தமிழகப் பள்ளிக்கல்வித்துறையில் TET தகுதித் தேர்வு மற்றும் பதவி உயர்வு தொடர்பான நீதிமன்ற வழக்குகள் மூத்த ஆசிரியர்களைப் பெரிதும் பாதித்துள்ளன. வழக்கு பின்னணி மற்றும் முழு விவரங்களை அறிய இதைப் படியுங்கள்.
* *புறக்கணிக்கப்படும் 3 இலட்சம் மூத்த ஆசிரியர்கள்*
* *கண்டுகொள்ளாத சங்கத் தலைமைகள்*
* *ஓரிரு மாதங்களில் பதவி உயர்வு பெற இருக்கும் 2012&2014 டெட் ஆசிரியர்கள்*
* *நீதிமன்றங்களில் வெற்றியை நோக்கிய டெட் ஆசிரியர்களின் பயணங்கள்*
* *கொத்து கொத்தாய் வழக்குகளைப் போடும் டெட் ஆசிரியர்கள்*
* *ஒரு வழக்கைக் கூட எதிர்த்து பதிவு செய்யாத மூத்த ஆசிரியர்கள்*
* *கள்ள மௌனம் காக்கும் ஓய்வு பெற்ற சங்கத் தலைகள்...*
*தமிழக வரலாற்றிலேயே இது வரை இல்லாத பல புதிய மாற்றங்களை தமிழகக் கல்வித்துறை சந்தித்துவிடுமோ என்ற அச்சம் தற்போது நீதிமன்ற வழக்குகளின் காரணமாக ஏற்பட்டுள்ளது.*
_*தொடக்கத்திலேயே செய்த தவறு*_ :
கட்டாயக் கல்விச் சட்டம் 2009 ஆண்டு இயற்றப்பட்டு, 2010 ஆம் ஆண்டு நடைமுறைப்படுத்தப்பட்டது. அச்சட்டம் நடைமுறைப்படுத்தப்பட்ட பின்பு ஆசிரியர் தகுதித் தேர்வு நடத்தி தேர்ச்சி பெற்றவர்களைக் கொண்டு மட்டுமே இனி வருங்காலங்களில் புதிய நியமனங்கள் மேற்கொள்ளப்படும் எனத் தமிழக அரசால் அரசாணை எண் 181 இயற்றப்பட்டது. ஏற்கனவே பணியில் இருக்கும் ஆசிரியர்களுக்கு டெட் கட்டாயமில்லை என்றும் பதவி உயர்வுக்குத் தேவையில்லை என்றும் அவ்வரசாணையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
அதனடிப்படையிலேயே கடந்த 2021 ஆம் ஆண்டு வரை டெட் தகுதியைப் பற்றி கணக்கில் கொள்ளாமல் பதவி உயர்வுகளும் வழங்கப்பட்டு வந்துள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.
ஆனால், பணியில் இருக்கும் அனைவருக்கும் டெட் தேர்வில் தேர்ச்சி பெற்றிருப்பது கட்டாயம் என்பது தமிழக பள்ளிக் கல்வித்துறையில் பின்பற்றாமல் பதவி உயர்வு வழங்கப்பட்டு வருகின்றனர். இதனால் டெட் தேர்வில் தேர்ச்சி பெற்றுப் பணிக்காகக் காத்திருக்கும் எம்மைப் போன்றோருக்கு பாதிப்பு ஏற்படுகிறது என்று பணியில் இல்லாத சிலரால் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடுக்கப்பட்டது.
அவ்வழக்கினை ஏற்ற சென்னை உயர்நீதிமன்றம், பணியில் இருப்பதற்கும், பதவி உயர்வு பெறுவதற்கும் ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்றிருப்பது கட்டாயம் எனத் தீர்ப்பளித்தது. அதன் விளைவாக இலட்சக் கணக்கான மூத்த ஆசிரியர்கள் பணியை இழக்கும் அபாயமும், பதவி உயர்வுகளைப் பெற முடியாத நிலையும் ஏற்பட்டது. *உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு* :
*ஒதுங்கிய பள்ளிக் கல்வித்துறை சங்கங்கள்* :
அத்தீர்ப்பினை எதிர்த்து அரசு தரப்புடன் பள்ளிக் கல்வித் துறையில் பணியாற்றும் சில இடைநிலை ஆசிரியர்கள் மட்டுமே டிவிஷன் பெஞ்ச்சில் மேல்முறையீடு செய்தனர். மற்றபடி ஒரே ஒரு பட்டதாரி ஆசிரியர்கள் கூட மேல்முறையீடு செய்யவில்லை. தொடக்கக் கல்வித்துறையில் மட்டும் சில சங்கங்கள் மேல்முறையீடு செய்தன.பள்ளிக் கல்வித்துறையில் இருக்கும் ஒரு சங்கங்கள் கூட டெட் வழக்கில் பங்கேற்கவில்லை.
