முதுகலைப் பட்டதாரி ஆசிரியர்களின் பணி நீட்டிப்பு மறுப்பு - போராட்டத்திற்கு தள்ளிய கள்ளர் சீரமைப்பு நிர்வாகம்
கல்வியாண்டின் இடையில் ஓய்வு பெறும் ஆசிரியர்களுக்கு கல்வியாண்டின் இறுதி வேலை நாள் வரை மாணவர்களின் கல்வி நலன் கருதி பணி நீட்டிப்பானது தமிழ்நாடு அரசின் வழிகாட்டுதலின்படியும்,, அரசு விதிமுறைகளின் படியும் பள்ளிக்கல்வித்துறை பள்ளிகள், மாநகராட்சி பள்ளிகள், ஆதிதிராவிடர் நலத்துறை பள்ளிகள் போன்றவற்றில், வழங்கப்பட்டு வருகின்றது. ஆனால் கள்ளர் சீரமைப்பு நிர்வாகத்தில் மட்டும் நடப்பு கல்வி ஆண்டில் இதுவரை பணி ஓய்வு பெற்ற முதுகலைப் பட்டதாரி ஆசிரியர்களுக்கு (30.06.25 மற்றும் 31.07.25 ஆகிய தேதிகளில் முறையே ஓய்வு பெற்ற முதுகலைப்பட்டதாரி ஆசிரியர்கள் இரண்டு பேர்) இதுவரை பணி நீட்டிப்புக்கான எந்த ஒரு ஆணையும் வழங்கப்படவில்லை. பணி ஓய்வுக்கான ஆணையிலும் பணி நீட்டிப்புக்கான வாய்ப்பு குறித்து எதுவும் குறிப்பிடப்படவும் இல்லை.
மேலும் இது தொடர்பாக மதுரை கள்ளர் சீரமைப்பு இணை இயக்குநர் அவர்களை தமிழ்நாடு முதுநிலை பட்டதாரி ஆசிரியர் கழகம் மற்றும் தோழமைச் சங்கங்கள் இணைந்து ஆசிரியர் இயக்கங்களின் குழுவின் சார்பாக சந்தித்து முறையிட்டோம். முதுகலைப் பட்டதாரி ஆசிரியர்களின் பணிநிலை சார்ந்த எந்த முடிவுகளும் எடுக்கக்கூடிய அதிகாரங்கள் அனைத்தும் சென்னை மிகப் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சீர்மரபினர் நல ஆணையாளர் அவர்களிடம் தான் உள்ளது மற்றும் இணை இயக்குநரிடம் இது தொடர்பாக எந்த அதிகாரமும் இல்லை என்ற நிலையில் ஆணையாளர் அலுவலகத்தில் முறையிட்டோம். பணி நீட்டிப்புக்கான ஆணை காலதாமதமானதால் கடந்த 06.08.2025 அன்று மதுரை கள்ளர் சீரமைப்பு இணை இயக்குநர் அலுவலகத்தில் பணி நீட்டிப்புக்கான ஆணையை வழங்கிடக் கோரி ஆசிரியர் இயக்கங்களின் சார்பாக *காத்திருப்புப் போராட்டம்* அறிவித்திருந்தோம்.
இந்நிலையில், 05.08.25 மற்றும் 06.08.25 ஆகிய நாட்களில் கள்ளர் சீரமைப்பு கல்வி அலுவலர், கள்ளர் சீரமைப்பு இணை இயக்குநரின் நேர்முக உதவியாளர் மற்றும் கள்ளர் சீரமைப்பு இணை இயக்குநர் ஆகியோருடனான பேச்சுவார்த்தையில் இக்கோரிக்கை சென்னை மிகப் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சீர்மரபினர் நல ஆணையாளர் அவர்களின் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டதாக தெரிவிக்கப்பட்டதின் அடிப்படையிலும் மேலும் ஒரு வார காலத்திற்குள் பணி நீட்டிப்புக்கான ஆணை வழங்க உறுதி அளிக்கப்பட்டதின் அடிப்படையிலும் காத்திருப்புப் போராட்டம் தற்காலிகமாக ஒத்திவைக்கப்பட்டது.
