கண்ணீர் விடும் கரும்பலகைகள்! ஆசிரியர் தின கொண்டாட்டங்களின் பின்னால் மறைந்திருக்கும் கொடூரம்! - ஆயிஷா இரா.நடராசன் அதிரடி!
ஆசிரியர் தின வாழ்த்துகளுக்குப் பின்னால் மறைந்திருக்கும் ஆசிரியர்களின் நிஜக் கண்ணீர், பணி நெருக்கடிகள், TET தேர்வுக் குளறுபடிகள் மற்றும் சமூக அவமானங்கள் குறித்து எழுத்தாளர் ஆயிஷா இரா.நடராசன் எழுதிய சிறப்புப் பார்வை.
கண்ணீர் விடும் கரும்பலகைகள்! - எழுத்தாளர் ஆயிஷா இரா.நடராசன் சிறப்புப் பதிவு
✍🏻 எழுதியவர்: ஆயிஷா இரா.நடராசன்
நன்றி: புக்டே (Book Day) தளம்
ஆசிரியர்களை அவமானப்படுத்தும் நாடு!
இன்னொரு ஆசிரியர் தினம் வந்துவிட்டது… ஆனால் இன்று ஒரு நாள் ஆசிரியர் தின வாழ்த்துக்களை விதவிதமாக செயற்கை நுண்ணறிவு முதற்கொண்டு பயன்படுத்தி நம்முடைய திறன்பேசிகளில் ஸ்டேட்டஸ் வைத்துவிட்டால் வேலை முடிந்ததா?
ஆசிரியர்களை மிக அதிகம் அவமானப்படுத்தும் நாடு என்கிற ஒரு தரப்பட்டியல் உலகில் வெளியிடப்பட்டால் கண்டிப்பாக முதலிடம் இந்தியாவிற்குத்தான் வழங்கப்படும்.. அதிலும் இந்தியாவில் தமிழ்நாட்டிற்கு முதல் ஐந்து இடங்களுக்குள் நம்மால் வழங்கிவிட முடியும். அத்தனை அவமானங்களை சுமந்து கொண்டுதான் நம்முடைய ஆசிரியர்கள் பணிக்குச் செல்கிறார்கள்..
ஏனைய அலுவலகங்கள் திறப்பதற்கு 2 மணி நேரம் முன்னதாக பள்ளிகள் திறக்கப்பட்டு விடுகின்றன.. அதிகாலையில் இருள் சூழ்ந்த சூழலில் கண் விழித்து எத்தகைய சமரசமும் இல்லாமல் தனக்கான உணவை சமைத்து எடுத்துக்கொண்டு பல மைல் கடந்து வேலைக்குப் போகும் ஒரு ஆசிரியர்.. 1 அல்லது 2 நிமிடம் தாமதமாக வந்தால்கூட.. சம்பளத்தை பிடித்துவிடும்.. பயோமெட்ரிக் இல்லாத பள்ளியே இல்லை..
- குழந்தை படிக்கவில்லையா.. ஆசிரியரே பொறுப்பு.
- மதிப்பெண் குறைந்து விட்டதா.. ஆசிரியரே பொறுப்பு.
- ஒழுக்கப் பிரச்சினை உள்ளதா.. ஆசிரியர் என்ன கிழிக்கிறார்?
- பெற்றோர்களின் புகார்களா.. ஆசிரியரிடம் விளக்கம் கேளுங்கள்.
- பள்ளியில் சாதி அடிப்படையில் வன்முறை.. ஆசிரியர்களை வரச் சொல்லி விசாரியுங்கள்.
- பேருந்தில் மாணவர்கள் படிக்கட்டில் ஆபத்தான பயணம்.. ஆசிரியர் என்னதான் செய்து கொண்டிருக்கிறார்?
- சத்துணவில் புழு.. தலைமை ஆசிரியரோடு பொறுப்பு ஆசிரியரையும் வரச் சொல்லுங்கள்.
- தேர்ச்சி விழுக்காடு குறைந்துவிட்டதா.. சென்னைக்கு வந்து விளக்கம் எழுதி கொடுக்க ஆசிரியரை அனுப்புங்கள்..
இப்படி அடுக்கிக் கொண்டே போகலாம்.. எங்கோ இங்கும் அங்குமாக நடக்கின்ற சிறு சம்பவங்களைக் காரணம் காட்டி அனைத்து ஆசிரியர்கள் மீதும் போக்சோ உட்பட அனைத்தையும் வைத்து ஒரு பெரிய மிரட்டலை மேற்கொள்ளும் சமூகத்தை என்ன செய்வது..