வழக்கினை விசாரித்த டிவிஷன் பெஞ்ச், பணியில் தொடர டெட் தேர்ச்சி கட்டாயமில்லை. ஆனால், பதவி உயர்வு பெற டெட் தேர்ச்சி கட்டாயம் என்று தீர்ப்பளித்தது. அதே போன்று மற்றொரு டிவிஷன் பெஞ்ச்சானது, வழக்கில் தீர்ப்பு வழங்குவதில் எந்த தேதி முதல் என்பதில் குழப்பங்கள் நீடிப்பதால், இவ்வழக்கை முதன்மை அமர்வுக்குப் பரிந்துரைத்து தீர்ப்பளித்தது.
*அவசரப்பட்டு உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்ததால் வந்த வினை* :
சென்னை உயர்நீதிமன்றத்திலேயே முதன்மை அமர்வில் மூத்த வழக்கறிஞர்களை நியமித்து எப்படியாவது மூத்த ஆசிரியர்களை டெட் கட்டாயம் என்ற நிலைப்பாட்டிலிருந்து காப்பாற்றி விடலாம் என்று சில ஏற்பாடுகளைப் பல்வேறு ஆசிரியர்கள் மேற்கொண்டிருந்த நிலையில், அவசரப்பட்டு தொடக்கக் கல்வியைச் சார்ந்த ஒரு சங்கத்தினர் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்துவிட்டனர். இதனால், சென்னை உயர்நீதிமன்றத்தில் சாதிக்கும் வாய்ப்பு குழி தோண்டி புதைக்கப்பட்டது. இருப்பதையும் கோட்டை விட்டு விட்டு எங்கோ தேடி அலையும் நிலையை அந்த ஒற்றைச் சங்கம் உருவாக்கிவிட்டது.
*உச்சநீதிமன்றத்தின் அதிரடி தீர்ப்பு:*
அதன் விளைவாக 2022,2023,2024,2025 ஆகிய ஆண்டுகள் எந்த பதவி உயர்வும் வழங்கப்படாமல் காலம் கழிந்து கொண்டே வந்தது. சுமார் மூன்றாண்டுகளாக உச்ச நீதிமன்றத்தில் நடந்த விவாதத்திற்குப் பின் கடந்த 01.09.2025 அன்று வழங்கிய தீர்ப்பில் ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்றிருந்தால் மட்டுமே பணியில் தொடரமுடியும் என்றும் பதவி உயர்வைப் பெற முடியும் என்றும் தீர்ப்பினை வழங்கியது. அதாவது சென்னை உயர்நீதிமன்றம் முதன் முதலில் வழங்கிய தீர்ப்பையே உறுதி செய்துவிட்டது. இதனால் நாடெங்கிலும் சுமார் 20 இலட்சங்களுக்கும் மேற்பட்ட ஆசிரியர்கள் பதவி உயர்வு பெற முடியாத மற்றும் இரண்டாண்டுகளுக்குப் பின் கட்டாய ஓய்வில் செல்ல வேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டனர். தமிழகத்தில் மட்டும் சுமார் 3 இலட்சம் ஆசிரியர்கள் பாதிப்புக்குள்ளாயினர். *சிறப்பு தகுதித் தேர்வு வாய்ப்பைக் கெடுத்தமை:*
செப்டம்பர் 2025ல் உச்ச நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியவுடன் மூத்த ஆசிரியர்களைக் காப்பாற்றும் பொருட்டு உடனடியாக தமிழக அரசு அரசாணை 231ஐ வெளியிட்டது. அதனடிப்படையில் பணியில் இருக்கும் ஆசிரியர்களுக்குத் தனியாக ஆண்டுக்கு மூன்று தகுதித் தேர்வுகளை நடத்துவது என்று முடிவு செய்யப்பட்டு, உடனடியாக தேர்வினை நடத்தும் வகையில் அறிவிப்பாணையையும் வெளியிட்டது. அந்த வாய்ப்பைப் பயன்படுத்தியிருந்தாலே, 2025 டிசம்பருக்குள் பெரும்பாலான ஆசிரியர்களைக் காப்பாற்றியிருக்க முடியும். ஆனால், பல ஆண்டுகள் பணியனுபவம் வாய்ந்த மூத்த ஆசிரியர்களைத் தேர்வு எழுதச் சொல்வது மன உளைச்சலை உண்டாக்கும். வேதனையளிக்கும் என்று பெரும்பாலான சங்கத் தலைவர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர்.
