவித்தோம். அப்போது கல்வி அதிகாரிகள் பேச்சு நடத்தி உறுதியளித்தனர். ஆனாலும் தாமதமாவதால் மூன்றுகட்டங்களாக போராட்டம் நடத்த உள்ளோம்.
இதன்படி டிச.,1ல் 20 ஆயிரம் ஆசிரியர்கள் கோரிக்கை அட்டை அணிந்து பள்ளிக்கு செல்வது, டிச.,5ல் கண்டன ஊர்வலம் நடத்துவது, டிச.,24ல் சென்னை தலைமைச் செயலகத்தில் சம்பள மீட்பு உரிமை போராட்டம் நடத்துவது என திட்டமிடப்பட்டுள்ளது. முதல்வர் ஸ்டாலின் இப்பிரச்னைக்கு தீர்வுகாண நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.

ليست هناك تعليقات:
إرسال تعليق
கல்விச்செய்தி நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.