கால்நடை மருத்துவப் படிப்புகளுக்கு கலந்தாய்வு தேதி அறிவிப்பு - Kalviseithi Official - No:1 Education Website in Tamil Nadu

Latest

Wednesday, August 9, 2023

கால்நடை மருத்துவப் படிப்புகளுக்கு கலந்தாய்வு தேதி அறிவிப்பு

கால்நடை மருத்துவப் படிப்புகளுக்கு ஆக.16 முதல் கலந்தாய்வு

கால்நடை மருத்துவ படிப்புகளுக்கான கலந்தாய்வு வரும் 16-ம் தேதி தொடங்குகிறது. சிறப்புபிரிவு, 7.5 சதவீத உள் இடஒதுக்கீட்டுக்கு நேரடியாகவும், பொது பிரிவுக்கு ஆன்லைனிலும் கலந்தாய்வு நடைபெறவுள்ளது.

கால்நடை மருத்துவப் படிப்புகளான பி.வி.எஸ்சி. - ஏ.ஹெச் மற்றும் பி.டெக் படிப்புகளுக்கு 2023 - 2024-ம் ஆண்டு மாணவர் சேர்க்கைக்கான தரவரிசைப் பட்டியல் ஜூலை 26-ம் தேதி வெளியிடப்பட்டது. அரசு பள்ளி மாணவர்கள்...: பி.வி.எஸ்சி. - ஏ.ஹெச் படிப்புக்கான தரவரிசைப் பட்டியலில் அரசுபள்ளி மாணவர்கள் 2 பேர் உட்பட 31 பேர் கட்-ஆஃப் மதிப்பெண் 200-க்கு 200 பெற்று பட்டியலில் முன்னிலை பெற்றுள்ளனர். நடப்பாண்டில் 7.5 சதவீத உள் இடஒதுக்கீட்டின் கீழ் அரசு பள்ளி மாணவர்களுக்கு பி.வி.எஸ்சி - ஏ.ஹெச் படிப்பில் 45 இடங்கள், உணவுத் தொழில்நுட்ப படிப்பில் 3 இடங்கள், பால்வளத் தொழில்நுட்ப படிப்பில்2 இடங்கள், கோழியின தொழில்நுட்ப படிப்பில் 3 இடங்கள் என மொத்தம் 53 இடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன.

இந்நிலையில், பி.வி.எஸ்சி. -ஏ.ஹெச் மற்றும் பி.டெக் படிப்புகளுக்கான கலந்தாய்வு வரும் 16-ம் தேதி தொடங்குகிறது. இதுதொடர்பாக தமிழ்நாடு கால்நடைமருத்துவ அறிவியல் பல்கலைக்கழகம் நேற்று வெளியிட்ட அறிவிப்பில் கூறியிருப்பதாவது: முதல் நாளில் சிறப்பு பிரிவு: பி.வி.எஸ்சி. - ஏ.ஹெச் மற்றும் பி.டெக் படிப்புகளுக்கு சிறப்பு பிரிவினருக்கான (மாற்றுத் திறனாளிகள், முன்னாள் ராணுவ வீரர்கள்வாரிசுகள், விளையாட்டு வீரர்கள்)கலந்தாய்வு வரும் 16-ம் நடைபெறுகிறது. இந்த படிப்புகளுக்கு 7.5 சதவீத உள் இடஒதுக்கீடு கலந்தாய்வு 17-ம் தேதி நடைபெறவுள்ளது. பி.டெக் படிப்புகளுக்கான முதல் சுற்று கலந்தாய்வு 18-ம் தேதி நடைபெறுகிறது.

இந்த கலந்தாய்வுகள் அனைத்தும் நேரடியாக சென்னை வேப்பேரியில் உள்ள சென்னை கால்நடை மருத்துவக் கல்லூரியில் காலை 9 மணிக்கு தொடங்கி நடைபெறவுள்ளது. கலந்தாய்வுக்கு வரும் மாணவர்கள் ஒரு மணிநேரம் முன்னதாகவே வரவேண்டும்.

ஆன்லைனில் பொதுப்பிரிவு: பி.வி.எஸ்சி. - ஏ.ஹெச் படிப்புக்கு பொதுப்பிரிவுக்கான முதல் சுற்று கலந்தாய்வு ஆன்லைனில் நடக்க இருக்கிறது. அதற்கான தேதி மற்றும் நேரம் பின்னர் அறிவிக்கப்படும். இதுதொடர்பான மேலும் விவரங்களை www.adm.tanuvas.ac.in, www.tanuvas.ac.in என்ற பல்கலைக்கழகத்தின் இணையதளங்களில் அறிந்து கொள்ளலாம். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.