ஆசிரியர்களை அவமதிக்கும் தமிழ் திரைப்படங்கள்: காசுக்காக சமூக பொறுப்பை காலில் போட்டு மிதிக்கும் நடிகர்கள் - Kalviseithi Official - No:1 Education Website in Tamil Nadu

Latest

السبت، 14 مايو 2022

ஆசிரியர்களை அவமதிக்கும் தமிழ் திரைப்படங்கள்: காசுக்காக சமூக பொறுப்பை காலில் போட்டு மிதிக்கும் நடிகர்கள்

மாதா, பிதா, குரு, தெய்வம் என பெற்றோர்களுக்கு அடுத்து குருவைத்தான் அந்தக் காலம் தொட்டே குறிப்பிட்டு வருகிறார்கள். தெய்வம் கூட குருவுக்கு அடுத்துதான் இடம் பெற்றுள்ளது. குழந்தைகளை அவர்களது பெற்றோர்கள் நல்முறையில் வளர்ப்பது ஒரு புறம் இருந்தாலும், அவர்களுக்கு கல்வி கற்று கொடுத்து அவர்களை திறமைசாலிகளாக வளர்ப்பவர்கள் குருவான ஆசிரியர்கள்தான். அப்படிப்பட்ட ஆசிரியர்களை பல திரைப்படங்களில் அவமதிக்கும் விதத்தில் காலம் காலமாக பல படங்களில் காட்டி இருக்கிறார்கள், இப்போதும் காட்டி வருகிறார்கள். சமீப காலமாக பல பள்ளிகளில் ஆசிரியர்களை அவமதிக்கும் விதத்தில் மாணவர்கள் நடந்து கொள்ளும் வீடியோக்கள் சமூக வலைத்தளங்களில் பரவி வருகின்றன. ஆசிரியர்களை திட்டுவது, ஆசிரியர் பாடம் எடுத்துக் கொண்டிருக்கும் போதே வகுப்பறைகளுக்குள் மாணவர்கள் நடனமாடுவது போன்ற வீடியோக்கள் வெளிவந்து அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளன. இது ஆசிரியர்கள் மத்தியிலும், கல்வியாளர்கள் மத்தியிலும் பேரதிர்ச்சியை உருவாக்கியுள்ளது. 17 வயதைக் கூடத் தாண்டாத மாணவர்கள் இப்படியான ஒழுக்கமற்ற செயல்களில் ஈடுபடுவதற்கு காரணம் திரைப்படங்கள்தான் என பல கல்வியாளர்கள் குற்றம் சாட்டுகிறார்கள்.
பள்ளி மாணவ, மாணவிகளுக்கு இடையே காதல், கெட்ட பழக்க வழக்கங்களுடன் இருக்கும் மாணவர்கள், பாடல்கள், காட்சிகள் ஆகியவை பல திரைப்படங்களில் இடம் பெற்று வருகின்றன. இன்றைக்கு வீட்டுக்கு வீடு டிவி, வாஷிங் மெஷின் உள்ளிட்ட உபயோகப் பொருட்கள் இருக்கிறதோ இல்லையோ அனைவரது வீட்டிலும் ஸ்மார்ட்போன்கள் உள்ளது. இதனால், பலதரப்பட்ட வீடியோக்களை மாணவ, மாணவியர்கள் எளிதில் பார்க்கும் வசதி வந்துவிட்டது.

படித்த நேரத்தை விட மாணவ, மாணவிகள் பலரும் வீட்டிற்குத் தெரிந்தும் தெரியாமல் பல வீடியோக்களை எடுத்து சமூக வலைத்தளங்களல் பதிவிட்டதை கடந்த சில வருடங்களாக பார்த்துக் கொண்டிருக்கிறோம். அவை பெரும்பாலும் சினிமா சம்பந்தப்பட்ட காட்சிகளாகத்தான் உள்ளன.

