Essay, Speech Competition in Tamil for School and College Students: Collector Information - பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கு தமிழில் கட்டுரை, பேச்சுப்போட்டி: கலெக்டர் தகவல்
காஞ்சிபுரம் மாவட்ட கலெக்டர் கலைச்செல்வி மோகன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:
காஞ்சிபுரம் மாவட்டத்தில் 11 மற்றும் 12ம் வகுப்பு மற்றும் கல்லூரிகளில் பயிலும் மாணவ, மாணவிகளிடையே தமிழில் படைப்பாற்றலையும், பேச்சாற்றலையும் வளர்க்கும் நோக்கில், ஆண்டுதோறும் தமிழ் வளர்ச்சித்துறை வாயிலாக கவிதை, கட்டுரை, பேச்சு போட்டிகள் நடத்தி, முதல் 3 இடங்களை பிடிக்கும் மாணவர்களுக்கு முதல் பரிசு ₹10 ஆயிரம், 2ம் பரிசு ₹7 ஆயிரம், 3ம் பரிசு ₹5 ஆயிரம் ஒவ்வொரு போட்டிக்கும் வழங்குவதோடு, பாராட்டு சான்றிதழும் வழங்கி சிறப்பிக்கப்படுகிறது. இந்த போட்டிகளில் முதல் பரிசு பெறும் மாணவன் சென்னையில் நடைபெறும் மாநில அளவிலான போட்டியில் அரசு செலவில் பங்கேற்கும் வாய்ப்பையும் பெறுவார்.
அந்த வகையில், காஞ்சிபுரம் மாவட்டத்தில் 11 மற்றும் 12ம் வகுப்பு மற்றும் கல்லூரியில் பயிலும் மாணவ, மாணவிகளுக்கு, 2022-23ம் ஆண்டுக்கான கவிதை, கட்டுரை, பேச்சு போட்டிகள் நாளை (4ம்தேதி) காஞ்சிபுரம், பச்சையப்பன் மகளிர் கல்லூரியில் காலை 9 மணிக்கு நடைபெற உள்ளது.
இதில், மாணவர்கள் தங்கள் பெயரை பதிவுசெய்து போட்டிகளில் கலந்துகொள்ளலாம்.
விண்ணப்பப் படிவம் மற்றும் விதிமுறைகள் அனைத்து பள்ளி, கல்லூரிகளுக்கும் முதன்மை கல்வி அலுவலர், கல்லூரி கல்வி இணை இயக்குநர் மூலம் அனுப்பப்பட்டுள்ளது. போட்டியில் கலந்துகொள்ளும் விதிமுறைகள்: போட்டியில் காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள பள்ளி, கல்லூரிகளில் பயிலும் மாணவ, மாணவிகள் மட்டும் பங்கேற்கலாம்.
தாங்கள் பயிலும் பள்ளி தலைமையாசிரியர், கல்லூரி முதல்வரின் அனுமதி பெற்று பரிந்துரையுடன் போட்டியில் பங்கேற்கலாம்.
ஒவ்வொரு போட்டிக்கும் ஒருவர் வீதம் மொத்தம் 3 பேரை மட்டும் தெரிவு செய்து பள்ளி தலைமையாசிரியர், கல்லூரி முதல்வர் அனுப்பி வைக்க வேண்டும்.
ஒரு மாணவன் ஒரு போட்டியில் மட்டுமே கலந்துகொள்ள வாய்ப்பு அளிக்கப்படும். போட்டியில் பங்கேற்கும் மாணவருக்குப் பயணப்படி வழங்க இயலாது. கவிதை, கட்டுரை, பேச்சு போட்டிகளுக்கு முதல் பரிசு ₹10 ஆயிரம், இரண்டாம் பரிசு ₹7 ஆயிரம், மூன்றாம் பரிசு ₹5 ஆயிரம் மற்றும் சான்றிதழும் வழங்கப்படும்.
எழுதுவதற்கான வெள்ளைத்தாள்கள், எழுதுகோல் தமிழ் வளர்ச்சித் துறையால் வழங்கப்படும். போட்டி நாளன்றே முடிவுகள் அறிவிக்கப்பட்டு பரிசுகள் வழங்கப்படும்.
போட்டிக்கான தலைப்புகள் போட்டி நடைபெறும் அரங்கில் அறிவிக்கப்படும்.
ஒவ்வொரு போட்டியிலும் முதல் பரிசு பெறும் மாணவன், சென்னையில் நடைபெறும் மாநில அளவிலான போட்டிக்கு, அரசு செலவிலேயே அனுப்பி வைக்கப்படுவார். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.
ليست هناك تعليقات:
إرسال تعليق
கல்விச்செய்தி நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.