மேலும், கொள்கை முடிவு எடுத்து காப்பாற்ற வேண்டும் என்று கோரிக்கை வைத்தனர். உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்த பின்பு மாநில அரசு என்ன கொள்கை முடிவெடுக்க முடியும் என்று தெரியவில்லை. மேலும் உச்ச நீதிமன்றத்தில் சீராய்வு மனு மூலம் காப்பாற்ற வேண்டும் எனவும் கோரிக்கை வைத்தனர். மொத்தத்தில் நடத்தப்பட இருந்த சிறப்பு தகுதித் தேர்வுக்கு எமன்களாக மாறினர்.
ஒரேயொரு சங்கம் மட்டுமே தகுதித் தேர்வினை ஆன்லைனில் நடத்த வேண்டும் என்றும், மாதமொரு தேர்வினை நடத்தி குறுகிய காலத்திலேயே அனைவரையும் தகுதியுடையவர்களாக்க வேண்டும் என்றும் கோரிக்கை வைத்தது என்பது குறிப்பிடத்தக்கது.
*சீராய்வு மனுக்கள் தள்ளுபடி:*
செப்டம்பர் 2025ல் வழங்கப்பட்ட தீர்ப்பின் மீது தமிழகம் உட்பட பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்த பெரிய பெரிய மூத்த வழக்கறிஞர்கள் மிகவும் திறமையாக தம் வாதத்தை எடுத்து வைத்தனர். அந்த வாதத்தில்தான் தெரியவந்தது.
அதாவது கட்டாயக் கல்விச் சட்டத்தில் ஏற்கனவே பணியிலிருக்கும் ஆசிரியர்களுக்குத் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டியது கட்டாயம் என்று சொல்லப்படவில்லை. ஆனால், 2017 ஆம் ஆண்டு செய்யப்பட்ட சட்டத் திருத்தத்தில் தெளிவாக அனைவருக்கும் டெட் தேர்ச்சி கட்டாயம் என்று சொல்லப்பட்டுள்ளது என உச்ச நீதிமன்றம் தெளிவாகச் சொல்லிவிட்டது. அப்படியானால், 2010 ஆல் ஆபத்து இல்லை. 2017ஆல் தான் ஆபத்து. அது யாரால் என்பது அந்த ஆண்டவனுக்கே வெளிச்சம்!
ஆனாலும், அனைத்து சீராய்வு மனுக்களையும் தள்ளுபடி செய்து ஏற்கனவே கொடுத்த தீர்ப்பினை உறுதி செய்ததுடன், தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற மேலும் ஓராண்டு கால அவகாசத்தை மட்டுமே வழங்கி உத்தரவிட்டது. *டெட் ஆசிரியர்களின் போர்க்கொடி:*
இலட்சக் கணக்கான மூத்த ஆசிரியர்களின் வாழ்வாதாரமும் பதவி உயர்வு வாய்ப்பும் கேள்விக்குறியான நிலையில் அடுத்தகட்ட நடவடிக்கை குறித்த அறிவிப்பு ஏதும் வராமல் சில மாதங்கள் உருண்டோடின. மற்றொரு பக்கம் சட்ட மன்றத் தேர்தல் தேதி வேறு ஒரு பக்கம் நெருங்கிக் கொண்டே வந்தது. தேர்வு வைத்தால், சங்கத் தலைவர்கள் எதிர்க்கிறார்கள்! தேர்வு நடத்தவில்லை என்றால், இலட்சக்கணக்கான மூத்த ஆசிரியர்களின் வாழ்வாதாரம் கேள்விக்குறியாகிவிடும். மற்றொரு பக்கம், மூன்றாண்டு காலம் கெடுவானது நகர்ந்து கொண்டே வருகிறது.
