TRB தலைவருக்கு அனுப்பப்பட்ட மனு விவரம்

இதுகுறித்து ஆசிரியர் தேர்வு வாரியத்தின் (TRB) தலைவருக்கு, தமிழ்நாடு பட்டதாரி ஆசிரியர் கூட்டமைப்பின் பொதுச் செயலாளர் பி.பேட்ரிக் ரெய்மண்ட் அனுப்பியுள்ள மனுவில் தெரிவித்துள்ளதாவது:

பணியில் உள்ள ஆசிரியர்களுக்கான டெட் (TNTET) தேர்வு கடந்த ஜூலை 4 மற்றும் 5-ஆம் தேதிகளில் நடைபெற்றது. இத்தேர்வுகளுக்குப் பின்னர் தாள் 1 மற்றும் தாள் 2 ஆகியவற்றுக்கான உத்தேச விடைக்குறிப்புகள் (Tentative Answer Key) வெளியிடப்பட்டு, தேர்வர்கள் தங்கள் ஆட்சேபனைகளை ஆதாரங்களுடன் தெரிவிக்கும் வாய்ப்பை TRB வழங்கியிருந்தது.

பாடநிபுணர்கள் மற்றும் மொழியியல் ஆய்வு அவசியம்

தேர்வர்கள், பாட ஆசிரியர்கள் மற்றும் கல்வியாளர்கள் தங்களது பாட அறிவு மற்றும் அரசிடமிருந்து அங்கீகரிக்கப்பட்ட பாடநூல் ஆதாரங்களின் அடிப்படையில் சில வினாக்கள் மற்றும் உத்தேச விடைகள் தொடர்பான கல்விசார் கருத்துகளை முன்வைத்துள்ளனர்.

தேர்வர்கள் சமர்ப்பித்துள்ள அனைத்து ஆட்சேபனைகளையும் பாடவாரியாகத் தொகுத்து, பாடநிபுணர்கள், ஆசிரியர் கல்வியாளர்கள், மொழி வல்லுநர்கள் மற்றும் அனுபவமிக்க ஆசிரியர்களின் ஆலோசனைகளைப் பெற்று இறுதி விடைக்குறிப்பை உறுதிப்படுத்த வேண்டும்.

இருமொழி வினாக்கள் ஒப்பீடு & ஆதாரங்கள் வெளியீடு

தமிழ் மற்றும் ஆங்கில வடிவில் அமைந்த வினாக்களை ஒப்பிட்டு, இரு மொழிகளிலும் இடம்பெற்றுள்ள கருத்துகளை கல்விசார் அடிப்படையில் ஆய்வு செய்ய வேண்டும். மேலும், ஒரு வினாவுக்கு ஒன்றுக்கும் மேற்பட்ட விடைகள் பொருந்தும் வகையில் ஆதாரங்கள் சமர்ப்பிக்கப்பட்டிருந்தால், அவற்றை நேர்மையாகப் பரிசீலித்து பொருத்தமான முடிவை மேற்கொள்ள வேண்டும்.

இறுதி விடைக்குறிப்புடன் (Final Answer Key) தேவையான இடங்களில் தொடர்புடைய பாடநூல் அல்லது கல்விசார் ஆதார விவரங்களையும் சேர்த்து வெளியிடுவது தேர்வர்களுக்கு கூடுதல் தெளிவையும் நம்பிக்கையும் ஏற்படுத்தும். எனவே, தேர்வர்களின் கருத்துகளை பரிசீலிப்பதற்கு நிபுணர் குழுவுக்கு போதுமான கால அவகாசம் வழங்க வேண்டும் என அந்த மனுவில் வலியுறுத்தப்பட்டுள்ளது.