பிளஸ் 2 பொதுத் தேர்வில் பங்கேற்காத மாணவர்களை கண்டறிய நடவடிக்கை: பள்ளிக்கல்வி அமைச்சர் அன்பில் மகேஸ் தகவல் - Kalviseithi Official - No:1 Education Website in Tamil Nadu

Latest

الخميس، 16 مارس 2023

பிளஸ் 2 பொதுத் தேர்வில் பங்கேற்காத மாணவர்களை கண்டறிய நடவடிக்கை: பள்ளிக்கல்வி அமைச்சர் அன்பில் மகேஸ் தகவல்

பிளஸ் 2 பொதுத் தேர்வில் பங்கேற்காத மாணவர்களை கண்டறிய நடவடிக்கை: பள்ளிக்கல்வி அமைச்சர் அன்பில் மகேஸ் தகவல்

பிளஸ் 2 பொதுத் தேர்வில் பங்கேற்காத மாணவர்களைக் கண்டறிந்து, பயிற்சி அளித்து, அவர்களை மீண்டும் தேர்வெழுத வைப்பதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவதாக அமைச்சர் அன்பில் மகேஸ் தெரிவித்தார்.

தமிழகத்தில் கடந்த 13-ம் தேதி பிளஸ் 2 பொதுத் தேர்வு தொடங்கியது. எனினும், தினமும் சராசரியாக 49 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாணவர்கள் தேர்வில் பங்கேற்காத நிலை உள்ளது. இவர்களில் சுமார் 38 ஆயிரம் பேர் அரசுப் பள்ளி மாணவர்கள்.

முந்தைய ஆண்டில் பொதுத்தேர்வில் பங்கேற்காத மாணவர்கள் எண்ணிக்கை 4 சதவீதமாக இருந்தது. நடப்பாண்டு அந்த விகிதம் 6 சதவீதமாக உயர்ந்துள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இந்நிலையில், பிளஸ் 2 பொதுத்தேர்வில் மாணவர்கள் ஏராளமானோர் பங்கேற்காதது குறித்து பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி, துறை இயக்குநர்கள், மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் உள்ளிட்டோருடன் சென்னை தலைமைச்செயலகத்தில் நேற்று ஆலோசனை நடத்தினார். பின்னர் அவர் செய்தியாளர்களிடம் கூறியது: 12-ம் வகுப்பு பொதுத் தேர்வில் தமிழ், ஆங்கிலம் பாடத் தேர்வில் 5.6 சதவீத மாணவர்கள் பங்கேற்கவில்லை. குறிப்பாக, தருமபுரி, கிருஷ்ணகிரி, திண்டுக்கல், திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி மாவட்டங்களில்தான் அதிக மாணவர்கள் தேர்வு எழுத வரவில்லை.

இது தொடர்பாக அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினோம். மீதமுள்ள தேர்வுகளில் அனைவரையும் பங்கேற்க வைப்பதற்கான முயற்சிகள் முன்னெடுக்கப்பட உள்ளன. இந்தப் பணிகளை கண்காணிக்க அதிகாரிகள் நியமிக்கப்பட உள்ளனர்.

கணிசமான மாணவர்கள், பெற்றோருடன் சேர்ந்து வேலைக்குச் செல்வதால், அவர்கள் தேர்வுக்கு வராத நிலை ஏற்பட்டுள்ளது. மேலும், சில மாணவர்கள் தேர்வு பயத்தில் பங்கேற்கவில்லை. இந்த விவகாரத்தில் பெற்றோரின் ஒத்துழைப்பு மிகவும் அவசியம்.

இது தொடர்பாக வரும் 24-ம்தேதி பள்ளி மேலாண்மைக் குழுக் கூட்டத்தைக் கூட்டி, தேர்வில் பங்கேற்காதவர்களைக் கண்டறிந்து, மீண்டும் தேர்வு எழுத வைக்கத் திட்டமிடப்பட்டுள்ளது. இதற்கு அந்தந்த பள்ளி தலைமை ஆசிரியர்கள், ஆசிரியர்கள் உதவ வேண்டும். வரும் ஏப்ரல் 10-ம் தேதியும் பள்ளி மேலாண்மைக் குழுக் கூட்டம் நடைபெறும். இதில்,10-ம் வகுப்பு தேர்வுக்கான செயல்பாடுகள் முன்னெடுக்கப்படும். இடைநின்ற மாணவர்களைக் கண்டறிந்து, மீண்டும் பள்ளிகளில் சேர்த்தோம். ஆனால், மீண்டும் அவர்கள் பள்ளிக்கு வராத சூழல் உள்ளது வேதனை அளிக்கிறது. அந்த மாணவர்களுக்கு சிறப்பு பயிற்சி கொடுத்து, ஜூன் மாதம் நடக்கும் துணைத் தேர்வில் பங்கேற்கச் செய்வோம்.

பொதுத்தேர்வு தொடர்பாக பெற்றோருக்குத் தான் அதிக ஆலோசனை வழங்க வேண்டிய உள்ளது. பிளஸ் 1 பொதுத்தேர்வை ரத்து செய்யும் திட்டம் எதுமில்லை. இவ்வாறு அமைச்சர் தெரிவித்தார்.

இதற்கிடையே, பப்ளிக் போலீஸ் என்ற தன்னார்வ அமைப்பு சார்பில், மகளிர் உரிமைகள் குறித்த கருத்தரங்கம் சென்னை ராணி மேரி கல்லூரியில் நேற்று நடைபெற்றது.

இதில் பங்கேற்ற அமைச்சர் பின்னர் செய்தியாளர்களிடம் கூறியது: 2021-22-ம் கல்வியாண்டில் இடைநின்ற 1.90 லட்சம் மாணவர்களைக் கண்டறிந்து, மீண்டும் பள்ளிகளில் சேர்த்தோம். 12-ம்வகுப்பு மாணவர்கள் அனைவருக்கும் ஹால்டிக்கெட் தந்துவிட அறிவுறுத்தினோம். அப்படியாவது அவர்கள் படிக்க வருவார்கள் என்று நம்பினோம். ஆனால், அதுநிறைவேறவில்லை. வரும் காலங்களில், மாணவர்கள் தேர்வுக்கு வராத நிலை சரிசெய்யப்படும். இவ்வாறு அமைச்சர் கூறினார்.

ليست هناك تعليقات:

إرسال تعليق

கல்விச்செய்தி நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.