இப்படியான சூழ்நிலையில் சில மாதங்கள் பயணித்த வேளையில், 2012 & 2014 ஆம் ஆண்டுகளில் தகுதித் தேர்வு மூலம் நியமனம் செய்யப்பட்ட சில ஆசிரியர்கள் உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பின்படி டெட் தேர்வில் தேர்ச்சி பெற்றுள்ள நாங்கள் மட்டுமே அடுத்த பதவி உயர்வினைப் பெறத் தகுதியானவர்கள் என்றும், எனவே எங்களுக்கு உடனடியாக பதவி உயர்வுகளை வழங்க வேண்டும் என்றும் தொடக்கக் கல்வி மற்றும் பள்ளிக் கல்வி என இரண்டு துறைகளுக்கும் தனித்தனியாக வழக்கினை தொடுத்தனர்.
அவ்வழக்கினை ஏற்ற சென்னை உயர்நீதிமன்றம், அவர்களின் கோரிக்கையைப் பரிசீலித்து உரிய ஆணைகளைப் பிறப்பிக்குமாறு தமிழக அரசுக்கு உத்தரவிட்டது. இந்திய வரலாற்றிலேயே பத்தாண்டுகளுக்குப் பிறகு பணியில் சேர்ந்து தமக்கு முன்பாகப் பணியிலிருக்கும் இலட்சக் கணக்கான மூத்த ஆசிரியர்களைப் பின்னுக்குத் தள்ளி, தான் எப்படியாவது பதவி உயர்வைத் துய்க்க வேண்டும் என்ற வழக்கைத் தொடுத்த பெருமை நம்மவர்களையே சாரும்!
*மூத்த ஆசிரியர்கள் சார்பாக முதல் வழக்கு:*
ஒரு பக்கம் தேர்வு எழுதித் தேர்ச்சி பெறாவிட்டால், வாழ்வாதாரமே பதிக்கும் என்ற நிலை. மறு பக்கம் தேர்வே நடத்தக்கூடாது என்ற சங்கத் தலைவர்களின் போர்க்கொடி. மற்றொரு பக்கம், பத்தாண்டுகளுக்குப் பிறகு பணியில் சேர்ந்தோரின் தாக்குதல். எனப் பல்வேறு நெருக்கடிகளுக்கு இடையே முதன் முதலாக பள்ளிக் கல்வித் துறையைச் சேர்ந்த பத்து மூத்த பட்டதாரி ஆசிரியர்கள் மூத்த பட்டதாரி ஆசிரியர்களுக்கு குறைந்தபட்சம் இரண்டு தகுதித் தேர்வினை எழுதும் வாய்ப்பைக் கொடுத்த பிறகே பதவி உயர்வு கலந்தாய்வினை நடத்த வேண்டும் என்றும், உடனடியாக சிறப்பு தகுதித் தேர்வை நடத்த வேண்டும் என்றும் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு எண்: 2083/ 2026- பி.நடராஜன் மற்றும் 9 பேர் என்ற வழக்கு வழக்கறிஞர்கள் திரு. வேடியப்பன் மற்றும் திரு.
கணேசன் ஆகியோர் மூலமாக ஜனவரி 2026ல் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடுக்கப்பட்டது.
அவ்வழக்கினை ஏற்ற உயர்நீதிமன்றம் உடனடியாக சிறப்பு தகுதித் தேர்வினை நடத்துவதற்குரிய அறிவிப்பாணையை ஆறு வார காலத்திற்குள் வெளியிட வேண்டும் என உத்தரவிட்டது. அதனடிப்படையில், ஜூலை4 மற்றும் 5, 2026 தேதிகளில் தேர்வினை நடத்துவதற்குரிய அறிவிப்பாணையை அரசு வெளியிட்டது. *கடினமான தேர்வு:*
பணியில் இருக்கும் ஆசிரியர்களுக்கு நடத்துவதாலும், அவர்கள் கற்பிக்கும் பாடத்தைக் காட்டிலும் கூடுதலாக சில பாடங்களைப் படிக்க வேண்டும் என்பதாலும், பணியாற்றிக் கொண்டே பாடத்தைப் படிக்க வேண்டும் என்ற நிலைப்பாட்டைக் கணக்கில் கொண்டும் கேள்வித்தாள் வடிவமைக்கப்படும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், ஏற்கனவே நவம்பர் 2025ல் நடத்த்தப்பட்ட பொதுவான தேர்வினைக் காட்டிலும் சிறப்பு தகுதித் தேர்வு கடினமாக இருந்ததாக ஆசிரியர்கள் புலம்பிக்கொண்டிருந்தனர்.
