பள்ளி தலைமை ஆசிரியை மீது பரபரப்பு குற்றச்சாட்டு ஈரோட்டில் பேப்பர் கட்டு வாங்கி தந்தால் தான் செய்முறை தேர்வுக்கு அனுமதி - Kalviseithi Official - No:1 Education Website in Tamil Nadu

Latest

Friday, March 24, 2023

பள்ளி தலைமை ஆசிரியை மீது பரபரப்பு குற்றச்சாட்டு ஈரோட்டில் பேப்பர் கட்டு வாங்கி தந்தால் தான் செய்முறை தேர்வுக்கு அனுமதி

பள்ளி தலைமை ஆசிரியை மீது பரபரப்பு குற்றச்சாட்டு ஈரோட்டில் பேப்பர் கட்டு வாங்கி தந்தால் தான் செய்முறை தேர்வுக்கு அனுமதி

ஈரோடு ரயில்வே காலனி மேல்நிலைப்பள்ளியில் செய்முறை தேர்வு எழுத அனுமதிக்க பேப்பர் கட்டு வாங்கி தர வேண்டும் என கட்டாயப்படுத்துவதாக பள்ளியின் தலைமையாசிரியை மீது தனித்தேர்வர் ஒருவர் குற்றச்சாட்டு வைத்துள்ளார். ஈரோடு கொல்லம்பாளையத்தில் மாநகராட்சி கட்டுப்பாட்டில் ரயில்வே காலனி மேல்நிலைப்பள்ளி செயல்பட்டு வருகிறது. இந்த பள்ளியில் 10ம் வகுப்பு அறிவியல் பாட செய்முறைத்தேர்வு கடந்த 20ம் தேதி முதல் துவங்கி நடைபெற்று வருகிறது. இந்நிலையில், செய்முறை தேர்வு எழுத விண்ணப்பித்திருந்த ஆம்புலன்ஸ் டிரைவரான அந்தியூர் பகுதியை சேர்ந்த பழனி மகன் மணிகண்டன் (25) என்பவரை பள்ளி சார்பில் ஆசிரியர் ஒருவர் தொடர்பு கொண்டு செய்முறை தேர்வு எழுத வருமாறு கூறியுள்ளனர். அதன்பேரில், நேற்று ரயில்வே காலனி மேல்நிலைப்பள்ளிக்கு மணிகண்டன் வந்துள்ளார். அப்போது, அவரிடம் 4 கட்டு வெள்ளை பேப்பர் (ஏ4 பேப்பர்) வாங்கி வந்தால் தான் தேர்வு எழுத அனுமதிப்போம் என கூறியுள்ளனர். இதனால், அதிருப்தி அடைந்த மணிகண்டன், பேப்பர் எதற்கு என கேட்க, செய்முறை பயிற்சி வகுப்புகளுக்கு முறையாக வராததால்தான், பேப்பர் கட்டு வாங்கி வந்தால் தான் தேர்வு எழுத அனுமதிப்போம் என கராராக கூறியுள்ளார்.

இதையடுத்து மணிகண்டன் ரூ.1,050 மதிப்பிலான 4 கட்டு பேப்பரை வாங்கி கொண்டு பள்ளிக்கு வளாகத்தில் வந்து, பள்ளியின் தலைமையாசிரியையின் செயலை கண்டித்து, நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது, மணிகண்டன் கூறியதாவது: நான் 9ம் வகுப்பு முடித்தவுடன் குடும்ப வறுமையின் காரணமாக பள்ளியின் படிப்பை நிறுத்தி விட்டேன். தற்போது ஆம்புலன்ஸ் டிரைவராக பணியாற்றி வருகிறேன். 10ம் வகுப்பு தேர்வு எழுத மாநகராட்சி ரயில்வே காலனி மேல்நிலைப்பள்ளியில் விண்ணப்பித்திருந்தேன். இதே பள்ளியில் நடந்த 5 நாள் செய்முறை பயிற்சி வகுப்பில் 3 நாள் பயிற்சிக்கு வந்து பயிற்சி பெற்றேன். மீதமுள்ள 2 நாள் வரவில்லை. இதையடுத்து, பள்ளியில் இருந்து செய்முறை தேர்வு எழுத வருகை பதிவின் சதவீதம் குறைவாக இருப்பதாகவும், தேர்வு எழுத அனுமதிக்க முடியாது. தேர்வு எழுத அனுமதிக்க வேண்டும் என்றால் ஏ4 பேப்பர் 4 கட்டு வாங்கி பள்ளிக்கு தர வேண்டும். அப்படி தந்தால் தான் தேர்வு எழுத அனுமதிப்போம் என பள்ளியின் தலைமையாசிரியை கூறினார்.

நான் சம்பாதிப்பதால் ரூ.1,000 மதிப்பிலான பேப்பர் வாங்கி வந்துள்ளேன். வேலைக்கு போகாதவர்கள் எப்படி வாங்கி தருவார்கள். பள்ளிக்கு பேப்பர் வாங்கி வந்தால் தான் தேர்வு எழுத அனுமதிப்பதாக தலைமையாசிரியர் கூறியது தவறு. அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். இதுகுறித்து போலீசில் புகார் அளிக்க உள்ளேன். இவ்வாறு மணிகண்டன் கூறினார்.

நன்னடத்தை சான்றிதழுக்கு 2 கட்டு பேப்பர்

ரயில்வே காலனி பள்ளியில் படித்த முன்னாள் மாணவர் சிவக்குமார் நன்னடத்தை சான்றிதழ் கேட்டு பள்ளிக்கு வந்துள்ளார். அவரிடம் பள்ளியின் தலைமையாசிரியை தேன்மொழி, 2 கட்டு பேப்பர் வாங்கி வரும்படி கேட்டுள்ளனர். அதன்பேரில், அந்த முன்னாள் மாணவரும் 2 கட்டு பேப்பருடன் தலைமையாசிரியையின் அறைக்கு சென்று வழங்கினார். பேப்பர் கட்டினை வாங்கி வைத்துக்கொண்ட பள்ளி ஊழியர்கள், மதியம் 3 மணிக்கு மேல் வந்தால் நன்னடத்தை சான்றிதழ் தருவதாக கூறியதால், அவர் அங்கிருந்து புறப்பட்டு சென்றார். இது குறித்து தலைமை ஆசிரியை தேன்மொழி கூறியதாவது: நாங்கள் யாரிடமும் பேப்பர் வாங்கி வர சொல்லி கட்டாயப்படுத்தவில்லை. எங்கள் பள்ளியின் முன்னாள் மாணவர்கள் பள்ளிக்கு ஏராளமான உதவிகளை செய்து வருகின்றனர். அந்த வகையில் சான்றிதழ் வாங்க வரும் முன்னாள் மாணவர்கள் அவர்களே தாமாக முன்வந்து, பள்ளியில் படிக்கும் ஏழை, எளிய மாணவர்களுக்கு சீருடை, கல்வி உபகரணங்களை வழங்கி செல்கின்றனர்.

10ம் வகுப்பு தனித்தேர்வர் மணிகண்டனிடம் நாங்கள் யாரும் பேப்பர் வாங்கி வர சொல்லவில்லை. அவர் எங்களை சிக்க வைக்க இதுபோல கூறுகிறார். நன்னடத்தை சான்றிதழ் கேட்டு வந்த சிவக்குமார் என்ற முன்னாள் மாணவர் அவராக விருப்பப்பட்டு தான் பேப்பர் வாங்கி வந்தார். இவ்வாறு அவர் கூறினார்

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.