கோரிக்கைகளை வலியுறுத்தி 10000 ஆசிரியர்கள் செப்டம்பர் 29 ல் கோட்டை நோக்கிப் பேரணி - Kalviseithi Official - No:1 Education Website in Tamil Nadu

Latest

الأحد، 20 أغسطس 2023

கோரிக்கைகளை வலியுறுத்தி 10000 ஆசிரியர்கள் செப்டம்பர் 29 ல் கோட்டை நோக்கிப் பேரணி



கோரிக்கைகளை வலியுறுத்தி 10000 ஆசிரியர்கள் செப்டம்பர் 29 ல் கோட்டை நோக்கிப் பேரணி

தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணியின் மாநில செயற்குழுக் கூட்டம் இன்று (20.08.2023) திருச்சியில் நடைபெற்றது. கூட்டத்திற்கு மாநிலத் தலைவர் மூ.மணிமேகலை தலைமை தாங்கினார்.

திருச்சி மாவட்டச்செயலாளர் சி.ஆரோக்கியராஜ் வரவேற்புரையாற்றினார். மாநிலப் பொருளாளர் ஜீ.மத்தேயு வரவு-செலவு அறிக்கையைச் சமர்ப்பித்தார். STFI பொதுக்குழு உறுப்பினர் தோ.ஜாண் கிறிஸ்துராஜ் நன்றி கூறினார். கூட்ட முடிவுகள் குறித்து மாநில பொதுச்செயலாளர் ச.மயில் தெரிவித்ததாவது. தி.மு.க தனது சட்டமன்றத் தேர்தல் அறிக்கையில் தன்பங்கேற்பு ஓய்வூதியத் திட்டத்தை ரத்து செய்துவிட்டு பழைய ஓய்வூதியத் திட்டத்தை மீண்டும் கொண்டு வருவோம் என்றும்,

தமிழ்நாட்டில் இடைநிலை ஆசிரியர்களின் ஊதிய முரண்பாடுகளைக் களைவோம் என்றும்,

கடந்த ஆட்சியில் பறிக்கப்பட்ட உயர்கல்விக்கான ஊக்க ஊதியத்தை மீண்டும் வழங்குவோம் என்றும்,

கடந்த ஆட்சியில் பறிக்கப்பட்ட ஈட்டிய விடுப்பு ஒப்படைப்பு உரிமையை மீண்டும் வழங்குவோம் என்பன உள்ளிட்ட பல்வேறு வாக்குறுதிகளை வழங்கியது.

ஆனால், தி.மு.க ஆட்சிப் பொறுப்பேற்று இரண்டாண்டுகள் முடிந்துவிட்ட நிலையிலும் மேற்கண்ட முக்கிய வாக்குறுதிகளில் ஒன்றைக்கூட நிறைவேற்ற முன்வரவில்லை. இது தொடர்பாக ஜாக்டோ ஜியோ, டிட்டோஜாக் உள்ளிட்ட கூட்டமைப்புக்கள் போராட்டங்கள் அறிவித்ததைத் தொடர்ந்து அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகள் மட்டத்தில் பலமுறை நடைபெற்ற பேச்சுவார்த்தைகள் எவ்விதப்பயனையும் அளிக்கவில்லை. இதனால் தமிழ்நாட்டில் ஆசிரியர்கள் மற்றும் அரசு ஊழியர்கள் மத்தியில் மிகப்பெரிய அளவில் ஏமாற்றமும், அதிருப்தியும் ஏற்பட்டுள்ளது என்பதை தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி தமிழ்நாடு அரசுக்கு அழுத்தமாகத் தெரிவித்துக்கொள்கிறது.

மேலும், தற்போது தொடக்கக்கல்வித்துறையில் நடைமுறையில் உள்ள எண்ணும் எழுத்தும் திட்டத்தால் 1 முதல் 5 வகுப்புக்கள் வரை பயிலும் மாணவர்களின் கல்வி வளர்ச்சி பின்னடைவைச் சந்தித்துள்ளது. இத்திட்டத்தால் ஆசிரியர்களின் கற்பித்தல் நேரம் குறைந்து நாள்தோறும் இணையவழியில் தேர்வு நடத்துவதும், மதிப்பீடு செய்வதுமே நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. எனவே, இத்திட்டத்தை தமிழ்நாடு அரசு உடனடியாக ஆய்வு செய்து திரும்பப் பெற்று ஆசிரியர்கள் முழு நேரமும் சுதந்திரமாக மாணவர்களுக்குக் கற்பிப்பதற்கு வழிவகை செய்ய வேண்டும்.

மேலும், தொடக்கக்கல்வித்துறையில் பணியாற்றும் தலைமை ஆசிரியர்கள் மற்றும் ஆசிரியர்கள் நாள்தோறும் EMIS இணையதளத்தில் தேவையற்ற பல்வேறு புள்ளி விவரங்களைப் பதிவு செய்ய நிர்ப்பந்திக்கப்படுவதால் ஆசிரியர்கள் நாள் முழுவதும் புள்ளி விவரங்களைப் பதிவேற்றம் செய்யும் பணியையே செய்ய வேண்டியுள்ளது.

இதனால் ஆசிரியர்களின் கற்பித்தல் நேரம் குறைந்து மாணவர்களின் கல்வி நலன் பாதிக்கப்படுகிறது. எனவே, EMIS இணையதளத்தில் புள்ளி விவரங்களைப் பதிவு செய்யும் பணியிலிருந்து ஆசிரியர்களை விடுவித்து முழுமையாக கற்பித்தல் பணியில் ஈடுபட தமிழ்நாடு அரசு வழிவகை செய்ய வேண்டும்.

அதேபோன்று ஆசிரியர்கள் பதவி உயர்வு பெற தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும் என்ற உயர்நீதிமன்ற இரு நீதிபதிகள் அமர்வு வழங்கிய தீர்ப்பை எதிர்த்து தமிழ்நாடு அரசு மேல்முறையீடு செய்திட வேண்டும். மேலும், ஆசிரியர்கள் பதவி உயர்வில் செல்ல தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற வேண்டிய தேவையில்லை என்பதைத் தமிழ்நாடு அரசு கொள்கை முடிவாக அறிவித்து ஒரு சட்டப்பாதுகாப்பை வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணியின் சார்பில் 29.09.2023 அன்று சென்னையில் 10000 ஆசிரியர்களைத் திரட்டி கோட்டை நோக்கிப் பேரணியாகச் சென்று மாண்புமிகு முதலமைச்சர் அவர்களிடம் கோரிக்கை மனு அளித்து வலியுறுத்துவதென மாநிலச் செயற்குழு முடிவு செய்துள்ளது.

எனவே, தமிழ்நாடு அரசு தேர்தல் வாக்குறுதியில் அளித்த ஆசிரியர்கள் மற்றும் அரசு ஊழியர்கள் சார்ந்த வாழ்வாதாரக் கோரிக்கைகளை உடனடியாக நிறைவேற்ற முன்வர வேண்டுமென தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி தமிழ்நாடு அரசை வலியுறுத்திக் கேட்டுக்கொள்கிறது.

இக்கூட்டத்தில் மாநிலம் முழுவதுமிருந்து சங்கத்தின் மாநில நிர்வாகிகள், மாவட்டச் செயலாளர்கள் மற்றும் மாநில செயற்குழு உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.

இப்படிக்கு

ச.மயில்

பொதுச் செயலாளர்

தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி

ليست هناك تعليقات:

إرسال تعليق

கல்விச்செய்தி நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.