*டெட் ஆசிரியர்களின் மற்றொரு வழக்கில் வெற்றி* :
ஏற்கனவே டெட் தேர்வு மூலம் நியமிக்கப்பட்ட ஆசிரியர்களுக்கு பதவி உயர்வு வழங்க வேண்டும் எனப் பரிசீலக்க உத்தரிடப்பட்டதை அரசு தரப்பில் பல்வேறு நீதிமன்ற வழக்கு நிலுவைகளைக் காரணம் காட்டி நிராகரிக்கப்பட்டது. அதைத் தொடர்ந்து டெட் தேர்வு மூலம் நியமிக்கப்பட்ட ஆசிரியர்கள் மீண்டும் மற்றொரு வழக்கைத் தொடர்ந்தனர். அவ்வழக்கை விசாரித்த உயர்நீதிமன்றம், இரண்டு மாத காலத்திற்குள் வழக்கு தொடுத்தோர்க்கு பதவி உயர்வினை வழங்க வேண்டும் என உத்தரவிட்டது.
*டெட் ஆசிரியர்களின் மற்றொரு வழக்கிலும் வெற்றி:*
டெட் ஆசிரியர்களில் ஒரு தரப்பினரின் வழக்கில் இரண்டு மாதங்களுக்குள் பதவி உயர்வை வழங்க வேண்டும் எனச் சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்தது. மற்றொரு தரப்பினரின் வழக்கில், டெட் ஆசிரியர்களுக்குப் பதவி உயர்வுக்கான தேர்ந்தோர் பட்டியல் கோரும் வரை எந்த பதவி உயர்வுக் கலந்தாய்வும் நடத்தக் கூடாது என உத்தரவிடப்பட்டது.
*டெட் ஆசிரியர்களின் அடுக்கடுக்கான வழக்குகளில் வெற்றி மேல் வெற்றி:*
ஏற்கனவே வழக்கு தொடுத்து இரண்டு மாத காலத்திற்குள் பதவி உயர்வை வழங்க வேண்டும் என்ற தீர்ப்பின் அடிப்படையில் அவ்வாறே எமக்கும் வழங்க வேண்டும் என்று புதிது புதிதாக வழக்குகள் முளைத்துக் கொண்டே வந்தன. எல்லா வழக்குகளுக்கும் சாதகமான தீர்ப்புகளே வந்த வண்ணம் உள்ளன.
*மூத்த ஆசிரியர்களுக்குப் பணியனுபவத்திற்கு கருணை மதிப்பெண் வழங்க வேண்டும் என்ற வழக்கில் திருப்பம்* :
மேற்கண்டவாறு அடுக்கடுக்கான டெட் ஆசிரியர்களின் வழக்குகளின் வெற்றியால், 3 இலட்சம் மூத்த ஆசிரியர்களின் பதவி உயர்வு வாய்ப்பு கேள்விக்குறியாகிவிட்டது. வாழ்வாதாரமும் கேள்விக்குறியாகிவிட்டது. நடத்தப்பட்ட தேர்வில் தேர்ச்சி பெறுவோரின் எண்ணிக்கையும் மிகக் குறைந்த அளவே இருக்கும் என கணிக்கப்பட்டது. பெரும்பாலானோர் 60-75 மதிப்பெண்களில் தத்தளிப்பது தெரிய வந்தது.
எனவே, பணியில் இருப்போரும் புதிதாகப் பணி நியமனம் பெறுவோரும் ஒரே மாதிரியான தேர்வினை எழுதுவதென்பது பொருத்தமற்றது. பணியாற்றிக் கொண்டே தேர்வுக்குப் படிப்பது மிகவும் சவாலானது. வயது, உடல்நிலை, காலங்கடந்து தேர்வுகள் நடத்தப்பட்டமை எனப் பல்வேறு நிலைப்பாடுகளைக் கருத்தில் கொண்டு பணியனுபவத்திற்கு ஆண்டுக்கொரு மதிப்பெண் கருணை மதிப்பெண்களாக வழங்க வேண்டும் என சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு எண்: 26016/ 2026, பி.நடராஜன் மற்றும் 9 பேர் என்ற வழக்கு வழக்கறிஞர்கள் திரு. வேடியப்பன் மற்றும் திரு. கணேசன் ஆகியோர் மூலமாக தொடுக்கப்பட்டது. *உண்மையை அறிந்து கொண்ட நீதிமன்றம்* :
கருணை மதிப்பெண் வழங்க வேண்டும் என்ற வழக்கில்தான் இலட்சக் கணக்கான மூத்த ஆசிரியர்களுக்கு இப்போதுதான் முதல் வாய்ப்பு தேர்வெழுத வழங்கப்பட்டுள்ளது என்பதும், ஏற்கனவே மூத்த ஆசிரியர்கள் தமக்கு இரண்டு வாய்ப்புகள் வழங்கப்பட்ட பின்பே பதவி உயர்வு வழங்க வேண்டும் என்று நீதிமனறத்தை நாடியதும் நீதிமன்றத்திற்குத் தெரிய வந்தது.
