MBBS,BDS முதலாம் ஆண்டுக்கான வகுப்புகள் எப்போது? - Kalviseithi Official - No:1 Education Website in Tamil Nadu

Latest

الأربعاء، 23 أغسطس 2023

MBBS,BDS முதலாம் ஆண்டுக்கான வகுப்புகள் எப்போது?



எம்பிபிஎஸ், மற்றும் பிடிஎஸ் முதலாம் ஆண்டுக்கான வகுப்புகள் எப்போது?

எம்.பி.பி.எஸ் மற்றும் பி.டி.எஸ் முதலாம் ஆண்டுக்கான வகுப்புகள் செப்டம்பர் 1ம் தேதி தொடங்கப்படும் என அறிவிக்கப்பட்ட நிலையில், கல்லூரி திறப்பு தேதி தள்ளிப்போக வாய்ப்பு இருப்பதாக மருத்துவக் கல்வி வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

அரசு மற்றும் தனியார் சுயநிதி மருத்துவ கல்லூரிகளில் உள்ள அரசு ஒதுக்கீட்டு எம்.பி.பி.எஸ்., பி.டி.எஸ். இடங்களுக்கும், சுயநிதி கல்லூரிகளில் உள்ள நிர்வாக ஒதுக்கீட்டு இடங்களுக்கும் நீட் தேர்வு மதிப்பெண் அடிப்படையில் கலந்தாய்வு மூலம் மாணவர் சேர்க்கை நடந்து வருகிறது. அகில இந்திய ஒதுக்கீட்டு இடங்கள் போக, சுமார் 10 ஆயிரம் எம்.பி.பி.எஸ்., பி.டி.எஸ். இடங்களுக்கு கலந்தாய்வு நடத்தப்படுகிறது. முதல் சுற்று கலந்தாய்வு கடந்த மாதம் (ஜூலை) 25ம் தேதி தொடங்கி கடந்த 14ம் தேதியுடன் நிறைவு பெற்றது. இந்த கலந்தாய்வில் ஒதுக்கீடு ஆணை பெற்றவர்கள் அந்தந்த கல்லூரிகளில் சேர்ந்துள்ளனர். மீதம் உள்ள காலியிடங்களுக்கான 2வது சுற்று கலந்தாய்வு நேற்று முன்தினம் முதல் நடைபெற்று வருகிறது. அதாவது, அரசு மற்றும் சுயநிதி கல்லூரிகளில் உள்ள 118 அரசு ஒதுக்கீட்டு எம்.பி.பி.எஸ். இடங்களுக்கும், 648 நிர்வாக ஒதுக்கீட்டு எம்.பி.பி.எஸ். இடங்களுக்கும், அதேபோல் 85 அரசு ஒதுக்கீட்டு பி.டி.எஸ். இடங்களுக்கும், 818 நிர்வாக ஒதுக்கீட்டு பி.டி.எஸ். இடங்களுக்கும் நடத்தப்பட்டு வருகிறது.

விருப்ப இடங்களை தேர்வு செய்வது, ஒதுக்கீடு ஆணை பெறுவது, கல்லூரிகளில் சேருவது என அவகாசம் வழங்கப்பட்டு அடுத்த மாதம் (செப்டம்பர்) 4ம் தேதியுடன் கலந்தாய்வு நிறைவு பெற உள்ளது. இந்நிலையில் செப்டம்பர் 1ம் தேதி முதலாம் ஆண்டு மாணவ-மாணவிகளுக்கான வகுப்புகள் தொடங்கப்படும் என ஏற்கனவே அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், அகில இந்திய மருத்துவ கலந்தாய்வில் இன்னும் சில இடங்கள் நிரப்பப்படாமல் உள்ளது. இதனால், முதலாம் ஆண்டுக்கான வகுப்புகள் தொடங்குவது தள்ளிப்போக வாய்ப்பு இருப்பதாக மருத்துவக்கல்வி வட்டாரங்கள் தெரிவிகின்றன.

இதுதொடர்பான அறிவிப்பு இந்த மாத இறுதிக்குள் வெளியாக வாய்ப்பு இருப்பதாகவும் கூறப்படுகிறது. வகுப்புகள் தொடங்குவது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்புகள் ஏதும் வராத காரணத்தினால் மாணவ-மாணவிகள் குழப்பத்தில் உள்ளனர்.

ليست هناك تعليقات:

إرسال تعليق

கல்விச்செய்தி நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.