எத்தனை மாணவருக்கு ஒரு ஆசிரியர்? - புள்ளிவிவர மோசடிகள்:
நாட்டில் 2024-25 UDISE தரவுகளின் படி 1.01 கோடி ஆசிரியர்கள் உள்ளனர்.. ஆனால் 1,04,125 பள்ளிக்கூடங்கள் ஒற்றை ஆசிரியர் பள்ளிக்கூடங்களாக உள்ளன.. இவற்றில் சுமார் 34,00,000 மாணவர்கள் கல்வி கற்கிறார்கள்.. இதில் ஏறக்குறைய 4000 பள்ளிகள் தமிழ்நாட்டில் உள்ளன..
ஒரு ஆசிரியர் பள்ளிக்குச் செல்கிறார் - அங்கே அவர் தலைமை ஆசிரியராகவும் இருக்க வேண்டும், அலுவலக ஊழியராகவும் இருக்க வேண்டும், மணி அடிப்பவராகவும் இருக்க வேண்டும், கேட் கீப்பராகவும் இருக்க வேண்டும், பல பாடங்களை கற்பிக்க தெரிய வேண்டும், மாவட்ட அளவிலான அதிகாரிகள் கூட்டத்திலும் கலந்து கொள்ள வேண்டும்.. தினந்தோறும் மாணவர்களின் வருகைப் பதிவு அனுப்புவதில் இருந்து பள்ளிக்கு உரிய அனைத்து கோப்புகளையும் தயாரித்து எப்போது வேண்டுமானாலும் காட்ட வேண்டும். ஆனாலும், நாம் அவரிடம் கேட்கிறோம் - "ஏன் தரமான கல்வி இல்லை?"
தேசிய புதிய கல்விக் கொள்கை (NEP) படி மாணவர்-ஆசிரியர் விகிதாச்சாரம் (PTR) சரியாக இருப்பதாக மத்திய அரசு சொல்வது மிகப்பெரிய புள்ளிவிவர மோசடி. அதில் தனியார் பள்ளிகளையும் சேர்த்து கணக்கிட்டு வெளியிடுகிறார்கள்.
தமிழ்நாட்டின் நிலவரப்படி மட்டுமே புதிய ஆசிரியர் பணியிடங்கள் 1,14,248 என்று சென்ற ஆண்டு மட்டுமே அனுமதிக்கப்பட்டன. அதில் இன்னும் நாம் ஏறக்குறைய 40,000 பணியிடங்களை நிரப்பாமலேயே வைத்திருக்கிறோம். 1,214 பள்ளிகளில் தமிழ்நாட்டில் தலைமை ஆசிரியர் இல்லை.. ஃபிரண்ட்லைன் பத்திரிகையின் கூற்றுப்படி தமிழக அளவில் ஒரு ஆசிரியர் சராசரியாக மூன்று ஆசிரியர்களின் பணிகளை தோளில் சுமந்து உழைத்துக் கொண்டிருக்கிறார் என்பதே உண்மை!
ஒரு ஆசிரியரின் தசாவதாரம்!
கற்பிக்கும் நேரத்தை விட்டு விட்டு.. மக்கள் தொகை கணக்கெடுப்பு, தேர்தல் பணி (BLO), சுகாதார கணக்கெடுப்பு, வாக்காளர் பட்டியல், ஆவண பணிகள், ஆன்லைன் பதிவு.. என அரசாங்கம் வழங்கும் எல்லாவிதமான பணிகளுக்கும் ஆசிரியர்கள் பயன்படுத்தப்படுகிறார்கள்.
தேர்தல் பணியான BLO பணி கொடுத்த கடுமையான மன அழுத்தம் காரணமாக பூத் உள்ளேயே ஆசிரியர்கள் இறந்து போனார்களே, இதையெல்லாம் எந்த கணக்கில் வைத்துள்ளார்கள்? 2024 'தி வீக்' பத்திரிகையின் கூற்றுப்படி மாதத்திற்கு சராசரியாக இந்தியாவில் மட்டுமே 9 ஆசிரியர்கள் பணியில் இருக்கும் பொழுதே மன அழுத்தம் தாங்காமல் இருதய நோயால் பாதிக்கப்பட்டு இறந்து போகிறார்கள்!
