மாடல் ஸ்கூலுக்கே முன்னுரிமை: அரசு பள்ளி மாணவர்கள் பாதிப்பு - Kalviseithi Official - No:1 Education Website in Tamil Nadu

Latest

الخميس، 17 أغسطس 2023

மாடல் ஸ்கூலுக்கே முன்னுரிமை: அரசு பள்ளி மாணவர்கள் பாதிப்பு

‘மாடல் ஸ்கூலுக்கே முன்னுரிமை’ அரசு பள்ளி மாணவர்களுக்கு பாதிப்பு



மாடல் ஸ்கூலுக்கே முன்னுரிமை: அரசு பள்ளி மாணவர்கள் பாதிப்பு

சென்னை: வெறும் 2,000 பேர் படிக்கும், 'மாடல் ஸ்கூல்' என்ற மாதிரி பள்ளிகளுக்கே முக்கியத்துவம் அளிப்பதால், 3.5 லட்சம் அரசு பள்ளி மாணவர்களுக்கு பாதிப்பு ஏற்பட்டு உள்ளது.

தமிழக பள்ளிக்கல்வி துறையில், மாதிரி பள்ளிகள் என்ற, 'ஏகலைவா மாடல் ஸ்கூல்' திட்டத்தின் கீழ், 38 மாவட்டங்களில், தலா ஒரு பள்ளி செயல்படுகிறது. அவற்றில், 2,000 மாணவ - மாணவியர் படிக்கின்றனர். இந்த மாணவர்களுக்கு உணவு, உறைவிட வசதி வழங்கப்பட்டுள்ளது. அதிருப்தி

அரசு மற்றும் பிற தனியார் பள்ளிகளில் இருந்து, அரசு பள்ளிகளில் பிளஸ் 1, பிளஸ் 2 சேர்ந்த, 'டாப்பர்' மாணவர்கள் மட்டும், மாதிரி பள்ளிகளில் சேர்க்கப்பட்டுள்ளனர். அரசு மாதிரி பள்ளிகளில், பொதுத் தேர்வு மதிப்பெண்ணை மட்டுமே இலக்காக வைத்து, பயிற்சி அளிக்கப்படுகிறது.

அதனால், மாநிலம் முழுதும், பிளஸ் 1, பிளஸ் 2 பாடம் நடத்தும் முதுநிலை ஆசிரியர்களில் திறமையானவர்கள் மட்டும், அங்கிருந்து மாற்றப்பட்டு, மாதிரி பள்ளிகளில் நியமிக்கப்பட்டு உள்ளனர்.

கிராமப்புற மாணவர்களுக்கு சிறப்பான கல்வி வழங்கிய பல ஆசிரியர்கள், மாதிரி பள்ளி பணிக்கு மாற்றப்பட்டு உள்ளனர். இதன் காரணமாக, சரியான ஆசிரியர்கள் இன்றி, கிராமப்புற அரசு பள்ளிகளுக்கு பாதிப்பு ஏற்பட்டு உள்ளது.

இந்நிலையில், அரசு பள்ளிகளில் படிக்கும், 3.5 லட்சம் மாணவர்களை விட, 2,000 பேர் படிக்கும், 38 மாதிரி பள்ளிகளுக்கு மட்டும் முக்கியத்துவம் அளிப்பது, பெற்றோருக்கும், ஆசிரியர்களுக்கும் அதிருப்தியை ஏற்படுத்திஉள்ளது.

பிரிவினை இதுகுறித்து, முதுநிலை பட்டதாரி ஆசிரியர் கழக முன்னாள் தலைவர் கே.பி.ஓ.சுரேஷ் கூறியதாவது:

பள்ளிக்கல்வி அதிகாரிகளின், 'மாடல் ஸ்கூல்' மற்றும் 'எலைட் ஸ்கூல்' போன்ற திட்டங்கள், அரசு பள்ளிகளை மட்டுமே நம்பியுள்ள மாணவர்கள் மத்தியில் பிரிவினையை ஏற்படுத்துகிறது.மாணவர்களில் நல்ல மதிப்பெண் எடுப்பவர், குறைந்த மதிப்பெண் எடுப்பவர் என, தேர்வுக்கு முன்பே பிரித்து, அதில் அதிக மதிப்பெண் பெறுபவருக்கு மட்டும், கூடுதல்கள் வசதிகள் அளிக்கும் நடவடிக்கை, அதிகாரிகளின் மாற்றாந்தாய் மனப்பான்மையை காட்டுகிறது.

இந்த நடவடிக்கையால், கிராமப்புற மற்றும் சமூக, பொருளாதார உதவிகளற்ற, ஆர்வமுள்ள மாணவர்கள், தங்களால் படித்து முன்னேற முடியாது என்ற தாழ்வு மனப்பான்மைக்கு ஆளாக நேரிடும். கற்றலில் குறைந்த மாணவர்களுக்கு தான், சிறந்த ஆசிரியர்களின் தேவை உள்ளது. எனவே, மாணவர்களிடம் பிரிவினை ஏற்படுத்தும், மாடல் ஸ்கூல், எலைட் ஸ்கூல் போன்ற கண்துடைப்பு கவர்ச்சி திட்டங்களை கைவிட வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்

ليست هناك تعليقات:

إرسال تعليق

கல்விச்செய்தி நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.