வழக்கினை விசாரித்த நீதிமன்றம், வழக்கினை ஏற்று, கருணை மதிப்பெண்கள் கோருவது நியாயமானது என்றும், அரசு தரப்பு உரிய கொள்கை முடிவை மேற்கொண்டு தெரிவிக்க கால அவகாசத்தை வழங்கியும், அது வரை சிறப்பு தகுதித் தேர்வு முடிவுகளை வெளியிடுவதற்கு தாமாகவே முன் வந்து தடையாணையை வழங்கியும் உத்தரவிட்டது.
*டெட் ஆசிரியர்களுக்குப் பதவி உயர்வு வழங்க வேண்டும் என்ற தீர்ப்பினை எதிர்த்து மூத்த ஆசிரியர்களின் சார்பாக மேல்முறையீட்டு வழக்கு* :
தொடக்கக் கல்வி மற்றும் பள்ளிக் கல்வி ஆகிய இரண்டு துறைகளிலும் உள்ள எந்த ஆசிரியர் சங்கத் தலைமைகளும் மூத்த ஆசிரியர்களுக்கு ஏற்பட்டிருக்கும் அநீதிக்கு எதிராக ஒரு வழக்கைக் கூட நீதிமன்றத்தில் தாக்கல் செய்யவில்லை. நாளுக்கு நாள் டெட் ஆசிரியர்களின் கை நீதிமன்றத்தில் ஓங்கிய படியே இருக்கிறது. இந்நிலையில் மூத்த பட்டதாரி ஆசிரியர்களின் சார்பாக முதன் முதலாக வழக்கறிஞர் திரு.
இம்ரான் அவர்களின் மூலமாக மூத்த வழக்கறிஞர் திரு. அஜ்மல்கான் அவர்கள் வாதிடும் வகையில் சென்னை உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீட்டு வழக்கு எண்: சி.எம்.பி.20066/2026 ஏ.ராம்குமார் மற்றும் பத்து பேர் என்ற வழக்கு தொடுக்கப்பட்டு, கடந்த 31.07.2026 அன்று விசாரணைக்கு வந்து நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. இன்னும் முதன்மை வழக்கு நம்பர் ஆகவில்லை.
*கருணை மதிப்பெண் வழங்க முடியாது- தமிழக அரசு* :
நீதிமன்றத்தில் கருணை மதிப்பெண் வழங்குவது குறித்து முடிவெடுக்க உரிய கால அவகாசத்தை தமிழக அரசு கேட்டுப் பெற்றதனால், கட்டாடம் பணியனுபவத்திற்கு கருணை மதிப்பெண்கள் வழங்க வாய்ப்புள்ளது என்றே இலட்சக் கணக்கான ஆசிரியர்கள் நம்பிக்கையுடன் எதிர்பார்த்துக் காத்திருந்தனர்.
ஆனால், ஒரு மாதம் கழித்து, பணியனுபவத்திற்குக் கருணை மதிப்பெண்கள் வழங்குவதற்கு சட்டத்தில் இடமில்லை என்றும் மனுதாரர்களின் கோரிக்கை சட்டத்திற்கு முரணானது என்றும் , எனவே வழக்கைத் தள்ளுபடி செய்ய வேண்டும் என்றும் தமிழக அரசு சார்பில் நீதிமன்றத்தில் பதில் மனு தாக்கல் செய்யப்பட்டது, மூத்த ஆசிரியர்களுக்குப் பேரிடியாய் அமைந்துவிட்டது.
*அனைத்து தரப்பினருக்கும் பணியிலிருக்கும் ஆசிரியர்களுக்கான தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற குறைந்தபட்ச மதிப்பெண்கள் 60 என்று நிர்ணயிக்கக் கோரி வழக்கு* :
கருணை மதிப்பெண்கள் வழங்க வாய்ப்பில்லை. ஆனால் குறைந்த பட்ச மதிப்பெண்கள் நிர்ணயம் செய்வதில் சில உரிமைகள் சட்டத்தில் வழங்கப்பட்டுள்ளன.
2012ல் அனைவருக்கும் தேர்ச்சி பெற 90 மதிப்பெண்கள்
2014ல் ஓ.சி.பிரிவினருக்கு மட்டும் 90 மதிப்பெண்கள். மற்ற அனைத்து பிரிவினருக்கும் 82 மதிப்பெண்கள்.