ஆசையைத் தூண்டுகிறது

டிக் டாக் தடை செய்யப்படுவதற்கு முன்பாக வகுப்பறைகளில் மாணவ, மாணவியர் திரைப்படப் பாடல்களுக்கு நடனமாடி எடுத்த வீடியோக்கள், நகைச்சுவைக் காட்சிகளில் நடித்து எடுத்த வீடியோக்கள் இடம் பெற்றிருந்தன. சினிமா பிரபலங்களே லைக்குகள், பார்வைகளுக்கு பேராசைப்படும் போது தங்களது வீடியோக்கள் அதிகமாக லைக் வாங்குவது அந்த மாணவர்களுக்கு இன்னும் ஆசையைத் தூண்டி விடுகிறது.
கடந்த வருடம் விஜய் நடித்து 'மாஸ்டர்' படம் வெளிவந்தது. அதில் முற்பாதி பெரும்பாலும் விஜய் குடித்துக் கொண்டே இருப்பதுமான காட்சிகள் இடம் பெற்றன. இந்த படத்தில் இடம் பெற்ற 'வாத்தி கம்மிங்….' என்ற பாடல் பெரிய வரவேற்பைப் பெற்றது. பொதுவாக ஆசிரியர்களை நம் ஊர் பக்கம் 'வாத்தியார்' என்றும் அழைப்பதுண்டு. அதைச் சுருக்கி கிண்டலாக 'வாத்தி' என்றும் குறிப்பிடுவார்கள். அப்படி கிண்டலான வார்த்தையை வைத்து ஒரு பாடலை உருவாக்கி அதை எல்லோரிடமும் கொண்டு போய் சேர்த்த பெருமை விஜய், அனிருத் ஆகியோரையே சாரும். எந்தவிதமான சமூக அக்கறையும் இல்லாமல் ஒரு பெரிய நடிகரும், இசையமைப்பாளரும் இப்படி செய்தது சரியா என்று பலரும் கேள்வி எழுப்பினார்கள்.

இப்போது அந்த 'வாத்தி' என்ற வார்த்தையையே தனது அடுத்த படத்திற்கு டைட்டிலாக வைத்துள்ளார் தனுஷ். தமிழ், தெலுங்கில் தயாராகும் இப்படத்திற்கு தெலுங்கில் என்ன டைட்டில் தெரியுமா 'சார்'. தெலுங்கில் மட்டும் மரியாதையான ஒரு வார்தை, ஆனால், தமிழிலோ கிண்டலாக 'வாத்தி'.

நேற்று சிவகார்த்திகேயன் நடித்து வெளிவந்த 'டான்' படத்தின் கதைக்கரு என்ன தெரியுமா ?. தன்னைப் போன்ற கடைசி பெஞ்ச் மாணவர்களை நன்றாகப் படிக்க வைக்க முயற்சிக்கும் ஒரு கல்லூரிப் பேராசிரியரை படத்தின் நாயகன் அடிக்கடி அவமானப்படுத்துவதுதான் படத்தின் கதை. அதில் ஒரு காட்சியில் 'ஆசிரியர்களை டார்ச்சர் செய்வது எப்படி' என புத்தகத்தை எழுதுகிறாராம் நாயகன் சிவார்த்திகேயன். படத்தில் 10வது படிக்கும் நாயகனும், நாயகியும் காதலிக்கும் காட்சிகள் வேறு உண்டு. இளம் தலைமுறையை கெடுப்பதா ?

தமிழ்த் திரைப்படங்களில் கடந்த சில வருடங்களில் ஆசிரியர்கள் மீதான இப்படிப்பட்ட காட்சிகளுக்கு கல்வியார்களும், ஆசிரியர்களும் கடுமையாக விமர்சித்து வருகிறார்கள். விஜய், சிவகார்த்திகேயன், தனுஷ் போன்ற நடிகர்களுக்கு இளம் ரசிகர்கள் அதிகமாகவே இருக்கிறார்கள். நிஜத்தில் தங்களை சமூக அக்கறை உள்ள நடிகர்களாக காட்டிக் கொள்ளும் இவர்கள் தங்களது படங்களை வியாபார நோக்கத்திற்காக மட்டும்தான் எடுக்கிறார்கள். அதில் இளம் தலைமுறையை கெடுக்க வைக்கும் இம்மாதிரியான காட்சிகளை இனி வைக்க மாட்டோம் என உறுதி அளிப்பார்களா ?.

ليست هناك تعليقات:

إرسال تعليق

கல்விச்செய்தி நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.