நீட் தேர்வு எழுதும் அரசுப் பள்ளி மாணவர்களின் எண்ணிக்கை குறைவா? : அமைச்சர் அன்பில் மகேஸ் விளக்கம் - Kalviseithi Official - No:1 Education Website in Tamil Nadu

Latest

الخميس، 4 مايو 2023

நீட் தேர்வு எழுதும் அரசுப் பள்ளி மாணவர்களின் எண்ணிக்கை குறைவா? : அமைச்சர் அன்பில் மகேஸ் விளக்கம்



நீட் தேர்வு எழுதும் அரசுப் பள்ளி மாணவர்களின் எண்ணிக்கை குறையவில்லை: அமைச்சர் அன்பில் மகேஸ் விளக்கம்

நீட் தேர்வு எழுதும் அரசுப் பள்ளி மாணவர்களின் எண்ணிக்கை குறையவில்லை என்று பள்ளிக் கல்வி அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி தெரிவித்துள்ளார்.

இது குறித்து தஞ்சாவூரில் செய்தியாளர்களிடம் அவர் கூறியது: “நீட் தேர்வு தொடங்கப்பட்டது முதல் அத்தேர்வு எழுதும் அரசுப் பள்ளி மாணவர்களின் எண்ணிக்கை குறையாமல் அதிகரித்து வருகிறது. நீட் தேர்வு எழுதும் மாணவர்களின் எண்ணிக்கை குறைவதாக வரும் தகவல் உண்மையில்லை. இது தொடர்பாக, துறை அலுவலர்களிடம் கேட்டபோது, நீட் தேர்வு எழுதும் அரசுப் பள்ளி மாணவர்களின் எண்ணிக்கை குறையவில்லை என்றும், அதிகமாகத்தான் உள்ளனர் எனவும் தெரிவித்தனர்.

+2 பொதுத் தேர்வு முடிவுகளை எதிர்நோக்கியுள்ள மாணவர்கள் தன்னம்பிக்கையுடன் இருக்க வேண்டும். பொதுத்தேர்வில் வாங்கும் மதிப்பெண்கள் அதிகமாகவோ, குறைவாகவோ இருந்தாலும், உங்களுக்கான தனித் திறமையை வளர்த்துக் கொள்ள வேண்டும் என மாணவர்கள் மீது அக்கறை கொண்டுள்ள தமிழக முதல்வர் கூறி வருகிறார். தனித்திறமையை வளர்த்துக் கொள்ளும்போது, ஒரு இடத்தில் வேலை பார்க்கும் நிலையை விட மற்றவர்களுக்கு வேலை கொடுக்கும் அளவுக்குத் தன்னம்பிக்கை வளரும். +2 பொதுத்தேர்வு முடிவுகள் என்பது ஒருவகையான தேர்வுதானே தவிர, யாரும் பயப்படக் கூடாது. மாணவர்களின் திறமைக்கான நாற்காலி எப்போதும் காத்துக் கொண்டிருக்கிறது. இதற்காகத்தான் நான் முதல்வன் திட்டத்தைத் தமிழக முதல்வர் உருவாக்கியுள்ளார்.

பொதுத்தேர்வு முடிவுகள் வரும் நாளில், மாணவர்களை வழி நடத்துவதற்காக ஆசிரியர்களுக்கு பயிற்சி வழங்கப்பட்டுள்ளது. என்னென்ன விதமான உயர் கல்வி இருக்கிறது என்பதையும் ஆசிரியர்களிடம் மாணவர்கள் கேட்டுக் கொள்ளலாம். அதற்கான பயிற்சியும் ஆசிரியர்களுக்கு அளிக்கப்பட்டுள்ளது” எனத் தெரிவித்தார்.

ليست هناك تعليقات:

إرسال تعليق

கல்விச்செய்தி நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.