கிராமப்புற மாணவர்களை பாதிக்கும் தேசிய கல்வி கொள்கையை ரத்து செய்ய வேண்டும்; SFI மாநாட்டில் தீர்மானம் - Kalviseithi Official - No:1 Education Website in Tamil Nadu

Latest

السبت، 27 أغسطس 2022

கிராமப்புற மாணவர்களை பாதிக்கும் தேசிய கல்வி கொள்கையை ரத்து செய்ய வேண்டும்; SFI மாநாட்டில் தீர்மானம்

திருவாரூர்: தேசிய கல்வி கொள்கையை ரத்து செய்ய வேண்டும் என்று இந்திய மாணவர் சங்கத்தின் மாநில மாநாட்டில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இந்திய மாணவர் சங்கத்தின் 26வது மாநில மாநாடு திருவாரூரில் நேற்று முன்தினம் துவங்கியது. முதல் நாள் நடந்த பேரணி மற்றும் பொதுக்கூட்டத்தில் ஆயிரக்கணக்கான மாணவர்கள் கலந்து கொண்டனர். 2வது நாள் நிகழ்ச்சியாக நேற்று மாநாடு துவக்க நிகழ்ச்சி மற்றும் பிரதிநிதிகள் மாநாடு நடைபெற்றது. இதில் மாநில தலைவர் கண்ணன், செயலாளர் மாரியப்பன், வரவேற்பு குழு தலைவர் நாகராஜன் உட்பட பலர் கலந்து கொண்டு பேசினர்.

மாலை தேசிய கல்வி கொள்கையின் அபாயம் மற்றும் காவிமயமாகும் கல்வி போன்ற தலைப்புகளில் சிறப்பு கருத்தரங்கம் நடைபெற்றது. இதில் கல்வியாளர்கள் பிரின்ஸ் கஜேந்திராபாபு, பேராசிரியர் ஜவகர்நேசன் உட்பட பலர் கலந்து கொண்டனர். மாநாட்டில் தேசிய கல்வி கொள்கை, கிராமப்புற மாணவர்களை முற்றிலும் பாதிக்கும் என்பதால் அதை ரத்து செய்ய வேண்டும். தேசிய கல்வி கொள்கையின் ஒரு பகுதியாகத்தான் பல்கலைக்கழகங்களில் கியூட் எனப்படும் நுழைவுத்தேர்வு நடத்தப்படுகிறது. கடந்தாண்டு வரை 9 பல்கலையில் நடத்தப்பட்ட தேர்வு நடப்பாண்டில் 49 பல்கலைக்கழகங்களுக்கு விரிவுபடுத்தப்பட்டுள்ளது.

மேலும் நாடுமுழுவதும் உள்ள அனைத்து பல்கலைக்கழகங்களில் கியூட் தேர்வு நடத்த வேண்டும் என ஒன்றிய அரசு உத்தரவிட்டுள்ளது. இதை ரத்து செய்ய வேண்டும் என்பது உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது. மாநாட்டின் நிறைவு நாளான இன்று காலை 10 மணிக்கு ஆசிரியர்களுக்கு வாழ்த்து அரங்கம் நடந்தது. மாநில துணை செயலாளர் பிரகாஷ் தலைமை வகித்தார். அகில இந்திய தலைவர் வி.பி.சானு நிறைவுரையாற்றுகிறார். தொடர் விவாதம், தீர்மானங்கள், புதிய மாநில குழு தேர்வு, அகில இந்திய மாநாட்டு பிரதிநிதிகள் தேர்வு நடைபெற்றது. மதியம் மாநாடு நிறைவு பெற்றது.

ليست هناك تعليقات:

إرسال تعليق

கல்விச்செய்தி நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.