அங்கன்வாடி மையங்களுக்கு 15 நாள் விடுமுறை அறிவிப்பு - Kalviseithi Official - No:1 Education Website in Tamil Nadu

Latest

الخميس، 8 مايو 2025

அங்கன்வாடி மையங்களுக்கு 15 நாள் விடுமுறை அறிவிப்பு



அங்கன்வாடி மையங்களுக்கு 15 நாள் விடுமுறை அறிவிப்பு

கோடை வெப்பத்தின் தாக்கத்திலிருந்து குழந்தைகளை பாதுகாக்கும் நோக்கத்துடன் அங்கன்வாடி, குழந்தைகள் மையங்களுக்கு மே 11 முதல் மே 25 வரை 15 நாட்களுக்கு அரசு விடுமுறை அளித்துள்ளது.

தமிழகத்தில் அங்கன்வாடிகளில் பணிபுரியும் முதன்மை ஊழியர்களுக்கு ஒவ்வொரு ஆண்டும் மே மாதம் 2-வது வாரமும், உதவியாளர்களுக்கு 3-ம் வாரமும், குறு அங்கன்வாடி பணியாளர்களுக்கு 4-வது வாரமும் என பயனாளிகளுக்கு உணவூட்டும் பணிகளுக்கு எந்தவொரு இடையூறும் ஏற்படாத வகையில் கோடை விடுமுறை வழங்கப்பட்டு வந்தது. இந்நிலையில் கடந்த 2024-ம் ஆண்டில் மே 8 முதல் மே 22-ம் தேதி வரை 15 நாட்களுக்கு குழந்தைகள் மையங்களுக்கு கோடை விடுமுறை அளித்து அரசாணை வெளியிடப்பட்டது. இந்த விடுமுறை காலங்களில் முன்பருவக் கல்வி பயிலும் குழந்தைகளுக்கு வழங்கப்பட்டு வரும் சத்துமாவு அளவை கணக்கிட்டு 15 நாட்களுக்கு 750 கிராம் சத்துமாவு கோடை விடுமுறை தொடங்கும் முன்பாகவே வீட்டுக்கு எடுத்துச் சென்று பயன்படுத்தும் வகையில் வழங்க ஏற்பாடு செய்யப்பட்டது. அதைத்தொடர்ந்து நடப்பாண்டும் குழந்தைகள் மையங்களுக்கு மே 11-ம் தேதி முதல் மே 25-ம் தேதி வரை 15 நாட்களுக்கு கோடை விடுமுறை வழங்குமாறு ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சி பணிகள் இயக்குநர் தமிழக அரசிடம் கேட்டுக்கொண்டுள்ளார்.

இதையடுத்து ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சிப் பணிகள் இயக்குநரின் கருத்துருவை பரிசீலித்து சமூக நலத்துறை செயலர் ஜெயஸ்ரீ முரளிதரன் வெளியிட்ட அரசாணையில் கூறியிருப்பதாவது:

கோடை வெப்பத்தின் தாக்கத்திலிருந்து குழந்தைகளை பாதுகாக்கும் நோக்கத்துடன் வரும் மே 11-ம் தேதி முதல் மே 25-ம் தேதி வரை 15 நாட்களுக்கு குழந்தைகள் மையங்களுக்கு கோடை விடுமுறை அளிக்கப்படுகிறது. இந்த விடுமுறை காலத்தில் 2 முதல் 6 வயதுக்குட்பட்ட முன்பருவக் கல்வி பயிலும் குழந்தைகளுக்கு நாளொன்றுக்கு தற்போது வழங்கப்பட்டு வரும் 50 கிராம் சத்துமாவை கணக்கிட்டு 15 நாட்களுக்கு 750 கிராம் சத்துமாவை கோடை விடுமுறை தொடங்கும் முன் வீட்டுக்கு எடுத்துச் சென்று பயன்படுத்தும் வகையில் பயனாளிகளுக்கு வழங்க அனுமதி அளிக்கப்படுகிறது.

மேலும் மே மாதத்தில் குழந்தைகளின் வருகை 50 சதவீதம் மட்டுமே இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுவதன் அடிப்படையில், அந்த அளவுக்கு மட்டும் ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சிப் பணிகள் இயக்குநருக்கு அனுமதி வழங்கப்படுகிறது. கூடுதல் தேவை இருந்தால் அதுகுறித்து தனியே பரிசீலிக்குமாறு கேட்டுக்கொள்கிறோம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

ليست هناك تعليقات:

إرسال تعليق

கல்விச்செய்தி நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.