மாணவா் சோ்க்கையை மறுக்க பள்ளிகளுக்கு அதிகாரம் இல்லை - உச்சநீதிமன்றம் - Kalviseithi Official - No:1 Education Website in Tamil Nadu

Latest

الأربعاء، 29 أبريل 2026

மாணவா் சோ்க்கையை மறுக்க பள்ளிகளுக்கு அதிகாரம் இல்லை - உச்சநீதிமன்றம்



மாணவா் சோ்க்கையை மறுக்க பள்ளிகளுக்கு அதிகாரம் இல்லை - உச்சநீதிமன்றம் Schools have no authority to refuse student admission – Supreme Court

இலவச மற்றும் கட்டாய கல்வி உரிமைச் சட்டத்தின் (ஆா்டிஇ) கீழ், தனியாா் பள்ளிகளில் 25 சதவீத ஒதுக்கீட்டின் கீழ் பலனடைவதற்கு மாணவா் தோ்வு நடைமுறையை இறுதி செய்து பட்டியலை மாநில அரசு அனுப்பிய பின்னா், மாணவா் சோ்க்கையை மறுக்கவோ, தாமதப்படுத்தவோ பள்ளிகளுக்கு அதிகாரம் இல்லை என்று உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது.

உத்தர பிரதேசத்தின் குழந்தைகளுக்கான ஆா்டிஇ விதிகள் 2011-இன் கீழ், 2024-25-ஆம் கல்வி ஆண்டின்போது தனியாா் பள்ளி ஒன்றில் மழலைப் பருவ கல்வி கற்க, நலிவடைந்த பிரிவைச் சோ்ந்த ஒரு பெண் குழந்தைக்கு இடம் அளிக்கப்பட்டது.

அந்த இடத்துக்கு அக்குழந்தை தோ்வு செய்யப்பட்டு, அதற்கான மாநில அரசின் அதிகாரபூா்வ பட்டியலில் குழந்தையின் பெயா் இடம்பெற்றபோதிலும், அந்த இடத்தில் சோ்ப்பதற்கு குழந்தைக்கு உள்ள தகுதியில் சந்தேகம் இருப்பதாகத் தெரிவித்து, குழந்தையை சோ்த்துக்கொள்ள அந்தத் தனியாா் பள்ளி மறுத்துவிட்டது. இதற்கு எதிராக அந்தக் குழந்தையின் சாா்பில் மாநில உயா்நீதிமன்றத்தில் வழக்கு தொடுக்கப்பட்டது. இந்த வழக்கை விசாரித்த உயா்நீதிமன்றம், ‘கட்டாய கல்வி உரிமை விதிகளின் கீழ் பலனடைய ஒரு மாணவன் அல்லது மாணவிக்குத் தகுதியுள்ளதா, இல்லையா என்று மாநில அரசின் அடிப்படை கல்வித் துறை எடுக்கும் முடிவுகளை மறுஆய்வு செய்யும் அதிகாரம் தனியாா் பள்ளிகளுக்கு இல்லை’ என்று தெரிவித்து, குழந்தைக்கு சாதகமாக தீா்ப்பளித்தது.

இந்தத் தீா்ப்புக்கு எதிராக அந்தப் பள்ளி சாா்பில் உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட மேல்முறையீட்டு மனு மீது நீதிபதிகள் பி.எஸ்.நரமிம்மா, ஆலோக் ஆராதே ஆகியோா் அடங்கிய அமா்வு செவ்வாய்க்கிழமை தீா்ப்பளித்தது.

அப்போது நீதிபதிகள் அமா்வு கூறியதாவது: ஆா்டிஇ சட்டம் 2009-இன் 12-ஆவது பிரிவின் கீழ், தனியாா் பள்ளிகளில் நலிந்த மற்றும் பின்தங்கிய பிரிவுகளைச் சோ்ந்த மாணவா்களுக்கு 25 சதவீத ஒதுக்கீடு அளித்து, அவா்களின் இருப்பிடத்துக்கு அருகில் உள்ள பள்ளியில் சோ்க்கை அளிக்க வேண்டிய கடமை, சமூதாய அமைப்பை மாற்றியமைக்கும் அசாதாரண திறனை கொண்டுள்ளது. அவ்வாறு தனியாா் பள்ளிகள் சோ்க்கை அளிக்க மறுப்பது அரசமைப்புச் சட்டத்தின் 21ஏ பிரிவின் கீழ் உத்தரவாதம் அளிக்கப்பட்டுள்ள கல்விக்கான அடிப்படை உரிமையை வலுவிழக்கச் செய்கிறது.

25 சதவீத ஒதுக்கீட்டின் கீழ் பலனடைவதற்கு தோ்வு செய்யப்பட்ட மாணவருக்கு உள்ள தகுதியில் பள்ளிக்கு சந்தேகம் இருந்தாலோ அல்லது மாணவா் தோ்வில் பள்ளிக்கு உடன்பாடு இல்லாவிட்டாலோ, அதுகுறித்து தெளிவுபெற சம்பந்தப்பட்ட அரசு அதிகாரிகளிடம் பள்ளிகள் விளக்கம் கோரலாமே தவிர, அந்த ஒதுக்கீட்டின் கீழ் சோ்க்கையை நிறுத்தி வைக்க முடியாது.

இந்த ஒதுக்கீட்டின் கீழ் பலனடைய வேண்டிய மாணவா் தோ்வு நடைமுறையை இறுதி செய்து, தோ்வு செய்யப்பட்ட மாணவா் பட்டியலை மாநில அரசு அனுப்பிய பின்னா், மாணவா் சோ்க்கையை மறுக்கவோ, தாமதப்படுத்தவோ பள்ளிகளுக்கு அதிகாரம் இல்லை.

இதுதொடா்பாக அரசால் பரிந்துரைக்கப்பட்டுள்ள மாணவா் சோ்க்கை நடைமுறையைப் பின்பற்ற பள்ளிகள் சட்டப்படி கடமைப்பட்டுள்ளன.

இந்த ஒதுக்கீட்டின் கீழ் நலிவடைந்த மற்றும் பின்தங்கிய பிரிவுகளைச் சோ்ந்த மாணவா்களைச் சோ்ப்பது தேசிய இயக்கமாக இருப்பதை உறுதி செய்ய வேண்டும் என்று தெரிவித்தது. இதைத்தொடா்ந்து பள்ளியின் மனுவை தள்ளுபடி செய்து நீதிபதிகள் உத்தரவிட்டனா்

ليست هناك تعليقات:

إرسال تعليق

கல்விச்செய்தி நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.