மேலும் கோரிக்கை தொடர்பாக மாண்புமிகு முதலமைச்சர் அவர்களின் தனிப்பிரிவிற்கும் மாண்புமிகு பிற்படுத்தப்பட்டோர், மிகப் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறை அமைச்சர் அவர்களுக்கும் மின்னஞ்சல் வழியாக கோரிக்கை மனுக்கள் அனுப்பப்பட்டுள்ளது.
அதன் தொடர்ச்சியாக, சென்னை மிகப் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சீர்மரபினர் நல ஆணையாளர் அவர்களின் நேர்முக உதவியாளர் அவர்களிடமும், துணை இயக்குநர் (மிகப் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சீர்மரபினர் நலம்) அவர்களிடமும் தொடர்ந்து பணி நீட்டிப்பு கோரிக்கை தொடர்பாக கடந்த 20 நாட்களாக அலைபேசி வாயிலாக பேச்சுவார்த்தை நடத்தி வருகிறோம். இருப்பினும் பணி நீட்டிப்புக்கான ஆணை வழங்குவது தொடர்பாக எந்த தகவலும் இதுவரை உறுதிப்படுத்தவில்லை.
மேலும் கள்ளர் சீரமைப்பில் முதுகலைப் பட்டதாரி ஆசிரியர்களின் காலிப்பணியிடங்கள் எண்ணிக்கை அதிகளவு (40 அரசு கள்ளர் மேல்நிலைப் பள்ளிகளில் மொத்தம் 37 காலிப்பணியிடங்கள்) இருக்கின்றன. பணி நீட்டிப்பு மறுக்கப்பட்டுள்ள முதுகலைப் பட்டதாரி ஆசிரியர்கள் கடந்த காலங்களில் சிறந்த தேர்ச்சி சதவீதங்களை வழங்கியிருக்கிறார்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது. இவ்வாறு ஆசிரியர் பற்றாக்குறை உள்ள சூழ்நிலையிலும் சிறந்த தேர்ச்சி சதவீதங்களை வழங்கியிருந்தும் கூட மாணவர்களின் கல்வி நலனை கருத்தில் கொள்ளாமல் பணி நீட்டிப்பு வழங்காமல் காலதாமதப்படுத்துவது எந்த விதத்திலும் நியாயம் இல்லை என்றும் மாணவர்களின் கல்வி நலனில் மேற்கொண்டு பாதிப்பு ஏற்படுத்துவதாகவும் கருதுகிறோம். பணி நீட்டிப்புக்கான ஆணை என்பது பணி ஓய்வுக்கான ஆணையோடு இணைத்து வழங்கப்பட வேண்டும். அவ்வாறு தான் மற்ற துறைகளில் இதுவரை வழங்கப்பட்டு வருகிறது. ஆனால் மதுரை கள்ளர் சீரமைப்புத் துறையை நிர்வகிக்கக்கூடிய சென்னை மிகப் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சீர்மரபினர் நல ஆணையாளர் அலுவலகமானது தொடர்ந்து சமூக நீதிக்கு எதிராக செயல்படுவதுடன் (மற்ற துறைகளில் இயல்பாக வழங்கப்படும் பணி நீட்டிப்பு இங்கு வழங்கப்படுவதில்லை) தமிழ்நாடு அரசின் பணி நீட்டிப்புக்கான அரசாணைக்கு எதிராகவும் செயல்படுகிறது.