2026ல் ஓ.சி.பிரிவினருக்கு 90 மதிப்பெண்கள். ஓ.பி.சி.பிரிவினருக்கு 75 மதிப்பெண்கள். எஸ்.சி,எஸ்.டி. மற்றும் மாற்றுத் திறனாளிகளுக்கு 60 மதிப்பெண்கள்.
2014ல் ஓ.சி.பிரிவினரைத் தவிர மற்ற அனைத்து பிரிவினருக்கும் ஒரே மதிப்பெண் அதாவது 82 என மாற்றம் செய்யப்பட்டது. அதைப் போன்றே 2026ல் ஓ.சி. பிரிவினரைத் தவிர மற்ற அனைத்து பிரிவினருக்கும் ஒரே மதிப்பெண் அதாவது 60 என நிர்ணயித்திருக்க வேண்டும். ஆனால் ஓ.பி.சி. என்ற பிரிவினரை மட்டும் தனியாகப் பிரித்து, அவர்கள் தேர்ச்சி பெற 75 மதிப்பெண்கள் என நிர்ணயிக்கப்பட்டது ஏன்?
மேலும் தகுதித் தேர்வு என்பது ஒரு கல்வித்தகுதிக்கானது. பத்தாம் வகுப்பு, பன்னிரண்டாம் வகுப்பு மற்றும் கல்லூரிப் படிப்புகளைப் போன்றது. அவற்றுக்கான தேர்வுகளில் தேர்ச்சி பெறக் குறைந்தபட்ச மதிப்பெண் அனைவருக்கும் சமமாக நிர்ணயிக்கப்பட்டு வருகிறது. அவ்வாறே பணியில் இருக்கும் ஆசிரியர்களுக்கும் சமமாக நிர்ணயிப்பது தானே சரியாகும்? பணியில் இருக்கும் ஆசிரியர்களுக்கு இன வாரியாக எந்த பதவி உயர்வும் வழங்கப்படுவதில்லை. அவ்வாறு இருக்கும்போது தகுதித் தேர்வில் ஏன் இன வாரியான மதிப்பெண்?
மேற்கண்டவாறான கருத்துக்களை உட்படுத்தி சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு எண்:36645/2026 என்ற வழக்கு ஆர்.முரளிதரன் மற்றும் 5 பேர் என்ற வழக்கு வழக்கறிஞர்கள் திரு. வேடியப்பன் மற்றும் திரு. கணேசன் ஆகியோர் மூலமாக சென்னை உயர்நீதிமன்றத்தில் தொடுக்கப்பட்டு நிலுவையில் உள்ளது.
*புற்றீசல்கள் போல் கொத்து கொத்தாய் வழக்குகளைப் போட்டுத் தள்ளும் டெட் ஆசிரியர்கள்:*
எப்படியாவது 01.01.2026 நிலவரப்படியான பட்டியலைக் கோர வைத்து இலட்சக் கணக்கான மூத்த ஆசிரியர்களைப் பின்னுக்குத் தள்ளி தாம் பதவி உயர்வினைப் பெற்றே ஆக வேண்டும் என்ற முனைப்பில் இது வரை சுமார் 60க்கும் மேற்பட்ட வழக்குகளை டெட் ஆசிரியர்கள் சென்னை உயர்நீதிமன்றத்தில் தொடுத்துக் கொண்டே வருகின்றனர். *டெட்ஆசிரியர்களின் தீர்ப்பின் மீது தமிழக அரசின் மேல்முறையீடு*:
டெட் ஆசிரியர்களுக்கு இரண்டு மாதங்களுக்குள் பதவி உயர்வு வழங்க வேண்டும் என்ற உத்தரவால் இலட்சக் கணக்கான மூத்த ஆசிரியர்களின் உரிமைகள் பறிக்கப்படுவதாகக் கருதி தமிழக அரசு மேல்முறையீடு செய்திருந்தது. வழக்கு எண்: 2733/2026 ஆகும். அவ்வழக்கு 18.09.2026 அன்று சென்னை உயர்நீதிமன்ற டிவிஷன் பெஞ்ச்சில் விசாரணைக்கு வந்தது. அரசு தரப்பில் சிறப்பு தகுதித் தேர்வு முடிவுகள் வெளியிட்ட பின்பு பதவி உயர்வுக்கான கலந்தாய்வினை நடத்த இருப்பதாகவும், முடிவுகள் வெளியிட நீதிமன்றத் தடை இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டது.