ஆசிரியர்களின் குரலை கேட்காத கல்வி அமைப்பு:
இந்த கல்வி அமைப்பிடம் ஆசிரியர் கேள்வி கேட்டால் அவருடைய கோரிக்கையை போராட்டமாக திணிக்கிறார்கள். தமிழ்நாட்டில் சமவேலைக்கு சம ஊதியம் கோரி இடைநிலை ஆசிரியர்கள் நடத்திய போராட்டத்தில் ஆயிரக்கணக்கான ஆசிரியர்கள் தடுப்புக் காவலில் வைக்கப்பட்டார்கள். ஆசிரியர் பிரதிநிதிகள் சிறையில் அடைக்கப்பட்டார்கள்.
இடைநிலை ஆசிரியர்களின் நிலையை எடுத்துக்கொண்டால் ஒரே வகை குழந்தைகளுக்கு பாடம் நடத்துகிறார்கள், ஒரே பள்ளியில் வேலை பார்க்கிறார்கள், ஒரே தகுதித் தேர்வுகளை கடந்து வந்திருக்கிறார்கள்.. ஆனால் ஒருவருக்கு குறைந்தபட்ச ஊதியம் பன்னிரெண்டாயிரம் என்றும் இன்னொருவருக்கு வெறும் 5000 என்றும் வழங்கப்படுவதை எப்படி ஏற்க முடியும்?
தேர்வு கலாச்சாரத்தில் சிக்கித் தவிக்கும் ஆசிரியர்கள்:
TET, NET போன்ற தேர்வுகளின் பெயரால் ஆசிரியர்களை எப்போதும் பதற்றத்திலேயே வைத்திருக்கும் கொடூர மனம் வேலை செய்கிறது. TET தேர்வில் தாள் இரண்டில் உள்ள 150 கேள்விகளில் சுமார் 145 கேள்விகளுக்கு தவறான விடை குறிப்புகள் வெளியிடப்பட்டு புகாரளிக்கப்படுகிறது என்றால் இந்த லட்சணத்தை என்னவென்பது?
15 - 20 ஆண்டுகள் வரை வகுப்பறையில் சிறப்பாக கற்பித்து ஓய்வு பெறும் வயதை நெருங்கிக் கொண்டிருக்கும் மூத்த ஆசிரியர்கள் பலர் மீண்டும் தகுதித் தேர்வு எழுத வேண்டும் என்று உச்ச நீதிமன்ற தீர்ப்பைச் சுட்டிக்காட்டி வற்புறுத்துவது எவ்வளவு கொடூரமானது!
தனியார் பள்ளி எனும் கண்ணீர் தேசம் & பகுதிநேர ஆசிரியர்கள்:
தனியார் பள்ளி ஆசிரியர்களுக்கான குறைந்தபட்ச ஊதியம் என்ன என்பதை அரசு அறிவிக்கவே இல்லை. ரூ.2000 முதல் ரூ.5000 பெற்றுக்கொண்டு பல மணி நேரம் வேலை பார்க்கும் அவலம் தொடர்கிறது. அதேபோல அரசுப் பள்ளிகளில் பணிபுரியும் பகுதிநேர ஆசிரியர்களின் பணி நிரந்தரக் கோரிக்கையும் தொடர்ந்து முடக்கப்பட்டு வருகிறது.
வக்கத்தவனுக்கு வாத்தியார் வேலை?
ASER 2023 தரவுகளின்படி கிராமப்புற இளைஞர்களில் வெறும் 3% பேர் மட்டுமே ஆசிரியர் பணி கிடைத்தால் செல்வேன் என்று சொல்லியிருக்கிறார்கள். செவிலியர் பணிக்கும் கீழே ஆசிரியர் பணி தள்ளப்பட்டுள்ளது என்பதுதான் கசப்பான உண்மை.
ஆசிரியரை மதிக்காத, ஆசிரியர்கள் பணியை மரியாதைக்குரிய ஒன்றாக நடைமுறைப்படுத்தாத ஒரு சமூகம் ஆசிரியர் தினத்தன்று மட்டும் வெற்று வார்த்தை ஜாலங்களால் அதன் புனிதத்தன்மையை போற்றுகிறது.
"கண்ணீர் விடும் கரும்பலகைகள்.. கண்ணியம் காக்கும் கரும்பலகைகளாக அரசால் சமூகத்தால் உயர்த்தப்பட்டால்.. அப்போதுதான் நம்முடைய ஆசிரியர் தினம் உண்மை அர்த்தத்தைப் பெறும்!"

No comments:
Post a Comment
கல்விச்செய்தி நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.