மேலும் சென்னை நிர்வாகமானது, முதுகலைப் பட்டதாரி ஆசிரியர்களின் பணிவரன் முறை, தகுதிக்காண்பருவம், தேர்வு நிலைகள், வெளி மாவட்ட ஆசிரியர்களுக்கான தடையின்மைச் சான்று வழங்குதல் போன்ற பல்வேறு கோரிக்கைகளுக்கான அலுவலகத்தின் செயல்பாடுகளை பல ஆண்டுகளாக தொடர்ந்து நிலுவையில் வைத்திருப்பதற்கான காரணம் என்னவென்று இதுவரை தெரியவில்லை. மூன்று மாவட்டங்களில் இயங்கும் பள்ளிகளும் ஆசிரியர்களும் மதுரையை மையமாக கொண்டு கள்ளர் சீரமைப்பு துறை இயங்கிக் கொண்டிருக்கிறது. ஆனால் இந்தத் துறையையும் இங்கிருக்கும் ஆசிரியர்கள் நலன், மாணவர் நலன் சார்ந்து முடிவு எடுக்கும் அனைத்து அதிகாரங்களும் சென்னை மிகவும் பிற்படுத்தப்பட்டோர் ஆணையருக்கு வழங்கியிருப்பதால், சாதாரணமாக ஊதிய உயர்வு, ஓய்வூதிய பலன், கல்வி மற்றும் பிற அனுமதிகள் மற்ற துறைகளில் மாவட்ட கல்வி அலுவலர் முதன்மை கல்வி அலுவலர் என்ற அடிப்படையில் எளிமையாக இயங்கும்போது, கள்ளர் சீரமைப்பில் உயர்ந்த பதவியில் இருக்கும் இந்திய ஆட்சி பணியாளர்களுக்கு கொடுக்கும் போது, பல்வேறு விதமான கீழ் அடுக்குகள் வாயிலாக சென்று ஆணை வருவதற்கு பல ஆண்டுகள் காத்திருக்க கூடிய நிலைமை தொடர்கிறது.
பல ஆண்டுகளாக இங்கு பணியாற்றும் ஆசிரியர்கள் தொடர்ந்து கோரிக்கையை வைத்திருப்பினும் மிகவும் பிற்படுத்தப்பட்ட நலத்துறையும், தமிழக அரசும் துறையின் வளர்ச்சி குறித்து கவனம் செலுத்தாமல் அமைதி காப்பது துறையின் பல்வேறு வகையான பின்னடைவுகளுக்கு காரணமாக அமைகிறது. இது போன்ற நிர்வாகத்தின் செயல்பாடுகள் எங்களைப் போன்ற போராட்டக் குணமிக்க அமைப்புகளை போராட்ட பாதைக்கு வலுக்கட்டாயமாக தள்ளக்கூடிய செயலாக நாங்கள் பார்க்கிறோம்.
மேலும் கள்ளர் சீரமைப்பு இணை இயக்குநருக்கு மேற்கூறிய கோரிக்கைகளுக்கான முடிவெடுக்கக்கூடிய முழு அதிகாரங்களையும் வழங்கினால் தான் நிரந்தர தீர்வாக அமையும் என்று நாங்கள் கருதுகிறோம்.
எனவே, தாமதிக்காமல் மாணவர்களின் கல்வி நலன் கருதி, கள்ளர் சீரமைப்பில் பணி ஓய்வு பெற்ற முதுகலைப் பட்டதாரி ஆசிரியர்களுக்கு பணி நீட்டிப்புக்கான ஆணையை உடனடியாக வழங்கிட கோரியும்
ஆசிரியர்களின் பணிநிலை சார்ந்த கோரிக்கைகள் அனைத்தும் தொய்வின்றி உரிய காலத்தில் நடைபெற கள்ளர் சீரமைப்பு இணை இயக்குநருக்கு முழு அதிகாரம் வழங்கிடக் கோரியும் தமிழ்நாடு முதுநிலை பட்டதாரி ஆசிரியர் கழகம் மற்றும் தோழமைச் சங்கங்களின் இணைப்புடன், 26.08.25 செவ்வாய்க்கிழமை அன்று மாலை மதுரை கள்ளர் சீரமைப்பு இணை இயக்குநர் அலுவலகத்தில் காத்திருப்புப் போராட்டம் கோரிக்கையை வெல்லும் வரை நடத்துவதற்கு முடிவாக்கப்பட்டுள்ளது. தமிழக அரசும் பிற்படுத்தப்பட்ட மற்றும் மிகவும் பிற்படுத்தப்பட்ட நலத்துறையும் உரிய தீர்வினை எடுத்து தருமாறு தமிழ்நாடு முதுநிலைப் பட்டதாரி ஆசிரியர் கழக மாநிலப் பொருளாளர் கார்த்திகேயன், மதுரை மாவட்ட தலைவர் பாண்டி மற்றும் மதுரை மாவட்டச் செயலாளர் ராஜசேகர் கூறினார்கள்.
ليست هناك تعليقات:
إرسال تعليق
கல்விச்செய்தி நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.