அவ்விளக்கத்தை நீதிமன்றம் ஏற்றுக் கொண்டதாகத் தெரியவில்லை. வருகின்ற 01.10.2026 அன்று வழக்கு மீண்டும் பட்டியலிடப்படுகிறது. அரசு தரப்பு மட்டுமே மேல்முறையீட்டு மனுவில் போராடிக் கொண்டு வருகிறது.
*உள்ளீட்டு (இம்ப்லீடு) மனுக்கள் மூலம் மூத்த வழக்கறிஞர்களை வழக்கில் உட்படுத்தி வாதிட்டால் மட்டுமே மூத்த ஆசிர்யர்களைக் காப்பாற்ற முடியும்* !
வரும் அக்டோபர் முதல் தேதிக்குள் அரசு தரப்பு மேல்முறையீட்டு மனுவிற்குள் எத்தனை மூத்த வழக்கறிஞர்களைக் கொண்டு உள்ளீட்டு மனுக்களைத் தாக்கல் செய்து வாதத்தை வைக்கிறோமோ, அதைப் பொறுத்துதான் மூத்த ஆசிரியர்களின் எதிர்காலமும், வாழ்வாதாரமும், உரிமையும் நிர்ணயிக்கப்பட இருக்கிற்து. எனவே, விரைந்து, மூத்த வழக்கறிஞர்களை அணுகி, இம்ப்லீடு பெட்டிசன் போட்டு அவரவர்களை அவர்வர்கள்தான் காப்பாற்றிக் கொள்ள வேண்டும்.
*98% க்கு மேற்பட்ட மூத்த ஆசிரியர்கள் அனைவரும் குறைந்தபட்சம் 20 ஆண்டுகளுக்கும் மேல் பணியாற்றிக்கொண்டிருப்பவர்களே! இத்தனை ஆண்டுகள் கழித்து ஒரு தேர்வைக் காரணம் காட்டி* -
- *ஆசிரியராய் இருப்பதற்கே தகுதியில்லை*
- *பதவி உயர்வு பெறத் தகுதியில்லை*
- *பத்தாண்டுகளுக்குப் பிறகு பணியில் சேர்ந்தோரின் ஆளுகைக்குக் கீழ் பணியாற்ற* *வேண்டும்*
-கட்டாய ஓய்வில் செல்ல வேண்டும்!
இதைவிட ஒரு தண்டனை இவ்வுலகில் எதுவும் இருக்க முடியாது. யாருக்கும் நிகழாது.
*மூத்த ஆசிரியர்களை டெட் ஆசிரியர்களிடமிருந்து காப்பாற்ற ஒரு வழக்கைக் கூட தொடுக்காத பேரன்புமிக்க பேரியக்க சங்கத் தலைகளே........*
*நீங்கள் ஏன் எங்களைப் பற்றிக் கவலை கொள்ளவில்லை என்பதை நாங்களும் புரிந்து கொண்டோம்! எப்படி தெரியுமா?*
*ஓய்வு பெற்ற உங்களுக்கு எங்களின் துன்பம் தெரிய வாய்ப்பில்லை* !
*55 வயதைக் கடந்த உங்களுக்கு தகுதித் தேர்வைப் பற்றிய கவலையில்லை* !
*பெரும்பாலான தலைகள் அதிகபட்சம் பதவி உயர்வான தலைமையாசிரியர்களாய் இருப்பதால் எங்களின் பதவி உயர்வைப் பற்றிய கவலை வர வாய்ப்பில்லை* !
*மூத்த ஆசிரியர்களுக்கு ஆதரவளித்தால் டெட் ஆசிரியர்களின் ஆதரவு போய்விடும் என்ற கவலையில் எப்படி எங்களைப் பற்றிய கவலை வரும்* ?
*உங்களுக்குத் தேவை சங்க உறுப்பினர்கள் மட்டுமே! சந்தா மட்டுமே! யாருடைய நலனும் கிடையாது! பேருந்து ஓனருக்கு பேசெஞ்சர்தான் முக்கியம். பழையவராய் இருந்தால் என்ன? புதியவராய் இருந்தால் என்ன?*
*20 ஆண்டுகளுக்கும் மேலாக சந்தாத் தொகை கொடுத்து, உங்களின் பின்னால் பயணித்த எங்களுக்கு இதுவும் வேண்டும்! இன்னமும் வேண்டும்!*

No comments:
Post a Comment
கல்விச்செய்தி நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.