ரூ.1000 உதவித்தொகை வழங்கும் ‘புதுமைப்பெண்’ திட்டம்: டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் நாளை தொடக்கம் - Kalviseithi Official - No:1 Education Website in Tamil Nadu

Latest

السبت، 3 سبتمبر 2022

ரூ.1000 உதவித்தொகை வழங்கும் ‘புதுமைப்பெண்’ திட்டம்: டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் நாளை தொடக்கம்

முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்த மாணவிகளுக்கு மாதம் ரூ.1000 உதவித்தொகை வழங்கும் ‘புதுமைப்பெண்’ திட்டம்: டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் நாளை தொடங்கி வைக்கிறார்

தமிழகத்தில் உள்ள அரசு பள்ளிகளில் படித்து உயர் கல்வி படிக்கும் மாணவிகளுக்கு மாதம் ரூ.1000 உதவித்தொகை வழங்கும் ‘புதுமைப்பெண்’ திட்டத்தை முதல்வர் மு.ஸ்டாலின் அறிவித்தார். இந்த திட்டத்தை டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் நாளை சென்னையில் தொடங்கி வைக்கிறார். தமிழ்நாட்டில் ஏற்கனவே இருந்த மூவலூர் இராமாமிர்தம் அம்மையார் நினைவு திருமண நிதியுதவி திட்டம் மூவலூர் இராமாமிர்தம் அம்மையார் உயர் கல்வி உறுதி திட்டம் என மாற்றி அமைக்கப்பட்டது.

இது தொடர்பான அறிவிப்பை, தமிழக அரசின் 2022-2023ம் ஆண்டுக்கான பட்ஜெட்டில் முதல்வர் மு.க.ஸ்டாலின் கடந்த பட்ஜெட் கூட்டத்தொடரில் அறிவித்தார். அதன்படி, அரசு பள்ளிகளில் 6 முதல் 12 வரை பயின்ற மாணவிகளுக்கு, அவர்கள் உயர்கல்வி அல்லது பட்டயப்படிப்பு, தொழிற்படிப்பு படித்து முடிக்கும் வரை மாதம் ரூ.1000 நேரடியாக வங்கி கணக்கில் செலுத்தப்படும் என தமிழக அரசு அறிவித்தது. இந்த திட்டத்திற்காக தமிழக அரசு ரூ.698 கோடி ஒதுக்கி உள்ளது. இந்த திட்டத்திற்கு ‘புதுமைப்பெண் திட்டம்’ என்ற பெயர் சூட்டி உள்ள தமிழக அரசு, செப்டம்பர் மாதம் 5ம் தேதி (நாளை) முதல் பயன்பாட்டிற்கு வரும் என்றும் முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார். மாதம் ரூ.1000 கலவி உதவித்தொகை பெற இதுவரை சுமார் 4 லட்சம் மாணவிகள் தமிழகம் முழுவதும் இருந்து விண்ணப்பித்துள்ளனர்.

அதன்படி சென்னை, ராயபுரத்தில் உள்ள பாரதி மகளிர் கல்லூரியில் ‘புதுமைப்பெண்’ திட்டம் செப்டம்பர் 5ம் தேதி (நாளை ) தொடங்கி வைக்கப்பட உள்ளது. இந்த திட்டத்தை முதல்வர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில், டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் நாளை காலை 10.30 மணிக்கு தொடங்கி வைக்க உள்ளார்.

மேலும், இந்த விழாவில் உயர் கல்வி துறை அமைச்சர் பொன்முடி, சமூகநலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சர் கீதாஜீவன், இந்து அறநிலையத்துறை அமைச்சர் பி.கே.சேகர்பாபு, பள்ளி கல்வி துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி, தலைமை செயலாளர் இறையன்பு மற்றும் அமைச்சர்கள், எம்பி, எம்எல்ஏக்கள், உயர் அதிகாரிகள் பங்கேற்க உள்ளனர். முதல்கட்டமாக 1 லட்சம் மாணவிகளுக்கு மாதம் தோறும் ரூ.1000 வழங்கப்பட உள்ளது.

சில மாதங்களுக்கு முன் டெல்லி சென்ற முதல்வர் மு.க.ஸ்டாலின், டெல்லியில் உள்ள அரசு பள்ளிகளின் வளர்ச்சியை கண்டு பாராட்டி இருந்தார். இதனால் தமிழக அரசின் கல்வி திட்டத்தை தொடங்கி வைக்க அரவிந்த் கெஜ்ரிவால் அழைக்கப்பட்டுள்ளார். 15 மாதிரி பள்ளிகள் துவக்க விழாவிலும், டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் பங்கேற்கிறார்.

தமிழகத்திற்கு டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் வருவது முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது. காரணம், 2024ம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தலில் பாஜவுக்கு மாற்றாக ஒரு பலமான கூட்டணியை உருவாக்க வேண்டும் என்று தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட பல்வேறு மாநில முதல்வர்கள் மற்றும் அரசியல் கட்சியினர் குரல் கொடுத்து வருகிறார்கள்.

ஏற்கனவே டிஆர்எஸ், ஆம்ஆத்மி ஆகியோர் பாஜ அரசுக்கு எதிராக தொடர்ந்து குரல் எழுப்பி வருகிறார்கள். அண்மையில் தெலங்கானா முதல்வர் சந்திரசேகர் ராவ், பீகார் முதல்வர் நிதிஷ்குமாரை சந்தித்திருந்தார். இந்த நிலையில், ஆம்ஆத்மி கட்சி தலைவர் தமிழகம் வருவதும், முதல்வர் மு.க.ஸ்டாலினை சந்திக்க இருப்பதும் பல்வேறு அரசியல் யூகங்களை ஏற்படுத்தியுள்ளது.

ليست هناك تعليقات:

إرسال تعليق

கல்விச்செய்தி நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.